பயங்கரவாதம் எனும் சொல்லை அழித்து சுபீட்சம் என்பதை இலங்கை மக்களின் வாழ்க்கையில் உச்சரிக்க செய்த பெருமை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையே சாரும்.புலிப் பயங்கரவாதத்தை அழித்து மக்களை நிம்மதி பெரு மூச்சு விட அரும் பாடுபட்டவர் மகிந்த ராஜபக்ஷ என்பதை யாராலும் மறுக்கவோ,மறைக்கவோ முடியாது.
வெடிச் சத்தங்களுக்கும்,உயிர் இழப்புகளும் மலிந்திருந்த நாட்டை அமைதிக் கடல் ஆக்கி இருபத்துநான்கு மணித்தியாலங்களும் நாட்டில் எந்த பாகத்திற்கும் சென்று வர வழி சமைத்துக் கொடுத்த உலகமே போற்றும் இலங்கை நாட்டின் ஜனாதிபதியாக திகழ்ந்தவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ என கூறினால் அது மிகையாகாது.
மகிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதி தேர்தலில் திட்டம் தீட்டப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்.சிறந்த ஆளுமை,தலைமைத்துவம் என்பனவற்றை கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இனவாதியாக முஸ்லிம்,தமிழ் மக்களிக்கிடையே கடந்த ஜனாதிபதி தேர்தலில் சித்தரிக்கப்பட்டிருந்தார்.இதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தவர்கள் அவரின் பக்கத்தில் இருந்த சில பேரினவாத அரசியல்வாதிகளே.நண்பர்களை போல் பாசாங்கு செய்து பெரிய துரோக்கத்தை செய்து விட்டு இன்றைய நல்லாட்சியிலும் தங்களது அமைச்சுப் பதவிகளை பாதுகாக்கின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை முஸ்லிம்கள் மத்தியில் இனவாதியாக காட்ட இவர்கள் பயன்படுத்திய துருப்புச் சீட்டே பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரா தேரராகும்.நோர்வே அரசாங்கத்தின் அனுசரனையுடன் ஞானசாரவை வைத்து மகிந்தவுக்கான குழிபறிப்பு நாடகங்களை அன்று அரங்கேற்றி இருந்தனர்.இதற்கு நோர்வே அரசாங்கத்திடம் இருந்து பலகோடி ரூபாய் பணம் பரிமாற்றப்பட்டிருந்தன.
பொதுபலசேனாவை உருவாக்கி அவர்களை சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக தூண்டிவிட்டு அதன் மூலம் சிறுபான்மை மக்கள் மத்தியில் மகிந்தவை இனவாதியாக எடுத்துக்காட்டினார்கள்.அதன் அடிப்படையிலேயே முஸ்லிம்களுக்கு எதிராக ஹலால்,பள்ளிவாசல் உடைப்பு,கலாச்சார ஆடைகள் அணிதலுக்கு எதிரான எதிர்ப்புகள் என்பன அரங்கேற்றப்பட்டது.முஸ்லிம் மக்கள் மத்தியில் அந்த காலகட்டத்தில் அரசாங்கத்துடன் இருந்த இரண்டு முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் இந்த செயற்பாடுகளுக்கான சூத்திரதாரிகள் யார் என்பதை சரியான முறையில் எடுத்துக் கூறவில்லை.அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டது மகிந்தவுக்கு செய்த மறக்க முடியாத துரோகமாகும்.
இலங்கை ஜம்மியத்துல் உலமாவோடு சுமூகமான உறவை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொண்டிருந்தார்.ஹலால் பிரச்சினை ஏற்பட்ட போது சுமூகமான தீர்வை வழங்கி ஹலால் சின்னம் பொறிக்கப்படுவதற்கான அனுமதியையும் வழங்கி இருந்தார்.மகிந்தவின் ஆட்சிக் காலத்திலேயே அதிகமான பள்ளிவாசல் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது.அதற்கான அனுமதியையும் வழங்கி இருந்தார்.மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் கூறப்பட்ட தொழுகைக்கான அதான் கூற அனுமதி வழங்கமாட்டார் என்ற குற்றச்சாட்டை முறியடிக்க ஐந்து வேளைக்கும் வானொலி மூலம் தொழுகைக்கான அதான் சொல்லும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்திருந்தார்.
மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் எழுந்த மிகப் பாரிய குற்றச் சாட்டே தர்ஹா நகரில் ஏற்பட்ட கலவரம்.இந்த கலவரத்தை தூண்டிய ஞானசாரா தேரர் சில அமைச்சர்களின் பின்னூட்டலிலே இயங்கி இருந்தார் என்பது அன்றைய காலகட்டங்களில் மறைக்கப்பட்டிருந்தது.நல்லாட்சி காலம் வந்து இரண்டு வருடங்களையும் தாண்டியும் தர்கா நகர் பிரச்சினைகளுக்கான சூத்திரதாரியை இதுவரை கைது செய்யவில்லை.ஏன் கைது செய்யாமல் இருக்கிறார்கள்?சரி அவர்கள் கூறுவதை போன்று மகிந்தவாக இருந்திருந்தால் ஏன் இன்னும் அவரை கைது செய்யவில்லை?
உண்மையில் தர்கா நகரில் ஏற்பட்ட கலவரத்தின் சூத்திரதாரிகள் தற்போதைய ஆட்சியில் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மையாகும்.ஞானசாரா தேரர் இனவாத விஷத்தை கக்கும் போது அதனை தட்டிக் கேட்க மகிந்த துணிந்த போதும் நல்லாட்சியில் இருக்கும் சில அமைச்சர்களே முட்டுக்கட்டையாக இருந்திருக்கின்றனர்.ஞானசாரா தேரர் ஒரு நாளும் மகிந்தவை புகழ்ந்து பேசியதில்லை.மகிந்தவை முஸ்லிம்களின் தலைவர் என்றே குற்றம் சாட்டி பேசி இருக்கிறார்.அவ்வாறாயின் மகிந்த ஏன் சிறுபான்மை சமூத்திற்கு இனவாதியாக காட்டப்பட்டர் என்ற வினா எம்முள்ளே எழும்.அதற்கான முக்கிய காரணம் சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகளை மகிந்தவிற்கு எதிராக திசை திருப்புவதாகும்.
மகிந்த இனவாதி அல்ல அவரை சில பேரினவாத அரசியல்வாதிகளும்,முஸ்லிம் அரசியல்வாதிகளும் இனவாதியாக சித்தரித்து சமூகத்திற்கு பொய் பிரச்சாரம் செய்தனர் என்பதே உண்மையாகும்.அமைச்சுப் பதவிகளை அனுபவித்து விட்டு இறுதியில் மகிந்தவிற்கு துரோகமும் செய்து முஸ்லிம் சமூகத்திற்கே அவப் பெயரை ஏற்படுத்தி விட்டனர்.
மகிந்தவின் ஆளுமை கொண்ட அரசியல் இந்தநாட்டிற்கு தேவை என்பதை மக்கள் உணர்ந்துவிட்டனர்.நல்லாட்சி மீதான நன்மதிப்பு இல்லாமல் சென்று விட்டது.மீண்டும் மகிந்தவை இந்தநாடு எதிர்பார்க்கிறது.