எமக்கான நிதிகள் வழங்கப்படாமையினால் மக்கள் எம்மை குறை கூறும் நிலைமை - கிழக்கு முதல்வர்

மது மக்கள் டெங்குவினால் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கான திட்டங்களை நாம் வகுத்தாலும் மத்தியரசின் நிதிக்காக காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை மாகாண சபைக்கு ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

கிண்ணியாவில் டெங்கு நோய்த்தாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்தியசாலை கட்டில்களை வாங்க நாம் மத்தியரசாங்கத்திடம் ஆயிரம் பத்திரங்களை வழங்கி பக்கம் பக்கமாக விளக்கம் கூறி நிதி கோர வேண்டிய நிலையே இன்றும் எமக்கு ஏற்பட்டுள்ளது.

எமக்கான நிதிகள் வழங்கப்படாமையினால் மக்கள் இன்று எம்மை குறை கூறும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.

கோரளைப்பற்று பிரதேச சபைக்கு ஒப்பந்த அடிப்படையிலான பொதுப்பணியாளர்களுக்கான நியமனங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் குறிப்பிட்டார்.

மாகாண சுகாதாரத்துறைக்கு 98 வீதமான அதிகாரங்கள் யாப்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ள போதும் அவை இன்று வெறும் எழுத்துக்களில் மாத்திரமே உள்ளதுடன் மாகாண சுகாதார அமைச்சுக்கு 10 வீதமான நிதியொதுக்கீடே வழங்கப்பட்டுள்ளது,அந்த நிதிக்கு நாம் இழவு காத்த கிளி போல காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது ,

தேசிய மற்றும் போதனா வைத்தியசாலைகளைத் தவிர மற்றைய எல்லா வைத்தியசாலைகளும் மாகாண சபைகளின் கீழேயே இருந்தாலும் அவற்றுக்கான திட்டங்கள்,அவற்றில் எதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பதையெல்லாம் கொழும்பிலிருந்தே தீர்மானிக்கின்றார்கள்,

ஆனால் இங்குள்ள வைத்தியசாலைகளில் உள்ள உண்மையான ஆளணிப் பற்றாக்குறை ,தளபாடப் பற்றாக்குறை மற்றும் குறைபாடுகள் தொடர்பான அனைத்து தகவல்களும் மாகாண சபைகளிடமே காணப்படுகின்றன,அவ்வாறு இருக்க எதை மையப்படுத்தி தேசிய அரசாங்கம் நிதிகளை ஒதுக்குகின்றது என கேட்க விரும்புகின்றேன்,

இத்தனை கரடு முரடான பாதையிலும் மக்களுக்கு ஏதுவான திட்டங்களை முன்னெடுத்து பல்வேறு அபிவிருத்திகளையும் முன்னெடுத்து மாகாண சபையாகிய நாம் முன்னோக்கிச் செல்கின்றோமென்றால் அதற்கு ஒரே காரணம் எல்லாம் வல்ல இறைவனின் துணையும் எமது இராஜதந்திர நகர்வுகளே காரணம் என்பதை நாம் சொல்லியாக வேண்டும்.

கடந்த வேலையற்ற பட்டதாரிகள் குறித்து பிரதமரின் ஆலோசகருடன் பேசும் போது இங்கு தற்காலிக நியமனங்களில் பணிபுரிபவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என்பதையும் நான் வலியுறுத்தியிருந்தேன்

அதுமாத்திரமன்றி நாளை 104 விஞ்ஞானத் துறைசார் ஆசிரியர்ககளுக்கு நியமனங்களை வழங்கவுள்ளோம்,

இன்று பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கல்வி கற்று இன்று வேலைவாய்ப்புக்காக போராடிக் கொண்டிருக்கும் எமது பிள்ளைகளுக்கும் நியமனங்களை பெற்றும் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றோம்,இந்த முயற்சி எல்லாம் இலகுவில் வார்த்தைகளால் முன்னெடுக்கப்பட்டவையல்ல, பல விவாதங்கள், போராட்டங்கள், பல கடிதங்கள் என்று பல தடைக்கற்களைத் தாண்டி முன்னெடுக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்,

இதன் போது ஒப்பந்த அடிப்படையிலான பொதுப்பணியாளர்கள் 68 பேருக்கான நியமனங்கள் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் வழங்கி வைக்கப்பட்டன, இதில் தமிழ்,சிங்கள முஸ்லிம் என அனைத்து தரப்பினருக்குமான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரன்,ஷிப்லி பாறூக் உட்பட கோரளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எம் எஸ் ஷிஹாப்தீன் மற்றும் வீடமைப்பு அதிகார சபையின் தலைவரும் முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளரான கேபிஎஸ் ஹமீட்டும் கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -