ஐ.ஏ.காதிர் கான்-
வெளிப் பிரதேசங்களில் சேரும் குப்பைகளைக் கொண்டுவந்து, கொலன்னாவையில் கொட்ட இடமளிக்க வேண்டாம். இந் நடவடிக்கையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்றிலிருந்து செயற்படுத்த வேண்டும். அத்துடன், அவ்வாறு கொட்டுவோர்களுக்கு எதிராக வழக்குத் தொடருமாறும், இது தொடர்பில் தனக்கு விரிவான அறிக்கையொன்றை கூடிய விரைவில் சமர்ப்பிக்குமாறும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா, கொலன்னாவை நகர சபை ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்தார்.
அமைச்சின் கேட்போர் கூடத்தில் ( 14 ) செவ்வாய்க்கிழமை மாலை விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில், கொழும்பு மா நகர சபை, தெஹிவளை - கல்கிசை மா நகர சபை, கொலன்னாவை நகர சபை ஆகியவற்றின் ஆணையாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் சுகாதாரப் பணிமனை அதிகாரிகள், ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர். திண்மக் கழிவுகள் தொடர்பிலான பல்வேறு ஆலோசணைகளையும் இவர்கள் அமைச்சரிடம் முன்வைத்தனர்.
இங்கு இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது குறிப்பிட்டதாவது ;
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், வெளியிடங்களிலுள்ள குப்பைக் கூளங்கள், இன்று முதல் கொலன்னாவையில் கொட்டப்படுவது நிறுத்தப்படல் வேண்டும். இது தொடர்பில் அவதானம் எடுத்துச் செயற்படுமாறு, கொலன்னாவை நகர சபை ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பிக்கின்றேன். இது தவிர, இன்று சிலர் வாய்க் கால்களுக்கு மேலால் கொங்கிறீட் தட்டுக்களை இட்டுக் கொண்டு, அதற்கு மேலால் சட்ட விரோதக் கட்டிடங்களைக் கட்டியுள்ளனர். வீடுகள், கடைகள் என்பவற்றை அமைத்துள்ளதால், இவ்விவகாரமும் இன்று பாரிய பிரச்சினையாகத் தோன்றியுள்ளது. இது தொடர்பில் கவனம் எடுத்துச் செயற்படுமாறும், கொழும்பு, தெஹிவளை, கொலன்னாவை நகரங்களை நிர்வகிக்கும் ஆணையாளர்களைக் கண்டிப்பாகக் கேட்டுக் கொள்கின்றேன். இது குறித்த நடவடிக்கைகளை இரண்டு வாரங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும். இவர்கள் சம்பந்தமாகவும் விழிப்புடன் இருந்து செயற்படவேண்டும். இரு வாரங்களுக்குள் இவர்களிடமிருந்து சரியான பதில் கிடைக்காவிட்டால், இவர்கள் தொடர்பில் வழக்குத் தொடருமாறும், சகல ஆணையாளர்களையும் திடமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர், இவைகள் சம்பந்தமாக எனக்கு பூரண அதிகாரங்களை வழங்கியுள்ளனர். இது குறித்த அறிக்கைகளை, அமைச்சரவைக்கு சமர்ப்பிக்குமாறும் என்னைப் பணித்துள்ளனர். எனவேதான், இந்த விவகாரங்கள் தொடர்பில் அதிகாரிகள் எவரும் அசிரத்தையாக இருந்துவிடக்கூடாது. அவசியம் எனக்கருதி, அவசரமாக செயலில் இறங்கவேண்டும். குப்பைக் கூளங்கள் கொட்டப்படும் இடங்களில், பொது மக்களை விழிப்பூட்டும் அறிவித்தல்களையும் விளம்பரப்படுத்த வேண்டும். குறிப்பாக, " குப்பை கொட்டினால் வழக்குத் தொடரப்படும் ", " குப்பை கொட்டினால் தண்டனை " போன்ற வாசகங்கள் ஊடாக பொது மக்களை விழிப்படையச் செய்யவேண்டும்.
இதற்கும் மேலதிகமாக, துண்டுப் பிரசுரங்களையும் தெளிவாக அச்சிட்டு மக்கள் மத்தியில் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளையும் விரிவான முறையில் செய்யமுடியும். இதன்காரணமாக, கொழும்புப் பிரதேசத்தை டெங்கு தொற்றுத் தாக்கத்திலிருந்து இதன்பிறகிலிருந்தாவது காப்பாற்றிக் கொள்ள முடியும். எல்லாவற்றிட்கும் மேலாக, இந்த விவகாரம் தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் என்ற வகையில், பொது மக்களைப் பாதுகாப்பதே தனது கடமையாக இருப்பதுடன், பிரதான நோக்கமும் இதுவாகும் என்றும், அமைச்சர் இக் கலந்துரையாடலின்போது அதிகாரிகள் மத்தியில் தெளிவுபடுத்தினார்.