காரைதீவு நிருபர் சகா-
இலங்கை கல்வியயலாளர் சேவை தரம் 2-1க்கு பதவியுயர்வு வழங்க்கட்டோர் பட்டியலில் ஆக 41சிங்கள உத்தியோகத்தர்களின் பெயர்கள் மட்டுமே கல்வியமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் எந்தவொரு தமிழ்மொழி பேசுவோரின் பெயர் இணைக்கப்பட்டிருக்கவில்லை. இது ஒரு அநீதி புறக்கணிப்பு என இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கம் ஆட்சேபம் தெரிவிக்கின்றது.
சங்கத்தின் தலைவர் வி.ரி.சகாதேவராஜா தெரிவிக்கையில்:
பாதிக்கப்பட்ட பிரஸ்தாப கல்விக்கல்லூரி விரிவுரையாளர்கள் சங்கத்திடம் முறையிட்டுள்ளனர். இ.க.சேவை தரம் 2-2 இலிருந்து 2-1 க்கு பதவியுயர்வ வழங்குவதற்கான விண்ணப்பம் 2015இல் கோரப்பட்டது. இதனடிப்படையில் பின்னர் நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டது. ஆனால் பெறுபேற்றில் சிங்கள மொழிமூலம் மாத்திரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழிமூல கல்வியியல் கல்லூரிகளான மட்டகக்ளப்பு அட்டளைச்சேனை வவுனியா கொட்டகல யாழ்ப்பாணம் தர்காநகர் ஆகிய கல்லூரிகளிலிருந்து தோற்றிய விரிவுரையாளர்களிலிருந்து ஒருவர்தானும் தெரிவு செய்யப்பட்டிருக்கவில்லை.
அப்படியாயின் இவர்கள் எவரும் தகுதியானவர்களில்லையா? என்ற கேள்வி எழுகின்றது. அண்மைக்காலமாக பதவிநிலை உத்தியோகத்த்ர்கள் பதவியுயர்வில் இவ்வாறான பாரபட்சங்கள் நிலவிவருவது நல்லதல்ல.எனவே மீண்டும் அரசநியமனம் பதவியுயர்வுகளில் இனவிகிதாசாரம் பேணப்படவேண்டும் பொதுநிருவாக அமைச்சின் 15.90 இலக்க சுற்றுநிருபம் மீண்டும் நடைமுறைக்கு வரவேண்டுமென சங்கம் கேட்டுக்கொள்கிறது.