வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் அவர்களின் ஊடாக லன்டனில் இருந்து வருகை தந்த புலம்பெயர் தமிழர் தனவந்தர் ஸ்ரீ ரன்ஜினி மூலம் வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தை சேர்ந்த தர்சிகா எனும் மாணவிக்கு துவிச்சக்கர வண்டி அன்பளிப்பு செய்யப்பட்டது.
வறுமையின் பிடியில் வாழும் குறித்த மாணவி, நண்பர்களது சைக்கிளை இரவல் வாங்கி போட்டிகளில் கலந்துகொண்டு மாகாணம் மற்றும் தேசிய அளவில் சைக்கிள் ஓட்டப்போட்டிகளில் பங்கு பற்றியுள்ளதுடன் முதலாம் இரண்டாம் இடத்தையும் பெற்று மாவட்டம் மற்றும் மாகாண ரீதியில் பெருமையை தேடித்தந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனக்கு இந்த மாதம் மாகாண மட்ட சைக்கிள் ஓட்டப்போட்டியொன்று நடைபெறவுள்ளதாகவும் தனக்கு சைக்கிள் ஒன்றை பெற்றுத்தருமாறும் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் அவர்களது காரியாலயத்திற்கு வருகை தந்து வினவியுள்ளார்.
அதனடிப்படையில் குறித்த மாணவிக்கு தனது சொந்த பணத்திலிருந்து பந்தைய சைக்கிள் ஒன்றை வழங்குவதாக மஸ்தான் எம்.பி தெரிவித்திருந்த நிலையில் அவரது அலுவலக உத்தியோகத்தர் மூலமாக லன்டனில் இருந்து வருகைதந்த புலம்பெயர் தமிழர் தனவந்தர் ஸ்ரீ ரன்ஜினியின் உதவியுடன் குறித்த மாணவிக்கு சைக்கிள் ஒன்றினை அன்பளிப்பாக வழங்கிவைத்ததுடன் மாகாண மட்டத்தில் முதலாமிடம் பெற்று வெற்றிவாகை சூட மாணவிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
அத்துடன் தர்சிகாவின் ஏனைய கல்விக்கான செலவுகளையும் தாம் பொறுப்பேற்பதாக குறித்த தனவந்தர் தெரிவித்தார்.
இதனையடுத்து மஸ்தான் எம்பி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
உண்மையில் குறித்த மாணவிக்கு தனவந்தர் ஸ்ரீ ரஞ்ஜினி அவர்களின் உதவியமையையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்தால் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பல்வேறான இன்னல்களுக்கு ஆளான தங்களது உறவுகளுடைய வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரசியல்வாதிகள் தேவையில்லை.
தர்சிகா போன்ற எத்தனையோ இலை மறை காய்களான வீர வீராங்கனைகளும் புத்திசாலிகளும் எமது வன்னி மண்ணில் இருக்கின்றார்கள் அவர்களில் ஒரு சிலரை நாம் அடையாளம் கண்டு அவர்களுக்கான உதவிகளை வழங்கி அவர்களை ஊக்குவிக்கின்றோம்.
அத்துடன் இலங்கையிலிருந்து புலம்பெயர் தமிழர்களாக வெளிநாடுகளிலுள்ள உறவுகள் உங்களது உறவுகளுக்கு உதவ வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த பந்தைய துவிச்சக்கர வண்டியினை தனக்கு அன்பளிப்பு செய்த தனவந்தர் ஸ்ரீ ரஞ்ஜினி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் ஆகியோருக்கு மாணவி தர்சிகா நன்றியினை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.