மினுவாங்கொடை நிருபர்-
இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படும், இஸ்லாமிய தீனியாத் (தர்மாசிரியர்) சான்றிதழ் பரீட்சை - 2015 (2017) க்கான விண்ணப்பப் படிவங்கள், தற்பொழுது கோரப்பட்டுள்ளன. விண்ணப்பப் படிவங்களை, இத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சகல அஹதிய்யாப் பாடசாலைகளுக்கும், அஞ்சல் மூலம் அனுப்புவதற்கான ஒழுங்குகளும் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கப்பெறாத அஹதிய்யாப் பாடசாலைகளின் அதிபர்கள், விண்ணப்பிப்பதற்கு எதிர்பார்க்கும் விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கைகளைக் குறிப்பிட்டு, தமது தலைமையகத்தின் ஊடாக பரீட்சைத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும். கடிதம் ஒன்றை அனுப்புவதன் மூலம் அல்லது பரீட்சைத் திணைக்களத்திற்கு அலுவலக நாட்களில் காலை 8 மணிக்கும் மாலை 4 மணிக்கும் இடையில் நேரடியாக சமூகமளிப்பதன் மூலம், விண்ணப்பப் படிவங்களை, மார்ச் மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ள முடியும் என்று, பரீட்சை ஆணையாளர் நாயகம் டபிள்யூ. எம். என். ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
சகல விண்ணப்பதாரிகளும், பதிவு செய்யப்பட்ட அஹதிய்யாப் பாடசாலை அல்லது அரபுக் கல்லூரி அல்லது சிரேஷ்ட அல் குர் ஆன் மத்ரஸா ஆகியவற்றின் ஊடாகவே விண்ணப்பித்தல் வேண்டும் என்றும், தனிப்பட்ட விண்ணப்பதாரிகளாக விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பங்களும் முன் அறிவித்தல் எதுவுமின்றியே நிராகரிக்கப்படும் என்றும் திரு புஷ்பகுமார குறிப்பிட்டுள்ளார்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் யாவும், பதிவுத் தபாலில் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்படல் வேண்டும் என்றும், அவர் அஹதிய்யா அதிபர்களை அறிவுறுத்தியுள்ளார்.