மு.இராமச்சந்திரன்-
தோட்டப்பகுதிகளில் வாழுகின்ற வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு மலையகத் தமிழ் சமூகத்தின்பால் அக்கறைக்கொண்டுள்ள தனவந்தர்கள் , கொடைவள்ளல்கள் முன்வர வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
தனது சொந்த நிதியில் டிக்கோயா போடைஸ் முப்பது ஏக்கர் தோட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :
தோட்டத் தொழிற்துறையில் குறைந்த வருமானத்தைப் பெறுகின்ற தோட்டத் தொழிலாளர்கள் தமது பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்களைப் பெற்றுக்கொடுப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பாடசாலை முதலாம் தவணை ஆரம்பிக்கின்ற போது அப்பியாசக்கொப்பிகள் உட்பட கற்றல் உபகரணங்களைப் பெற்றுக்கொடுக்க முடியாத பெற்றோர்கள் தமது பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு உரிய காலத்தில் அனுப்பி வைக்க முடியாத நிலைமையிலுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக பாடசாலை அதிபர்கள் , ஆசிரியர்கள் எனது கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர்.
எனினும் எமக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களைப் பெற்றுக்கொடுக்க முடியாது. தனிப்பட்ட ரீதியில் கோரிக்கை விடுக்கப்படுகின்ற போது சொந்த நிதியிலேயே இத்தகைய கோரிக்கைகளை நிறைவேற்ற முடிகின்றது. எனினும் அனைத்து மாணவர்களுக்கும் இவ்வாறான உதவிகளை வழங்க முடியாத நிலைமையுள்ளது. இவ்வாறனதொரு நிலையில் எமது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் வசதி வாய்ப்புக்களுடன் உள்ளனர். இவர்கள் நினைத்தால் மலையகத்தைச் சேர்ந்த வறிய மாணவர்களை இனங்கண்டு கற்றல் உபகரணங்களைப் பெற்றுக்கொடுக்க முடியுமென எதிர்பார்க்கின்றேன். இந்த உதவியானது எமது சமூகத்துக்குச் செய்கின்ற பேருபகாரமென கருதுகின்றேன்.