காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் இப்போது நாட்டின் பல்வேறு மட்டத்திலும் பேசப்படும் ஒரு விடயமாக மாறியுள்ளது. பகிரங்கத்திற்கு வராது தலைமறைவாக இயங்கி வரும் “இலங்கை முன்னாள் முஸ்லிம்கள்” என்ற அமைப்பு இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கை சிங்கள, ஆங்கில மற்றும் சமூக ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் முக்கியத்துவமளித்து பிரசாரப்படுத்தப்பட்டுள்ளது.
காத்தான்குடியில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலானது முஸ்லிம்கள் மத்தியில் தீவிரவாதமும் பயங்கரவாதமும் வளர்ந்து வருவதாக கடந்த சில வருட காலமாக போலிக் குற்றச்சாட்டுக்களை எழுப்பி முஸ்லிம் சமூகத்தின் மீது பயங்கரவாத முத்திரை குத்த முற்பட்டுவரும் கடும்போக்கு அமைப்புக்களின் வாய்க்கு சீனி போட்டது போன்றே அமைந்துள்ளது. முஸ்லிம்கள் மத்தியில் சமயத்தை பின்பற்றுவது தொடர்பாக கருத்து முரண்பாடுகள் இருந்து வருகின்றன. அண்மைக் காலம் வரை இக்கருத்து முரண்பாடுகள் மோதலாக வெடித்ததில்லை.
பல வருடங்களுக்கு முன் பேருவளையில் இடம்பெற்ற மோதலை அடுத்து சமூகத்தின் மத்தியில் சமய கருத்து முரண்பாடுகளை மையமாக வைத்து மோதல்கள் இடம்பெறவில்லை. ஒவ்வொரு குழுவினரும் தாம் விரும்பும் கொள்கைகளை மற்றவர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் முன்னெடுத்துச் சென்றனர். ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் இடம்பெற்ற கைகலப்பு பலரை கவனத்திற்குள்ளாக்கியது. இதன் காரணமாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“இலங்கை முன்னாள் முஸ்லிம்கள்” என்ற அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம், தீவிரவாதம், அடிப்படைவாதம் மற்றும் மத வெறுப்புணர்வு ஆகியவற்றை நேரடியாகவும், மறைமுகமாகவும் போதிக்கும் அமைப்புக்கள், தனி நபர்கள் குறித்தும் அவ்வாறான அமைப்புக்களுக்கு கிடைக்கும், வெளிநாட்டு, உள்நாட்டு பண உதவிகள் குறித்தும் அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பினரும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் ஒரு சிறு குழுவின் செயற்பாட்டினால் முழு முஸ்லிம் சமூகத்தையும் நெருக்கடிக்குள் தள்ளவைத்துள்ளது. முழு முஸ்லிம் இயக்கங்கள் குறித்தும் கண்காணிப்புகள் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. 100 வீத முஸ்லிம்கள் வாழுகின்ற ஜம்மியத்துல் உலமா மற்றும் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் நெறிப்படுத்தலில் இயங்கும் காத்தான்குடிக்கு இச்சம்பவங்கள் ஒரு பெரும் களங்கத்தையும் அவப்பெயரையும் ஏற்படுத்தியுள்ளது.
காத்தான்குடியின் சமய, அரசியல், சிவில் தலைமைத்துவங்கள் தலையிட்டு இந்த மோதல் தொடர இடமளிக்காது கருத்து முரண்பாடுகளை பேசித் தீர்த்து வைப்பதற்கு உடன் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தி பிரச்சினைகளை உருவாக்குவதற்கு பார்த்துக்கொண்டிருக்கும் சக்திகளுக்கு இந்த நிகழ்வுகளின் மூலம் நாமே கதவை திறந்து கொடுத்தது போன்றே அமையும். நாட்டில் அமைதியாக வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை உருவாக்குவதற்கு இடமளிக்காது முஸ்லிம் தஃவா அமைப்புக்கள் நிதானமாகவும், தூர நோக்குடனும் செயற்பட வேண்டியது காலத்தின் தேவை.
என்.எம்.அமீன்.