வேசம் கலைக்கப்படும்....!

பிஸ்மில்லாஹிர்ரஃமானிர்ரஹீம்
ஐ நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை வெளிவந்திருக்கின்றது. அதில் தமிழ் மக்களின் பல பிரச்சினைகள் சுட்டிக்காட்டப் பட்டிருக்கின்றன. படைகள் கையகப்படுத்திய காணிகள் மீளளிக்கப் படவேண்டும்; வியாபார நடவடிக்கைகளில் படையினர் ஈடுபடக் கூடாது; போன்ற பல விடயங்கள் குறிப்படப்பட்டுள்ளன. கோப்பாப்பிலவு போராட்டம் கூட குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 25 வருடங்கள் அகதி வாழ்க்கை வாழ்ந்து, பாதி மீள்குடியேறி மீதி மீள்குடியேற முடியாத அவலம் ஒரு புறம், குடியேறிய மக்களிலும் கணிசமானோர் அங்கு வாழ்வதற்குரிய அடிப்படை வசதிகள் இல்லாததினால் மீண்டும் புத்தளம் திரும்பியுள்ள நிலை, கட்டப்பட்ட ஒரு சில வீடுகளும், இதைவிட ஓலைக்குடிசை சிறப்பாக இருந்திருக்குமே என்கின்ற நிலை, இந்த மக்கள் நிலைபற்றி, 25 வருட அவல வாழ்க்கை போதாதென்று யுத்தம் முடிவடைந்து ஆண்டுகள் 7 கடந்தும் அதிகமானவர்களுக்கு இன்னும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலைமை பற்றி அந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லையே! ஏன்?


தமிழ் மக்களுக்காக அவர்கள் வாக்களித்த பிரதிநிதிகள் அடிக்கடி ஜெனீவா போகிறார்கள், ஐ நா மனித உரிமை ஆணையாளரைச் சந்திக்கின்றார்கள். ஏனையவர்களைச் சந்திக்கின்றார்கள் , உரிய தகவல்களை வழங்குகின்றார்கள். அங்கிருந்து அரசுக்கு அழுத்தம் வருகின்றது .

நம்மவர்களும் வோட்டுத்தான் போட்டார்கள். ஆனால் நமது இடம்பெயர்ந்த மக்களைப்பற்றி ஐ நா மனித உரிமை ஆணையாளருக்கோ மற்றவர்களுக்கோ அக்கறையில்லாமல் இல்லை. ஆனால் அவர்களுக்கு தகவல் வழங்க யாருமில்லை.

வாலிப இயக்கங்கள் அபிவிருத்தி கேட்டு ஜனாதிபதி, பிரதமருக்கு மகஜர்
--------------------------------------------------------

இன்றைய முகநூல் பதிவுகளின்படி, வன்னியில் ஒழுங்கான பாடசாலை, நல்ல பாதை, தொழிநுட்ப கல்லூரி போன்ற பல வசதிகளை முசலி மக்களுக்கு ஏற்படுத்தக்கோரி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மகஜர் அனுப்புவதற்கு வாலிப இயக்கங்கள் தயாராகி வருகின்றன. இன்னும் ஒரு பதிவில் அங்கு கட்டப்பட்டிருக்கின்ற ஒரு சில வீடுகள் கூட உருப்படியாக கட்டப்படவில்லையே! என்ற மக்களின் ஆதங்கம் வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றது.


வன்னியின் வரலாற்றிலேயே ஒரு கபினட் அமைச்சர் வந்தது கிடையாது. சிறிய தொகையான வாக்குகளைக் கொண்ட வன்னிக்கு எவ்வாறு கபினட் அமைச்சர் பதவி வழங்க முடியும்; தலைமைப்பதவி வழங்க முடியும்; என்று சண்டை பிடித்தார்கள். அவற்றையெல்லாம் முறியடித்து வன்னிக்கு ஒரு கபினட் அமைச்சுப் பதவி, கட்சியின் தலைமைத்துவம் கிடைக்க வழி செய்தோம் ; அல்ஹம்துலில்லாஹ். அந்த அமைச்சுப் பதவியை தொடர்ந்து வைத்திருக்க தான் தொடர்ந்து பாராளுமன்றம் செல்ல வேண்டும்; வன்னி மக்களின் அவலம் தீர்ந்தால் எங்கே தனக்கு வாக்களிக்காமல் விட்டுவிடுவார்களோ என்ற அச்சம்; அந்த மக்களின் வேதனை வாழ்வில் அரசியல் நடக்கின்றது.


மறிச்சுக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குளி அதாவது முசலி மக்கள் அங்கிருந்து மீண்டும் வெளியேறும் நிலை வராமல் இறைவன் பாதுகாக்க வேண்டும்.
-----------------------------------------------------

குறித்த வர்த்தமானியின் பிரகாரம் தற்போது முசலி மக்கள் வனபரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமான காணியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எந்நேரமும் அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும்; என்ற அறிவித்தல் வரலாம். கொழும்பில் பல்லாண்டு காலம் வீடு கட்டி வாழ்ந்த மக்களின் வீடுகள் உடைக்கப்பட்டு அண்மையில் வெளியேற்றப் பட்டார்கள்; காரணம் அவர்கள் அரசாங்க காணியில் அனுமதியின்றி வாழ்ந்ததாகும். அந்த நிலைமையில்தான் இன்று முசலி மக்கள் வாழ்கின்றார்கள். ஆனால் எத்தனையோ விடயங்களைக் குறிப்பிடத்தெரிந்த மனித உரிமை ஆணையாளருக்கு இந்த வர்த்தமானியை அரசாங்கம் ரத்துச் செய்யவேண்டும்; என்று எழுதத் தெரியாமல் போனது அவரது குற்றமா? அல்லது அதனைப்பற்றி அவருக்குத் தெரிவிக்காமல் விட்ட நமது குற்றமா? ( எதிர்வரும் 22ம் திகதிதான் இறுதி அறிக்கையை ஆணையாளர் சமர்பிப்பார், எனவே இன்னும் காலம் கடந்துவிட வில்லை, முடிந்தால் முயற்சி செய்யலாம்).

ஊடகங்களிடம் ஜெனீவாவிற்குப் போவேன். ஜனாதிபதி மாளிகையை முற்றுகை இடுவேன்; என்றார்கள். நடந்தது எதுவுமில்லை. ஊடகத்தில் அரசியல் செய்கிறார்கள்.

அம்பாறையை அபிவிருத்தி செய்ய மட்டக்களப்பில் கூட்டம்
------------------------------------------------------
வோட்டுப்போட்ட சொந்தத் தொகுதி மக்களுக்கே அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே வக்கில்லை. அங்குள்ள இளைஞர்கள் அபிவிருத்தி கேட்டு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மகஜர் அனுப்புகிறார்கள். இவர்கள் அம்பாறை மாவட்டத்தை அபிவிருத்தி செய்யப் போகிறார்களாம். ஒரு பாடசாலையில் களிப்பறையே இல்லையாம். பதுளை மாவட்டத் தேர்தலுக்கு சென்றபோது அங்கும் ஒரு முஸ்லிம் ஆரம்பப் பாடசாலையில் களிப்பறை இல்லை, என்று மேடை மேடையாய் பேசி வாக்குப் பெற்றவர்கள் அங்கு களிப்பறை எப்போது கட்டப் போகிறார்களாம்? கொழும்பில் கொலன்னாவையில் முஸ்லிம்களுக்கு ஒரு பாடசாலை இல்லை, அதனைக் கட்டித்தருவேன்; என்று சொல்லி சொல்லி ஒரு மாகாணசபை உறுப்பினரைப் பெற்ற போலி முகநூல் சேவையின் சிகரங்கள் அதனை எப்பொழுது கட்டிக் கொடுக்கப் போகின்றார்களாம். கிழக்கு மாகாணசபைத் தேர்தல் வருகின்றது. அடுத்த கட்சித் தலைமை மீது ஏற்பட்டிருக்கின்ற அதிருப்தியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம்; என்று நடிகர் திலகங்கள் ; தங்கள் முகநூல் கூலிப்பட்டாளத்தை களத்தில் இறக்கி வேசம் போட விளைகின்றார்கள். பாவம், விளலுக்கிறைத்த நீராகப் போகிறது.

வேசம் கலைகிறது
-------------------
இத்தனை காலமும் அனலாய்க் கொதித்த வில்பத்து பிரச்சினையின் சூத்திரதாரி யார் என்பதை pen drive காட்டிக் கொடுத்து விட்டது. இந்த pen drive விவகாரத்தை நாம் இலகுவில் விட்டுவிடப் போவதில்லை.


முஸ்லிம் சமுதாயத்தை இனியும் வேடதாரிகள் ஏமாற்ற அனுமதிக்க முடியாது. அதிகமாக உணர்ச்சிவசப் படுபவர்களும் அதிகமாக வேசம் போடுபவர்களும் ஏதாவது ஒரு தடயத்தை விட்டுவிடுவர்களாம். இப்பொழுது நிறையவே தடையங்கள் கிடைத்திருக்கின்றன, அல்ஹம்துலில்லாஹ். இறுதியாக துபாய் ஷேக்குகளை ஏமாற்றப்போன தடயமும் கிடைத்திருக்கிறது . இன்ஷா அல்லாஹ் வேசங்கள் கலைக்கப்படும். மக்கள் பாதுகாக்கப் படுவார்கள்.

வை எல் எஸ் ஹமீட்
செயலாளர் நாயகம்
அ இ ம கா

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -