பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் சமூகத்தை பற்றி சிந்திக்கும் ஒருவர் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அவர் சுயமாக இயங்க அனுமதியளித்தால், நிச்சயமாக அபிவிருத்தியில் சாதனை நிலைநாட்டுவார் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும்.
இருந்தாலும் முன்னால் அமைச்சர் அதாவுல்லா அவர்கள் சமூகம் சார்ந்து, இன்றய காலகட்டத்தை கவணத்தில் எடுத்து கிழக்கிலே இருக்கும் புத்திஜீவிகளை ஒன்று சேர்த்து "வரலாற்றுத் தேவைக்காக ஒன்று படுவோம்"என்ற தொனிப் பொருளில் பேசுவதற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அந்த அழைப்புக்கு எதிராக பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் ஒரு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் அதாவுல்லாவை நோக்கி சில கேள்விகளையும், கண்டனங்களையும் தெறிவித்துள்ளார், அதனை பார்த்த எங்களுக்கு பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்களிடமும் சில கேள்விகளை பொதுமகன் என்ற முறையில் கேட்கவேண்டும் என்று தோன்றியதால் இதனை எழுதிகிறேன்.
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் சமூகத்தைப்பற்றி சிந்திக்க கூடாது என்று சட்டம் எங்கேயாவது உள்ளதா?
மக்களால் நிராகரிக்கப்படுவதென்பது பல காரணிகளால் நிகழும் ஒருவிடயமாகும், அதிலே நல்லவர்கள் தோற்பதும், கெட்டவர்கள் வெற்றியடைவதும் நிகழ்வது உண்டு, இரண்டாம் மகா யுத்தத்தை தனது புத்திசாதுரியத்தால் வெற்றி கொண்ட இங்கிலாந்தின் பிரதமர் வின்சன்ட் சேர்ச்சில் அவர்கள், யுத்தத்தின் பின் நடந்த தேர்தலில் தோல்வியடைந்தார், அதன் பிறகு இங்கிலாந்தின் பிரதமரான கார்ட்லி அவர்கள் இந்தியா பிரிவினையின் போது, மக்களால் நிராகரிக்கப்பட்ட வின்சன்ட் சேர்ச்சில் அவர்களிடம் ஆலோசனை கேட்டு செயல்பட்ட விடயங்கள் எல்லாம் வரலாறுகளாக உள்ளன.
இப்படி பல ஆதாரங்களை இலங்கையிலும் காட்டலாம். கட்டுரை நீண்டு விடும் என்பதற்காக அதனை தவிர்க்கின்றேன். அதாவுல்லா முஸ்லிம் காங்கிரஸை விட்டு விலகியபின் நீங்களும் சிலகாலம் அவரது கொள்கையை ஏற்று அவருடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டீர்கள் அல்லவா, அப்போது அதாவுல்லா துரோகியாக உங்களுக்கு தெறியவில்லையா?
அதாவுல்லா மு.காங்கிரசை விட்டு விலகி தனியாலாக நின்று வெற்றியடைந்து காட்டினார். அதே போன்று மு.காங்கிரசை விட்டு விலகி உங்களால் தனித்து நின்று வென்று காட்டமுடியுமா?
நீங்கள் வெற்றியடைவது முஸ்லிம் காங்கிரஸ் என்ற நாமத்துக்காகவேதான் மற்றபடி உங்களின் தனிப்பட்ட செல்வாக்கு அல்ல என்பதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள்.
மற்றது, அதாவுல்லா கட்டிய கட்டிடங்களுக்கு மறைந்த தலைவரின் பெயரை வைத்தாறா என்று கேட்டுள்ளீர்கள், அப்படியென்றால் நீங்கள் எத்தனை கட்டிடத்துக்கு தலைவரின் பெயரை வைத்துள்ளீர்கள்.
(அதற்க்குத்தான் உங்கள் தலைவர் விடமாட்டாரே..)
அதேநேரம் அதாவுல்லா அரசியலில் இருக்கும் போது கரையோர மாவட்டத்தை பெற்றுத்தந்தாரா.? என்று கேள்வி வேறு கேட்டுள்ளீர்கள்.
அப்படியென்றால் அந்த நேரம் நீங்களும் உங்கள் கட்சியும், கட்சி தலைவரும் அமெரிக்காவிலா இருந்தீர்கள் என்று கேட்கவேண்டியுள்ளது.
வேருவளை எரிந்தபோதும், தம்புள்ளை பள்ளி உடைக்கப்பட்டபோதும் என்ன நடவடிக்கை எடுத்தார் என்று கேட்டுள்ளீர்கள், அப்போது நீங்கள் எங்கிருந்தீர்கள், அதை விடுங்கள் இப்போது நீங்கள் எங்கு உள்ளீர்கள் என்றாவது கூறுவீர்களா?
அதாவுல்லா இன்று ஆட்சியில் இல்லை என்பது உங்களுக்கும் தெறியும். இப்போது நீங்கள் ஆட்சி அதிகாரங்களோடுதானே உள்ளீர்கள், அப்படியென்றால் தம்புள்ள பள்ளி விடயத்தை முடித்து கொடுத்துவிட்டீர்களா?
வேருவளை சம்பவத்துக்கு நடவடிக்கை எடுத்து தீர்வை பெற்றுத்தந்தீர்களா?
பாத்தியா பள்ளிவாசல் பிரச்சினைக்கு தீர்வு கண்டீர்களா?
இப்படி பிரச்சினைகளை அடிக்கிக்கொண்டே போகலாம். நீங்கள் எதற்கு தீர்வை பெற்றுத்தந்தீர்கள் என்று கூறமுடியுமா?
மற்றது, மறைந்த தலைவரின் வழியை அதாவுல்லா பின்பற்றுகின்றாரா என்று வேறு கேட்கின்றீர்கள்.. ரணில் ரைவராக இருக்கும்வரைக்கும் அந்தபஸ்சில் ஏறக்கூடாது என்று தலைவர் அஸ்ரப் ஒசியத்து கூறியதாகவும், அதனை உதாசீனப்படுத்திய போதுதான் ஹக்கீமை விட்டு விலகிவந்தேன் என்று அன்று கூறினீர்கள், இன்று ஒசியத்து மறந்துவிட்டதா? அல்லது ஒசியத்து காலாவதியாகிவிட்டதா?
ஆக, தலைவரின் குடும்பத்துக்கும், அதனை கட்டிக்காத்த மூத்த போராளிகளுக்கும், நடக்கும் அநியாயத்தை அஸ்ரப்பின் ஆத்மா அறிந்தால் நீங்கள் செய்யும் விடயங்களை அங்கீகரிக்குமா? இப்படி பல கேள்விகளை உங்களிடம் கேட்பதற்கு எங்களுக்கும் உரிமையிருக்கிறது என்ற காரணத்தினால்தான் கேட்டோம்.
இது முக்கியமான காலகட்டம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகவே எல்லாரும் இதனைப்பற்றி சிந்திப்பதற்கும் பேசுவதற்கும் பூரண சுதந்திரம் உள்ளது. அதனை தடுப்பதற்கு உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதே எங்கள் தாழ்மையான கருத்தாகும்.
நீங்களும் சிந்தியுங்கள், படித்தவர்கள், அரசியல்வாதிகள்,வியாரிகள், விவசாயிகள், பாமரமக்கள் எல்லோரும் இதனைப்பற்றி சிந்தித்து பேசவேண்டும் அதற்கு நீங்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அதனை விட்டுவிட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக மற்றவர்களை குற்றம் காணாதீர்கள். அப்படி ஒருவரை குற்றம்சாட்ட உங்கள் விரல் நீலுமாக இருந்தால் மற்ற நான்கு விரலும் உங்களை நோக்கி கேள்வி கேட்கும் என்பதே உண்மையாகும். ஆகவே தயவு செய்து இந்தபிரச்சினையை எல்லோரும் சிந்திக்க அனுமதியுங்கள் என்று கேட்டு விடைபெறுகின்றேன்.
எம்.எச்.எம்.இப்ராஹிம்,
கல்முனை.