தென் கிழக்கு அலகும், கரையோர மாவட்டமும் கிழக்கு முஸ்லிம்களின் தீர்வாகுமா...?

கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டமானது, 19 பிரதேச செயலாளர் பிரிவுகளையும், 504 கிராம சேவகர் பிரிவுகளையும், கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் அம்பாறை ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளையும் தன்னகத்தே கொண்ட பிரதேசமாகும். இலங்கையின் தலைநகரான கொழும்பில் இருந்து சுமார் 320 கிலோ மீற்றர் தொலைவில் அம்பாறை மாவட்டம் உள்ளது. இம்மாவட்டத்தில் முஸ்லிம், தமிழ், சிங்களம் ஆகிய மூவினத்தவர்களும் வாழ்ந்து வருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தின் தோற்றம்;

அம்பாறை மாவட்டம் 1961ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைந்த ஒரு மாவட்டமாகவே காணப்பட்டது. பின்னர் 1961.04.10ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பொத்துவில், பாணமை, அம்பாறை, உஹன, தமண ஆகிய பிரதேசங்கள் பிரிக்கப்பட்டன. இவற்றுடன் பதுளை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட மஹா ஓயா, பதியத்தலாவ ஆகிய பிரதேசங்களையும் இணைத்து அம்பாறை எனும் மாவட்டம் உருவாக்கப்பட்டது. 

அப்போதைய சனத்தொகையில், முஸ்லிம்கள் 46.11 வீதமும், சிங்களவர்கள் 29.28 வீதமும், இலங்கைத் தமிழர்கள் 23.23 வீதமும் ஏனையோர் 0.76 வீதமுமாகக் காணப்பட்டனர். இவ்வாறு 29.28 வீதமாகக் காணப்பட்ட சிங்களவர்களின் விகிதாசாரத்தினை கடந்த 05 சதாப்தகாலமாக திட்டமிட்ட குடியேற்றத்தின் மூலம் சிங்களவர்களின் எண்ணிக்கையை 37.5 வீதமாகக் கொண்டு வந்தனர். தற்போதைய கணக்கெடுப்பின்படி, அம்பாறை மாவட்டத்தில் வாழும் மொத்த சனத்தொகையில் முஸ்லிம்கள் 44.0 வீதமாக உள்ளனர். 23.23 வீதமாகக் காணப்பட்ட தமிழர்கள், இடம்பெயர்வு காரணமாக 18.3 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளனர்.

பெரும்பான்மை இனத்தின் பாகுபாடு;

அப்போதைய அரசுகளும், தற்போதைய அரசும் இம்மாவட்டத்தை சிங்கள மேலாதிக்கமுள்ள ஒரு மாவட்டமாகவே எண்ணிக் கையாண்டு வருகிறது. சுமார் 62.3 வீதம் தமிழ் பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இம்மாவட்டத்தை சிறுபான்மை மக்களே நிர்வகிக்க வேண்டும் என்பது இயற்கை நியதியாகும். ஆனால், இன்றுவரை பெரும்பான்மை சமூகம் இதற்கான எந்த எத்தனங்களையும் மேற்கொள்ளாது சிங்கள இனத்தவர் ஒருவரைக் கொண்டு தமிழ் பேசும் மக்களின் அன்றாட வாழ்க்கையினை முடக்க முயற்சிப்பது வேதனைக்குரிய விடயமாகும். எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் இத்திட்டத்திற்கு தீனி போட்டுக் கொண்டிருப்பது அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அம்மக்களின் தனிமனித உரிமைக்கான தடைக்கல்லாகும். 

அம்பாறை மாவட்ட தமிழ் பேசும் மக்களின் காலடிக்கு அரச யந்திரத்தை அல்லது அரச நிருவாகத்தை கொண்டுவருவது மாவட்டம் சார்ந்த விடயமாகும். இது தென்கிழக்கு தனியலகு அல்ல என்பதை தெளிவாக நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். 

விகிதாசார தேர்தல் முறையின் கீழ் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், பெரும்பான்மை சமூகத்தின் மூலமான காணி அபகரிப்பைத் தடுப்பதற்கும், தமிழ் பேசும் மக்களின் கருமங்களை இலகுவில் அடைந்து கொள்வதற்கும் வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக பெரும் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் செயற்பட்டிருந்தார். அதன் காரணமாக அவரது பெயர் பெரிதும் ஒலிக்க ஆரம்பித்ததுடன், வரலாற்றில் இன்றுவரை அப்பெயர் நிலைத்து நிற்கிறது. ஆனால், தலைவரின் கனவு பெரும்பான்மை இன அரசாங்க அதிபர் இல்லாத சந்தர்ப்பத்திலேயே சாத்தியமாகும் நிலை உள்ளது. 

இது இவ்வாறிருக்க, கல்முனை பிரதேச செயலகத்தில் பெரும்பான்மை இனத்தவரை பிரதேச செயலாளராக நியமித்து அப்பிரதேச மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் நிலையும் சமகாலத்தில் நடைபெற்று வருகின்றன. இது குறித்து முஸ்லிம் தலைமைகள் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்காதிருப்பது வேதனைக்குரிய விடயமாகும். எனவே, கல்முனை கரையோர மாவட்டக் கோரிக்கை புத்திசாதுர்யமானதாகவும், அழியா அரசியல் தீர்வாகவும் அமைய வேண்டும் என்பது காலத்தின் தேவையாகும். 

மாறாக அரசியல் சுய நலன்களுக்காக காலத்துக்குக் காலம் கரையோர மாவட்டக் கோரிக்கை பற்றிப் பேசுவதும், பின்னர் அதனைக் கைவிடுவதும் முஸ்லிம் சமூகத்திற்கு அவ்வளவு ஆரோக்கியமான விடயமல்ல.

கரையோர மாவட்டம் என்பது நமது அரசியல்வாதிகளால் உதட்டளவில் பேசப்படும் வெறும் அரசியல் மேடைக் கருத்துக்களாகவோ அல்லது தனிப்பட்ட கட்சிகளை அல்லது தனி நபர்களை திருப்திப்படுத்துவதற்கான எத்தனமாகப் பயன்படுத்தப்படக்கூடாது. இது ஒட்டு மொத்த சமூகம், பிறநலன் விரும்பும் அமைப்புக்களின் ஏகோபித்த கருத்தாக அமைய வேண்டும். இதனை சாத்தியமாக நடைமுறைப்படுத்துவதற்கு நமது அரசியல் தலைமைகளுக்குள் தெளிவான கருத்தொற்றுமை மிக மிக அவசியமாகும். 

ஆகவே, நிருவாக அலகு, எல்லை நிர்ணயம், எதிர்கால சந்ததியினரின் பல்கலைக்கழகத் தேர்வு முறைமை, கரையோர மாவட்டத்தில் உள்வாங்கப்படவுள்ள அரச அலுவலகங்கள், தொழில் வாய்ப்புக்கள் மற்றும் சமூகம் சார் இன்னோரன்ன பலாபலன்கள் போன்றவற்றை உள்ளக்கிய முன்மொழிவுகள் அடங்கிய கட்சி சார்பற்ற ஒரு திட்ட வரைபை நாம் ஏற்படுத்த வேண்டும். இம் முன்மொழிவு வரையும் பொறுப்பை முற்றுமுழுதாக அரசியல்வாதிகளிடம் கையளிக்காது, அரசியல்வாதிகளுடன் இணைந்து மாவட்டத்தில் உள்ள துறைசார்ந்த கல்வியாளர்கள், சமூக அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகளைக் கொண்டு தயாரிக்கப்படல் வேண்டும். 

அம்பாறை மாவட்டம் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் தொகுதிகளை உள்ளடக்கினாலும், அதன் எல்லைகள், அதற்கான நிலம் என்பன தெளிவாக வரையறை செய்யப்பட்ட பின்னரே உள்ளுராட்சி மற்றும் பிரதேச செயலாளர்கள் எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்படல் வேண்டும். இது தென் கிழக்கு அதிகார அலகு அல்ல. அப்படியாயின் ஏனைய பிரதேச மக்களுக்கான தீர்வுத்திட்டம்தான் என்ன? 

அபிவிருத்தி என்கிற கோணத்தில் நோக்கும் போது, எமது கரையோர மாவட்ட சனத்தொதையைக் கருத்திற் கொண்டே அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். அதன் அடிப்படையில், பிற மாவட்டங்களின் சனத் தொகையோடு அம்பாறை மாவட்டத்தை ஒப்பிடும் போது, குறைந்த தொகையையே புள்ளி விபரங்கள் காட்டுகிறன. இதனால், மத்திய அரசின் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீட்டில் எமது மாவட்டத்திற்கான ஒதுக்கீடுகள் மட்டுப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகம். 

முஸ்லிம் அரசாங்க அதிபரை பெறுவதற்கான சாத்தியப்பாடு; 

கிழக்கு மாகாணத்தில் அரசாங்க அதிபர் பதவிக்கு தகுதியாக, சிரேஷ்ட அதிகாரிகள் பலர் இருக்கத்தக்க நிலையில், தொடர்ச்சியாக பெரும்பான்மை இனத்தவரை நியமிப்பதன் மூலம் இப்பிரதேசத்தில் உள்ள தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மை இனத்தவர்கள் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். கிளிநொச்சி, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் தமிழர்கள் அரசாங்க அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ள போதிலும், இலங்கையில் உள்ள எந்த மாவட்டத்திலும் இதுகாலவரை முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த எவரும் அரசாங்க அதிபராக நியமிக்கப்படாதிருப்பது முஸ்லிம் இனத்திற்கு செய்யும் பெரும் அநீதியாகும்.

எனவே, தற்போது நிறுவப்பட்டுள்ள அரசை அதிகாரத்திற்குக் கொண்டு வந்ததில் பெரும் பங்கு முஸ்லிம் சமூகத்திற்கு இருப்பதால், நெகிழ்வுப் போக்குடன் ஆட்சி புரியும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் மூலம் கரையோர மாவட்டக் கோரிக்கை எனும் எமது கோசத்தைத் தவிர்த்து முஸ்லிம் ஒருவரை அரசாங்க அதிபராக நியமிப்பது தொடர்பிலான கோரிக்கைகளை நாம் விடுத்துப் பெறுவதே சாலப் பொருத்தமாகும். 

அல்லது பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பெரும்பான்மையினருக்கென அம்பாறையிலும், தமிழ் பேசும் மக்களுக்கென கல்முனையிலும் உள்ளது போல, பெரும்பான்மையினருக்கான மாவட்ட செயலகமாக அம்பாறையை பிரகடனப்படுத்தி அதற்கு சமாந்தரமான அதிகாரங்களுடன் கூடிய செயலகம் ஒன்றை தமிழ் பேசும் மக்களுக்காக கல்முனையில் நிறுவக் கோரினால் அக்கோரிக்கையை சமகால அரசு பரிசீலனை செய்யும் சாத்தியங்கள் அதிகம் உள்ளன. 

இந்த நல்லாட்சியில் நாம் இதனைப் பெற்றுக் கொள்ளாதவிடத்து இனிவரும் எக்காலத்திலும் இவ்வாய்ப்பு எமக்கு எட்டாக்கனியாகவே அமையும். அரசாங்க அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு மக்கள் ஆணையோ பாராளுமன்ற சட்ட மூலங்களோ தேவையில்லை. இது ஜனாதிபதியால் மிக இலகுவில் நிறைவேற்றக் கூடிய விடயமாகும். 

எது எப்படியிருப்பினும், தென்கிழக்கு அலகு, கரையோர மாவட்டம் எனும் கோசம் பெரும்பான்மை மக்களின் மத்தியில் மேலும் இனவாதத்தையும், எமது சமூகத்தை தனிமைப்படுத்துவதற்குமான செயற்பாடாக அமையும். மேலும், இதனால் இனவாதம் வலுப்பெற்று, குரோதம் வளர்த்து ஏனைய பிரதேசவாழ் முஸ்லிம் மக்களின் தனிமனித உரிமைகளைப் பெற்றுக் கொள்வதில் பாரபட்சம் காட்டப்படும் என்பதுடன், எமது சமூகத்தின் முன்னேற்றம் இன்னும் பின்தள்ளப்படும் சாத்தியமே அதிகமாகும்.

அதனடிப்படையில், மற்றுமொரு 'காஸா'வை நாம் தாமாகவே கேட்டுப் பெற்றுக் கொள்ளும் நகர்வாகவே கரையோர மாவட்டக் கோரிக்கை அமையும் என்பது திண்ணம்.
ஏ.எம்.ஸாஹிர்,
பொறியியலாளர்,
சாய்ந்தமருது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -