மலையகப் பெண்கள் வெளிநாடு செல்வதை நிறுத்துவோம் - திலகர் எம்.பி

மு.இராமச்சந்திரன்-
லங்கைக்கு பெயர் எடுத்துக்கொடுத்திருப்பது தேயிலை. அந்த தேயிலையை ஏற்றுமதி மூலமே இலங்கையின் அந்நிய செலாவணி வருமானம் முதலாம் இடத்தில் இருந்த ஒருகாலம் இருந்தது. இன்று தேயிலை ஏற்றுமதி வருமானம் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றது. ஆனால், வெளிநாட்டுக்கு பணிப்பெண்களாக வேலைக்கு செல்வோர் அனுப்பும் பணமே இலங்கையின் முதலாவது அந்நிய செலாவணி வருமானத்தைப்பெற்றுத்தருகிறது. 

மலையகப் பெண்களும் பணிப்பெண்களாகச் சென்று இதற்க பங்களிப்புச் செய்கின்றனர். ஆனால் , வருமான மூலம் பல்வேறு சமூக உளவியல் சிக்கல்களைக் கொடுக்கின்றது எனவே வெளிநாட்டுப் பணிப்பெண்களாக மலையகப் பெண்கள் செல்வதை நிறுத்துவோம் மாற்று வாழ்வாதாரத்தை கண்டடையேவாம் என தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் மகளிர் அணியினரின் மகளிர் தின கொண்டாட்டங்களின் முதலாம் நிகழ்வு ' உறவுக்கு கைகொடுப்போம்- உரிமைக்கு குரல் கொடுப்போம்' எனும் தொனிப்பொருளில் நுவரெலியா பரிசுத்த திரித்துவ கல்லூரி மண்டபத்தில் மகளிர் அணித்தலைவியும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான திருமதி.சரஸ்வதி சிவகுரு தலைமையில் இடம்பெற்றது. மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்க தலைவருமான பழனி திகாம்பரம் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்த இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் மேற்படி கருத்தினைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மகளிர் அரசியல் தொழிற்சங்க பொதுப்பணிகளில் ஈடுபடுவதில் உள்ள சிக்கல்களை அணித்தலைவி திருமதி.சரஸ்வதி தனது தலைமையுரையிலே தெரிவித்தார். அது உண்மைதான். பெண்கள் பொதுவாழ்வில் ஈடுபடும்போது பல்வேறு சவால்களை சந்திக்க நேரிடும். அதுபோலவே மறுபுறத்தில் ஆண்கள் பொதுப்பணிகளில் ஈடுபடுவதற்கு அவர்களின் பல்வேறு சுமைகளை தாங்கள் தாங்கிக்கொள்வதன் ஊடாகவும் பெண்கள் பொதுவாழ்க்கைக்கு பங்களிப்பு செய்கின்றார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் பொதுப்பணிகளில் ஈடுபடும்போது குடும்பத்தில் ஏற்படுகின்ற வெற்றிடத்தை எங்கள் குடும்பத் தலைவிகளே ஏற்கின்றனர். அவர்கள் குடும்ப நிர்வாகத்தைப் பொறுப்பேற்றுக்கொள்ளாத பட்சத்தில் ஆண்களுக்கும் பொதுப்பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபடுவது சவாலானதே. அந்த வகையில் பொதுப்பணிகளில் ஈடுபடுவோரின் குடும்பத்தலைவிகள் தாய்மார் போற்றுதற்குரியவர்கள். எனவே அந்த உறவுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்.

உரிமைக்கு குரல் கொடுப்போம் என்பதும் நமது மகளிர் தின மகுட வாசகத்தின் ஒரு பகுதி. அந்த வகையில் மலையக தொழிற்சங்க அரசியல் வாழ்வில் ஆரம்ப காலம் தொட்டே ஆண்களும் பெண்களும் சரிசமமாகவே பங்களிப்பு செய்து வந்துள்ளனர். எமது தொழிற்சங்க பிதாவான கோ.நடேசய்யர் மாறுவேடமிட்டு தோட்டங்களுக்கு சென்று தொழிற்சங்க கட்டமைப்பை உருவாக்கும்போது அவருக்கு உறதுணையாக இருந்தவர் அவரது துணைவியார் திருமதி. மீனாட்சியம்மை. அவரும் ஒருபோராளியாக பத்திரிகையாளராக அரசியல் தொழிற்சங்க செயற்பாட்டாளராக உறுதியாக செயற்பட்டுள்ளார். மலையகத்தின் முதலாவது பெண் ஊடகவியலாளராகவும் ஈழத்தின் முதலாவது பெண் கவிஞராகவும் பெருமைபெற்றவர் அவர். 

அவர்களின் வழிகாட்டலில் வந்தவர்கள் நாம். எனவே அந்த கலாசாரத்தைப் பேணி பாதுகாக்க வேண்டும். நமது அமைச்சர் தனிவீட்டுத்திட்டத்தை ஆரம்பித்து புதிய கிராமங்களுக்கு பெயரிட்டபோது முதலாவது பெயர் 'நடேசய்யர் புரம்;' என்றும் இரண்டாவது கிராமம் 'மீனாட்சியம்மை புரம்' என்றும் பெயரிட்டு அவர்ளது பணியை கௌரவம் செய்தோம் என்பதை நினைவபடுத்த வேண்டியிருக்கின்றது. 

இலங்கையின் தேயிலை எற்றுமதியில் அதிக வருமானம் ஈட்டியபோது அதில் நமது பெண்களே அதிகம் பங்கு வகித்தனர். இன்று தேயிலைத் தொழில்துறை வீழ்ச்சி அடைய தேயிலைக்கு பதிலாக அந்தப் பெண்களையே வெளிநாட்டு பணிப்பெண்களாக ஏற்றுமதி செய்து வருமானம் தேடும் துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அடுத்த மகளிர் தின விழாவின்போது இதனை கணிசமாக குறைக்கும் திடசங்கட்பத்தை நாம் கொள்ள வேண்டும். வெளிநாட்டுப் பணிப்பெண்களாக மலையகப் பெண்கள் செல்வதை நிறுத்துவோம் மாற்று வாழ்வாதாரத்தை கண்டடைவதற்கு ஒன்றிணைந்து செயற்படுவோம் எனவும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -