எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் கிழக்கு மாகாண முதலமைச்சரினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 180 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன. காத்தான்குடி ஏறாவூர் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலேயே அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்த திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
இதன் முதற்கட்டமாக 17 மில்லியன் ரூபா செலவில் ஏறாவூரில் அமைக்கப்பட்டுள்ள மர்ஹும் செய்னுலாப்தீன் ஆலிம் வாவிக்கரை பூங்கா 03.03.2017 ஆம் திகதியன்று மக்களிடம் கையளிக்கப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இந்த நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க,பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.
ஏறாவூர் வைத்தியசாலைக்கான அபிவிருத்தியை முதலமைச்சர் தடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் புதிய மகப்பேற்று விடுதி ,அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான உபகரணங்கள் ஆகியன மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
இவை அனைத்தும் 60 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட செலவில் கிழக்கு முதலமைச்சரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது, அது மாத்திரமன்றி 9 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஏறாவூர் ஆயுர்வேத வைத்தியசாலையின் புதிய கட்டடமும் கிழக்கு முதலமைச்சரினால் திறந்து வைக்கப்படவுள்ளமை மிக முக்கிய அம்சமாகும்,
இதேவேளை எதிர்வரும் 05.03.2017 ஆம் திகதியன்று ஏறாவூர் மீராக்கேணி அனுகு வீதி 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளதுடன் அத்துடன் ஏறாவூர் புன்னக்குடா வீதி 30 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு கிழக்கு முதலமைச்சரினால் மக்கள் பாவனைக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அது மாத்திரமன்றி கௌரவ மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக்கின் முழுப் பங்களிப்புடன் கிழக்கு முதலமைச்சரின் தலைமையில் காத்தான்குடியிலும் அபிவிருத்திப் பணிகள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையில் காங்கேயன் ஓடை ஒல்லிக்குளம் மாவிலங்குத்துறை வீதி 5 மில்லியன் ரூபா செலவிலும்,மீனவர் வீட்டுத் திட்ட வீதி 6 மில்லியன் ரூபா செலவிலும் மற்றும் கடல் ஓரப் பாதை வீதி 10 மில்லியன் ரூபா செலவிலும் நிர்மாணிக்கப்பட்டு எதிர்வரும் 05 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.