கிண்ணியாவில் தீவிரமாக பரவும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு களத்தில் இறங்கி சேவையாற்றுமாறு சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர் மற்றும் ஜே.எம். லாஹிர் ஆகியோருக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் செவ்வாய்க்கிழமை (14) பணிப்புரை விடுத்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி மருத்துவ உதவிகளை வழங்குதல், மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல், டெங்கு நுளம்பு பரவுவதை கட்டுப்படுத்தல் போன்ற விடயங்களில் கட்சி பேதமின்றி அனைவரும் ஈடுபடுமாறு அமைச்சர் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமதுவுக்கும் அறிவித்துள்ளார். டெங்கு நோயினால் மரணித்த குடும்பங்களின் உறவினர்களுக்கு அமைச்சர் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சவூதி அரேபியாவிலிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீமுக்கு கிண்ணியாவில் வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுள்ளார்.