க.கிஷாந்தன்-
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா கிளாசோ ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் 05.03.2017 அன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
நானுஓயா கிளாசோ பிரதேசத்தில் அமைந்துள்ள ஆற்று பகுதியில் 05.03.2017 அன்று மதியம் தனியாக குளிக்க சென்றுள்ளார். இதன் போது நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் குறித்த இளைஞன் சுழியொன்றில் அகப்பட்டுள்ளார். அகப்பட்ட குறித்த இளைஞன் ஏனையவர்கள் காப்பாற்ற முயற்சித்த போதும் முயற்சி பயனளிக்காத நிலையில் மேற்படி இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா ஒலிபன்ட் பகுதியை சேர்ந்த 17 வயதான சரவணகுமார் ஸ்ரீநாத் என்பவரே உயிரிழந்தவராவார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 06.03.2017 அன்று காலை 8.30 மணியளவில் நானுஓயா பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளோடு நுவரெலியா மாவட்ட கடற்படையினர் ஆகியோர் இணைந்து இவரது சடலத்தை மீட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்ட நீதிபதி மரண விசாரணைகளை மேற்கொண்டதன் பின் பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்படும் என நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த இளைஞன் நானுஓயா கிளாசோ தோட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்ததாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.