களுத்துறையில் சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட, சந்தேகநபர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புலனாய்வாளர்கள் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சந்தேகநபர்களை கைது செய்வதற்கு, கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களில் இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போலிக் கடவுச் சீட்டுடனேயே சந்தேகநபர்கள் சுற்றித் திரிகின்றனர் எனவும், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை, கடந்த மாதம் 27ஆம் திகதி, களுத்துறையில் வைத்து சிறைச்சாலை பேருந்து மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் காரணமாக இரண்டு அதிகாரிகள் உள்ளிட்ட 7பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.