ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோற்றம் அதன் அரசியல் தேவை பற்றிய விரிவானதொரு சிந்தனைத்தளத்தில் எழுதப்பட்ட மிக முக்கியமான ஒரு பிரசுரமாக "எமது பார்வை" எனும் இச்சிறுநூல் அமைந்திருக்கிறது.
இந்நூலானது, 1988.12.29 இல் கட்சியின் கொள்கை விளக்கப்பிரசுரமாக மறைந்த பெருந்தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களினால் புதிய வெளிச்சம் வெளியீடு-03 ஆக வெளியிடப்பட்டது. முஸ்லிம் காங்கிரஸின் கொள்கைப்பிரகடனத்தை 'எமது பார்வை' என்ற தலைப்பில் முஸ்லிம் சமூகத்தின் பரிசீலனைக்காக கையளிக்க விழையும் சிறிய முயற்சியாக அன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று 'எமது பார்வை' எனும் நூல் தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அடிப்படையினையும் அதன் உருவாக்கக் கொள்கைகளையும் புதிய தலைமுறையினர்கள் அறிந்து கொள்ளும் வகையில் மீள்பிரசுரம் செய்யப்பட்டு, எமது கட்சியின் மக்கள் பலம் ஒற்றுமைப்பட வேண்டும். எமது கட்சியின் கட்டமைப்பும் அடிப்படையும் பிரதேசவாதங்களாலும் பதவி மோகங்களாலும் தனி நபர் முரண்பாடுகளாலும் சிதைந்து போகாதவாறு அதே கட்டுக்கோப்புடன் இருப்பதில் எப்பொழுதும் நாங்கள் குறி தவறாதவர்களாகச் செயற்படவேண்டும் என்ற உணர்வையும் அதற்கான வழிகாட்டுதல்களையும் 'எமது பார்வை' என்ற இப்பிரசுரம் உங்களுக்குள் ஏற்படுத்தும் என்ற எதிர்பார்போடு, உங்கள் வாசல்களுக்கு வீட்டுக்கு வீடு மரத்தினையும் உங்கள் கைகளுக்கு இந்தப்பிரசுரத்தினையும் ஒப்படைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்.
இந்நூலனது, இஸ்லாமிய வாழ்வு முறை தொடர்பாகவும் பேசுகிறது. அதாவது, இஸ்லாம் என்பது மனித சமூதாயத்துக்கு வாழ்வின் துறைகளில் என்றும் எப்போதும் சதா வழிகாட்டிக் கொண்டிருக்கும் வாழ்வு முறை என்பதை தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.
இஸ்லாமிய அடிப்படையில் சமூக வாழ்வின் அவசியம் என்பதனூடாக இஸ்லாமிய வாழ்வு முறையின் எமது தனிப்பட்ட வாழ்வை அமைத்துக் கொண்டால் மாத்திரம் போதாது, தனி மனித வாழ்வு இஸ்லாமிய ஷரீஆ அடிப்படையில் அமைவது எவ்வளவு முக்கியமோ அவ்வாறே முஸ்லிம்களின் சமூக வாழ்வையும் கூட இஸ்லாமிய, சமூக, பொருளாதார அடிப்படையில் அமைத்துக் கொள்வது தலையாய கடமையெனவும் சுட்டிக்காட்டுகிறது.
அதே போல் முஸ்லிம்கள் ஓர் இனமல்ல என்ற தலைப்பினூடாக முஸ்லிம் சமூகம் என்பது இன, நிற, தேச, மொழி வேறுபாடுகளை வென்று நிற்கும் ஒரு சொற்றொடராகும் என்பதையும் இலங்கை முஸ்லிம்களில் பல இனங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளார்கள் என்பதே உண்மையாகும்.
இலங்கை, இந்தியா சோனகர், மலாயர், மேமன், போரா இனத்தவர்களோடு சிங்கள, தமிழ், பறங்கிய இனங்களைச் சேர்ந்தவர்களும் இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியிலுள்ளனர் என்ற கருத்தின் மூலமும் இன்னும் சில உதாரணங்களுடனும் விளக்கப்பட்டுள்ளதையும் இந்நூலில் பார்க்கலாம்.
இஸ்லாமிய வாழ்வு முறையிலிருந்து பிரிக்க முடியாதவனே முஸ்லிம் என்பதனூடாக முஸ்லிம் என அழைக்கப்படும் தனி நபர் ஒருவரை எவ்வாறு இஸ்லாத்திலிருந்து பிரிக்க முடியாதோ, அதே போல் தனி முஸ்லிமின் வாழ்விலும் முஸ்லிம் சமூகத்திலும் இஸ்லாம் என்னும் தீபத்தின் ஒளி அணையாமல் சதா ஒளிர்ந்து கொண்டிருக்க வேண்டும்.
இஸ்லாத்திலுள்ள சில பகுதிகளை மட்டும் தெரிவு செய்து கொண்டு, ஏனையவற்றை நிராகரித்து விட்டு வாழ முடியாதென்பதையும் ஆத்மீக, சமூக, பொருளாதார அரசியல் எல்லாம் உள்ளடக்கிய இஸ்லாமிய வாழ்வு முறையில் ஆத்மீக அம்சங்களை மட்டும் அனுஷ்டித்துக் கொண்டு ஏனையவற்றைப் புறக்கணித்து வாழ்வது இஸ்லாத்தில் பரிபூரணமாக நுழைவதாகுமா? என்ற கேள்வியையும் தொடுத்து ''இஸ்லாத்தில் பரிபூரணமாக நுழைந்து விடுங்கள்'' என்ற குர்ஆனின் கட்டளையையும் நினைவுபடுத்தி அரசியல் விவகாரங்களிலிருந்து இஸ்லாத்தை நாம் பிரிக்க முடியாதென்பதை தெளிவுபடுத்துகிறது.
இலங்கை முஸ்லிம்களின் தனித்துவம் இஸ்லாம்! என்பதன் மூலம் இலங்கை முஸ்லிம்களின் தனித்துவமென்பது வேறு வார்த்தைகளின் சொல்வதெனில் இஸ்லாமிய வாழ்வு முறையை பேணுவதாகும் என்ற விளக்கம் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.
அதே போல், முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பது எப்படி? என்ற வினாவினைத் தொடுத்து, அதற்கான விடைகளையும் இந்நூல் தருகிறது. அதன் தொடராக உரிமைகளை வென்றெடுப்பதற்காக முஸ்லிம் கட்சிக்கான வித்து நடப்பட்ட பின்னனி என்பதனூடாக முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பம் தொடக்கம் அது அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்ட வாரலாறும் கூறப்படுகிறது.
முஸ்லிம் சகோதரர்களை விழித்தும் இந்நூல் பேசுகிறது. அதில் சமூகத்தின் கூட்டு வாழ்வு இஸ்லாம் பிரதிபலிக்காத வரை இஸ்லாம் உறுதி செய்யும் வெற்றியை நாம் பெற்றுக்கொள்ள முடியாதென்பதை உணர்ந்து கொண்டோம் என்று ஏற்றுக்கொள்கிறது. அத்தோடு, எமது சமூகத்தின் கூட்டமைப்பை இஸ்லாமிய வாழ்வு முறையாக மாற்றுகின்ற பொறுப்பும் அந்த வாழ்வு முறையின் கவர்ச்சியால் மற்றச்சமூகங்களையும் அல்லாஹ்வின் தூதின் பக்கம் இழுத்தெடுக்கும் பொறுப்பும் எம்முடையதென்பதை நாம் மறந்து விட முடியாது.
என்றும் அப்போது தான் "விசுவாசிகளே! உங்களை நீதியான சமூகமாக்கினோம். உங்கள் தூதர் உங்களுக்கும், நீங்கள் மற்றைய சமூகங்களுக்கும் முன்மாதிரியாக உள்ளீர்கள்"(2:143) என்ற குர்ஆனின் கூற்றை உண்மைப்படுத்தியவர்களாவோம் என்பதையும் இந்நூல் தெளிவுபடுத்துகிறது.
இலங்கை முஸ்லிம்கள் உலக முஸ்லிம் சமூகத்தின் ஓரங்கம் என்பதையும் இந்நூல் சுட்டிக்காட்டுகிறது. இலங்கை முஸ்லிம்களென நாம் சிந்திப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வாறே நாம் உலக முஸ்லிம் சமூகத்தின் ஓர் அங்கமென்ற உணர்வை மனதில் கொள்வதாகும் என்று கூறும் அதே சந்தர்ப்பத்தில் ஆத்மீகத் தலைமைத்துவம் வேறு. அரசியல் தலைமைத்துவம் வேறு எனப்பிரித்துக் கொண்டதனால் ஆத்மீகப் பண்புகளுக்கு மாறுபட்ட அரசியல் தலைமைத்துவத்தை அந்தக்கூரியமுள்ளான கிரீடத்தை எமது தலைகளிலே நாம் சூடிக்கொண்டிருப்பது எவ்வளவு தூரம் புத்திசாலித்தனமானது என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
அத்துடன், அரசியல் விவகாரங்களில் அக்கறை எதுவுமின்றி இருந்ததன் காரணமாக, எமது ஆத்மீகத் தலைமைத்துவத்தை அரசியல்வாதிகள் பகடைக்காயாகப் பாவித்ததையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறது. நாடு சுதந்திரம் பெற்றதன் பின்னுள்ள முஸ்லிம் சமூக வரலாற்றையும் சமூகம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் சவால்களையும் பிரஜாவுரிமை சட்டம் தொடர்க்கம் வடக்கு - கிழக்கு மாநிலத்தில் முஸ்லிம் சமூகத்துன் நிச்சயமற்ற எதிர்காலம் வரைக்கும் ஒவ்வொன்றாகத் தெளிவாகக் குறிப்பிட மறக்கவில்லை.
இதற்கான காரணம் நமக்கிடையே ஒற்றுமையின்மையும் இஸ்லாமிய அடிப்படையிலான அரசியல் தலைமைத்துவம், பிரதிநிதித்துவம் என்பன இல்லாமையென்பதைச் சுட்டிக்காட்டுவதனூடாக முஸ்லிம் காங்கிரஸின் முக்கியத்துவத்தை உணர்துவதற்கு முற்படுகிறது.
சுதந்திரமான அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெறுகின்ற அதே வேளை, புனித குர்ஆனின் பக்கமும் பெருமானார் (ஸல்)அவர்கள் காட்டிய வழிமுறைகளின் பக்கமும் முஸ்லிம் சமூகம்தை வழி நடாத்த முடியும் என்பதோடு, வெகு விரைவில் எல்லா மட்டங்களிலும் புதிய தலைமைத்துவத்தை உருவாக்க முடியும் "எந்தத்தலைவர் தொழுகையில் இமாமாக நின்று அல்லாஹ்வை அணுகுவதற்கு வழி காட்டுகின்றாரோ, அதே தலைவர் எமது அரசியல் தலைவராக மாறுகின்ற ஓர் இஸ்லாமிய அமைப்பை இன்ஷா அல்லாஹ் எம்மால் ஏற்படுத்த முடியும்" என்பதன் ஒரு உயர்வான இலட்சியங்களோடு இந்தக்கட்சி உருவாக்கப்பட்டதை உணரக்கூடியதாகவுள்ளது.
அதே போல், இரு கட்ட வேலைத்திட்டம் அதாவது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பணி இரு கட்டங்களைக் கொண்டதாகும். முதல் கட்டமாக இலங்கை முஸ்லிம் சமூகத்தை ஒற்றுமைப்படுத்தும் வேலையும் அடுத்து முஸ்லிம் சமூகம் முழுமையான ஷரீஆ அடிப்படையில் தனது கூட்டுச்சமூக வாழ்வை அமைத்துக் கொள்ள வழி செய்தல் என இரு கட்டப்பணிகளை முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்கிறது.
எனவே 'எமது பார்வை' என்ற நூலினூடாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டு, முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் அரசியல் அதிகாரத்திற்கான ஆணையைக் கோருவதற்கு அதற்கான நியாயங்களையும் அதனூடாக முன்னெடுக்கவிருக்கும் திட்டங்களையும் விளக்குவதாக இந்நூல் அமைந்துள்ளது.
நான் இதிலுள்ள விடயங்கள் சிலதை மேலோட்டமாகக் குறிப்பிட்டுள்ளேன். இவைகளை ஆழமாக வாசித்து விளங்குவதற்கு நூலைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இந்நூல் கிடைக்கப்பெற்றவர்கள் மற்றவருக்கும் கொடுத்து உதவுங்கள். இந்நூலை வாசிக்கும் போது ஒரு இஸ்லாமிய நூலை வாசிக்கும் உணர்வையும் விளக்கத்தையும் பெறுவீர்கள்.
ஆனால், இவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதா? இப்போதும் நடைமுறையிலிருக்கிறதா? இந்நூலில் சொல்லப்பட்டதற்கும் நடைமுறையில் இருப்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசத்தை உணரலாம். நூலில் சொல்லப்பட்டது இதுவரைக்கும் நடைமுறைக்கு வராதது நமது துரதிஷ்டமாக இருந்த போதும், இதனை நடைமுறைப் படுத்துவதற்காக நீண்ட கால இடைவெளியின் பின்னர் மீள் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. கடந்த கால விடயங்களைப் பேசி தர்க்கித்துக் கொள்ளாமல் எதிர்கால சந்ததிகளுக்காக இந்நூலிலுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் இதற்கான முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு உதவி செய்வதற்கும் முன்வாருங்கள்.
குறிப்பாக, இளைஞர்கள் இந்த இயக்கத்தின் நோக்கத்தை நடைமுறைப்படுத்த தலைமைக்கு பக்க பலமாக செயற்படத் தயாராகுங்கள். முயற்சிகள் வெற்றி பெற இறைவன் உதவி செய்வானாக!