ஆதிப் அஹமட்-
நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீனின் வேண்டுகோளின் பெயரிலும் முழு முயற்சியிலும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான றவூப் ஹக்கீமின் ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் மிகவும் நவீன முறையிலான சிறுவர் பூங்கா காத்தான்குடி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டு வருகின்றது.
மிகவும் நவீன முறையில் இந்த சிறுவர் பூங்காவினை வடிவமைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு உலகிலே சிறுவர் பூங்கா உபகரணங்களை வடிவமைப்பதில் தலை சிறந்த நிறுவனமான அரிக்கன் டொட் கொம் என்கின்ற இந்திய நிறுவனத்திற்கு இவ்வேலைத் திட்டங்கள் ஒப்படைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.அதன் அடிப்படையில் இந்திய நாட்டின் பம்பாய் பிரதேசத்தினைச் சேர்ந்த பொறியியலாளர் ஜோன் தலைமையிலான இலங்கை நாட்டைச் சேர்ந்த இரண்டு பொறியியலாளர்கள் அடங்கிய குழுவினர் இந்த பூங்காவிற்கான உபகரணங்களை பொருத்துகின்ற வேலைகளில் தற்போது ஈடுபட்டிருக்கின்றார்கள்.
ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு கோடி ரூபாயில் ஐம்பது இலட்சம் ரூபாய் வடிகான் அமைப்பு,நிலம் நிரப்புதல்(Filling)மற்றும் வேலி அமைக்கவென ஒதுக்கப்பட்டதோடு மீதி ஐம்பது இலட்சம் சிறுவர் விளையாட்டு உபகரணங்களை நிறுவவும் ஒதுக்கப்பட்டிருந்தது.இதே போன்று நவீன முறையிலான சிறிய சிறுவர் பூங்காக்கள் பாலமுனை ,செல்வா நகர் மற்றும் காங்கேனோடை ஆகிய இடங்களிலும் தலா முப்பது இலட்சம் ரூபா செலவில் முபீன் அவர்களின் முழு முயற்சியில் அமைச்சர் றவூப் ஹக்கீமின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டு அதற்கான வேலைகள் முடிவடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.