ஐ.ஏ.காதிர் கான்-
கம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும் நிலையில், கம்பஹா மாவட்ட வைத்திய சாலைகளில் சிகிச்சை பெறுவோரைப் பார்க்க வருவதை, இயலுமானவரை தவிர்ந்து கொள்ளுமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
கம்பஹா, நீர்கொழும்பு தள வைத்தியசாலைகளில் டெங்குத் தாக்கத்திற்குள்ளானோரும், தங்கிச் சிகிச்சை பெறுவோறும் அதிகம் உள்ளனர். இவர்களைப் பார்ப்பதற்காக சிறுவர்கள், முதியோர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் உடல் பலவீனமானவர்கள் வந்து போகின்றனர். எனினும், இச் சந்தர்ப்பத்தில் இவ்வாறானவர்கள் வைத்தியசாலைகளுக்கு வருவதை இயன்றளவு தவிர்க்குமாறு, வைத்திய நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இவ்வாறு வருபவர்களும் டெங்கு தொற்றுக்கு உள்ளாகுவதாக இனங்காணப்பட்டிருப்பதால், இந்த ஆலோசனை முன் கூட்டியே வழங்கப்படுவதாகவும், இந்த அறிவுறுத்தல் மிக முக்கியம் என்பதைக் கருத்தில் கொண்டு, வைத்தியசாலைகளுக்கு சமூகமளிக்கும் அனைவரும் இதன்படி செயற்படுமாறும் டாக்டர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, டெங்கு தாக்கத்திற்குள்ளானோர்களால், நீர்கொழும்பு தள வைத்தியசாலையின் டெங்கு தொற்றுப் பிரிவு வார்ட் நிரம்பி வழிவதாலும், போதிய இடமின்மை காரணமாகவும், இங்கு கொண்டுவரப்படும் டெங்கு நோயாளர்கள் அனைவரும் கம்பஹா தள வைத்தியசாலைக்கு திருப்பி அனுப்பப்படுவதாகவும், அங்கிருந்து கிடைக்கும் நம்பத் தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன.