பாறுக் ஷிஹான்-
தேசிய ரீதியான கட்சி மட்டுமன்றி இன மத பேதமின்றி அனைத்து மக்களையும் சமமாக மதிக்கின்ற கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கோப்பாய் தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் காரியாலயத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (16) மாலை நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவிக்கையில்;
நாட்டில் பல்வேறு கட்சிகள் காணப்படுகின்றன அவை ஒவ்வொன்றிலும் இளைஞர்கள் தமது விருப்பத்திற்கேற்ப தம்மை பிரதிநிதித்துவப்படுத்திக் கொள்கிறார்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்ற வகையில் சிலர் அதனை அரசாங்கத்தின் கட்சி என கருதி அதனை புறம் தள்ளுவதற்கும் முயற்சிக்கின்றார்கள்.
நாட்டின் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது இன, மத, மொழி பேதங்களைக் கடந்து நாட்டின் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் மாபெரும் கட்சியாகும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தான் அங்கம் வகிப்பதன் மூலம் தனது அரசியல் பயணம் படிப்படியாக வளர்ச்சி அடைந்து வந்துள்ளதாகவும், அதற்கு மக்களின் ஆதரவே காரணம் என்றும் பணத்திற்காக சிலர் கட்சிகளில் அங்கம் வகிக்கும் தற்போதையசூழலில் மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டே தாம் சேவையாற்றுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்ப்பாண மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.
கோப்பாய் தொகுதிக்கான காரியாலயத்தினை நீதி அமைச்சின் பிரதி அமைச்சர் துஸ்மந்த மித்ரபால திறந்து வைத்துள்ளார். மேலும், இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் பிரத்தியோக செயலாளர் சதாசிவம் இராமநாதன், கட்சியின் அமைப்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.