தம்பி ஹரீசின் அறிக்கை அவரது அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது - உதுமாலெப்பை

முஸ்லிம் சமூகத்தின் மூத்தபோராளிகளையும் புத்திஜீவிகளையும் அரசியல் ஆர்வலர்களையும் ஒன்று கூடுமாறு தேசியகாங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அல்ஹாஜ். ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் அழைப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும் அவசர அவசியமானதுமாகும். குறுகிய அரசியல் நோக்கைக் கொண்டு இவ்வழைப்பினை மக்கள் நிராகரிக்குமாறு கோருவது தம்பி ஹரீஸின் அரசியல் முதிர்ச்சி இன்மையையே காட்டுகின்றது.

தமிழ்பேசும் மக்களின் அரசியல் விடுதலைக்காக தந்தை செல்வா, அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்ற மூத்த தலைவர்களுடன் அரசியற் செயற்பாடுகளில் ஈடுபட்டும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விடுதலைக்கான தூதினை தலைவர் அஷ்ரஃப் அவர்களோடு சேர்ந்தும் சுமந்தும் அதற்காக உழைத்தவன் என்றவகையில் இந்தக் காலகட்டத்தில் முஸ்லிம்களின் அரசியல் விடுதலைக்கான அமைச்சர் அதாஉல்லாவின் முன்னெடுப்பு இன்றியமையாதது என்பதனை பதிவிட விரும்புகின்றேன்.

ஆகையினால் இவ்வரலாற்றுத் தேவைக்காக ஒன்றுகூடுமாறு முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர்கள் விடுத்திருக்கின்ற அழைப்பினை முஸ்லிம் சமூகத்தின் மூத்த அரசியல் தலைமைகளும், சமகால அரசியற் செயற்பாட்டாளர்களும், இளைஞர்கள், உலமாக்கள், புத்திஜீவிகளும் மனமுவந்து ஏற்றுக் கொண்டு இதற்கு இதயசுத்தியாக ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் கோருகிறேன்.

நான் இன்று மரணித்தாலும் எனக்குக் கவலையில்லை. அடுத்த தலைவன் யார் என்பதனை அதாஉல்லாவின் பேச்சில் நான் கண்டுகொண்டேன். அல்ஹம்துலில்லாஹ் என்று அக்கரைப்பற்றில் நடைபெற்ற கூட்டமொன்றில் பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பகிரங்கமாக கூறியிருந்த மேடையில் நானும் சாட்சியாக இருந்தேன். இன்னும் இது பற்றிப் பேசிய சந்தர்ப்பங்களுமுண்டு. தலைவர் அஷ்ரஃப் அவர்களால் நம்பிக்கைவைத்து பேசப்பட்ட இந்த மூத்தபோராளி அதாஉல்லா அவர்கள் முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் பலதடயங்களை ஏற்படுத்தியிருக்கின்றார். அவைகளும்நமது வரலாறாகும். அப்படிப்பட்ட மூத்தபேராளி இன்று சமூகத்தின் விடுதலைக்காய் முன்னின்று அழைப்புவிடுப்பது பொருத்தமானதும் ஆரோக்கியமானதும் என்பதனை இங்கு நான் சுட்டிக்காட்டவிரும்புகிறேன்.

மேலும் தலைவர் அஷ்ரஃப் அவர்களோடு நேரடியாகசுமார் ஒரு தசாப்தகாலத்திற்கும் மேலாக அரசியல் பாசறையில் புடம்போடப்பட்டு அவரது கொள்கைக் கோட்பாடுகளில் இருந்து அணுவளவும் பிசகாது 30 வருடங்களாக சமூகவிடுதலைக்காக போராடிவரும் தலைவர் அதாஉல்லாவை, முஸ்லிம் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் முதலும் முடிவும் தெரியாமல் பாராளுமன்றம் செல்வதற்காக மாத்திரம் முஸ்லிம் காங்கிரஸைப் பாவித்துக் கொண்டிருக்கும் தம்பி ஹரீஸும் அவர் போன்றோரும் கேள்விகேட்பது சிறுபிள்ளைத்தனமானதாகும்.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கெதிரான புறச்சக்திகளின் ஆளுகைக்குட்படாது, பணத்திற்கும் பதவிகளுக்கும் சோரம் போகாமல் ஆணித்தரமான அரசியல் தீர்மானங்களை மேற்கொண்டவர் அதாஉல்லா. முஸ்லிம்கள்;, இந்தநாட்டின் மீது வைத்திருக்கின்ற விசுவாசத்தையும் பெரும்பான்மை சமூகம் முஸ்லீம்கள் மீது வைத்திருக்கின்ற நல்லெண்ணத்தையும் பாதுகாக்க வேண்டும் என்கின்ற யதார்த்தத்திற்காக அரசியல் நிலைப்பாடொன்றினை எடுத்து அதன் மூலம் தனதுபாராளுமன்ற உறுப்புரிமையையும் அமைச்சுப் பதவியையும் இழப்பதற்குத் துணிந்தவர். இது முதலாம் முறை அல்ல. இதற்கு முதலும் பிரதி அமைச்சுப் பதவியையும், பாராளுமன்ற உறுப்புரிமையையும் முறையே இராஜினாமாச் செய்தும் காலத்தைச் சுருக்கியும் வரலாற்றில் தடம் பதித்தவர்.

முஸ்லிம்களுக்கெதிரான புறச் சக்திகளின் ஆளுகைக்குட்பட்ட ஊடகங்களினாலும், பணத்திற்கும் பதவிக்கும் தனிப்பட்ட விருப்புவெறுப்புக்கள் என்பவற்றிற்கும் விலைபோன முஸ்லிம் அரசியல் தலைமைகளாலும் முஸ்லிம் சமூகம் பிழையாக வழிநடாத்தப்பட்ட பொழுதுகளிலெல்லாம் தலைவர் அஷ்ரஃப் அவர்களைப்போலவே மிக ஆழமாக சிந்தித்து நிதானித்து பக்குவமாக நிலமைகளை கையாண்ட ஒரு தலைமகன்தான் அதாஉல்லா அவர்கள்.

எனவே, தலைவர் அதாஉல்லா அவர்களின் அழைப்பை ஏற்று முஸ்லிம் சமூகத்தின் புத்தி ஜீவிகளும் முதிர்ந்த அரசியற் தலைமைகளும் அரசியற் வேறுபாடுகளுக்கப்பால் சமூகத்திற்காய் சிந்திப்பதற்கு ஒன்றாய் அணிதிரள ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

கோடிகளும் சீடிகளும் பற்றியகதைகள் உலாவுகின்ற இந்தகாலகட்டத்தில் தனது பதவியை மாத்திரம் காப்பாற்றிக் கொள்வதற்காக ஹக்கீமுடன் கைகோர்த்துள்ள தம்பி ஹரீஸும் அவரைப் போன்ற இன்னும் சிலரும் அதாஉல்லாவுக்கு எதிரானகருத்துக்களை முன்வைப்பதை இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளமாட்டாது என நினைக்கிறேன். இன்னும் தாழுகின்ற கப்பலுக்குள் தான் இருப்பதனை தம்பி ஹரீஸ் புரிந்துகொள்வார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -