மணம் முடித்தவர்களுக்கு சரியானதொரு ஒழுக்கக்கோவையை அமைக்க வேண்டும் - அமைச்சர் ஹக்கீம்

பிறவ்ஸ்-
முஸ்லிம் தனியார் சட்டத்தில் விட்டுக்கொடுப்புகளை செய்யும்போது பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும். திருமணம் முடித்தவர்களுக்கு சரியானதொரு ஒழுக்கக்கோவையை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் விவாக, விவாகரத்து தொடர்பான விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகள், நேற்றிரவு (14) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சந்தித்து கலந்துரையாடும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு அமைச்சர் மேலும் கூறுகையில்,

முஸ்லிம் தனியார் சட்டத்தில் சர்ச்சைகளாக இருக்கின்ற பிரச்சினைகளுக்கு அப்பால், தீர்க்கக்கூடிய பிரச்சினைகளுக்கு முதலில் இனம்கண்டு அவற்றைத் தீர்க்கவேண்டும். அதேவேளை, முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் முன்வைக்கப்படும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்வுகாண்பது என்பது தொடர்பில் முதலில் கவனம் செலுத்தவேண்டும். வறுமை காரணமாகவே அதிகளவில் இளவயது திருமணங்கள் நடக்கின்றன. அதனை நிவர்த்திக்கும் வழிமுறைகளை தேடவேண்டும் என்று குறிப்பிட்டார்.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், அதற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் இணக்கம் தெரிவித்துள்ளது. ஆனால், அந்த திருத்தங்கள் ஷரீஆ சட்டத்துக்கு முரண்படாத வகையில் இருந்தால் மாத்திரமே, அதற்கு அனுமதியளிப்பது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக உலமா சபை இதன்போது சுட்டிக்காட்டியது.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் கட்டாயம் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென சில மகளிர் அமைப்புகள் சார்பிலும், சில பெண்ணியல் செயற்பாட்டாளர்கள் சார்பிலும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு பதிலளிக்கும் வகையிலும், உலமா சபை மேற்கொள்ள தீர்மானித்திருக்கும் விடயங்களை தெளிவுபடுத்தும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ள ஆவணமொன்று அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் உலமா சபையினால் கையளிக்கப்பட்டது.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் உலமா சபை மேற்கொள்ளவுள்ள திருத்தங்களை அரசியல்வாதிகள் மூலம் அரசாங்கத்துடன் பேசுவதற்கும், மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்கும் தீர்மானித்துள்ளதாக உலமாசபை பிரதிநிதிகள் தெரிவித்தனர். இந்த திருத்தம் தொடர்பாக தமது நிலைப்பாட்டை பாராளுமன்றத்தில் பேசுமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் உலமா சபை கோரிக்கை விடுத்தது.

திருமண வயதெல்லையில் கட்டுப்பாடு, பெண் காதிகளை நியமித்தல், பெண் பதிவாளர்களை நியமித்தல், ஷவலி| இல்லாமல் பெண்ணின் விருப்பத்துடன் திருமணம், பலதார திருமண கட்டுப்பாடு போன்றவற்றை தனியார் சட்டத்தில் திருத்துமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

திருமண வயதெல்லை என்ற விடயத்தில், பருவமடைந்ததும் திருமணம் செய்துகொள்ள இஸ்லாம் அனுமதித்துள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்கள் திருமணம் முடிப்பதற்கு தடை என்று நிபந்தனை விதிக்காமல், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் திருமணம் முடிக்கலாம் என்று சிபார்சு செய்யப்பட்டது. இதேவேளை, பராமரிப்பதற்கு ஆளில்லாதவர்கள், சொத்துகளை கையாள்வதற்கு உரிய வயதை அடையாதவர்கள் என்று 18 வயதுக்குட்பட்டவர்கள் திருமணம் முடிப்பதை தடைசெய்ய முடியாது என்றும் வலியுறுத்தப்பட்டது.

2011 - 2016 வரையான காலப்பகுதியில் 14,737 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 5 சதவீதமானோர் மாத்திரமே 17 வயதுக்குட்பட்ட வயதில் திருமணம் முடித்துள்ளனர். வடக்கிலிருந்து புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழ்வோர் அதிகளவில் இருப்பதினாலும், வறுமை காரணமாகவுமே அப்பகுதியில் அதிகளவில் இளவயது திருமணங்கள் நடப்பதாக சுட்டிக்காட்டப்பட்டன. அதேவேளை, இலங்கையில் ஒரு நாளைக்கு 16 வயதுக்கு குறைந்த 6 பேர் சராசரியாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுவதாக புள்;ளிவிபரங்கள் கூறுகின்றன. 

அத்துடன், பெண்கள் தரப்பு பிரச்சினைகளை முன்வைப்பதற்காக காதி நீதிபதிகளுக்கு துணையாக பெண்களை நியமித்தல், பள்ளிவாசல்களை அண்டியவாறு திருமணம் சம்பந்தமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு மத்திய நிலையத்தை ஸ்தாபித்தல், தலாக் சொல்லப்பட்ட பெண்களுக்கான வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல், திருமண பதிவாளர்களுக்கான விழிப்புணர்வூட்டல் போன்ற பல கோரிக்கைகள் உலமா சபையினால் முன்வைக்கப்பட்டன.

மகளிர் தொடர்பான விவகாரங்களை கையாள்வதற்காக ஜம்இய்யத்துல் உலமாவில் விசேட பிரிவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றின்மூலம் விவாகம் மற்றும் விவாகரத்தினால் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன்மூலம் பிரிந்துபோகவிந்த பெண்கள் பலர் அவர்களது கணவன்மாருடன் சேர்த்துவைக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டது.

இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான அமைச்சர் ரவூப் ஹக்கீம், மு.கா. பிரதி செயலாளர் நாயகம் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், கட்சியின் வெளிநாட்டு விவகார பணிப்பாளர் சட்டத்தரணி ஏ.எம். பாயிஸ் ஆகியோரும் ஜம்மிய்யத்துல் உலமா சார்பில் பொதுச் செயலாளர் மௌலவி எம்.எம்.ஏ. முபாறக், பொருளாளர் மௌலவி ஏ.எல்.எம். கலீல், உதவி பொதுச் செயலாளர்களான மௌலவி எம்.எஸ்.எம். தாஸீம், மௌலவி முர்ஷித், நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான மௌலவி எஸ்.எல். நௌபர், மௌலவி முஹம்மட் பவாஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -