முஸ்லிம் தலைமைகளை நம்புவதைவிட வீதியில் இறங்கிப் போராடுவது மேல் - சுபையிர் MPC

எம்.ஜே.எம்.சஜீத்-
முஸ்லிம்களுடைய உரிமைகளை பெற்றுக்கொள்ளும் விடயத்தில் ஒருபோதும் முஸ்லிம் அரசியல் தலைமைகளை நம்பிவிட முடியாது. மாறாக வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவதன் ஊடாகவே முஸ்லிம் சமூகம் தங்களது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.

ஏறாவூர் அல்-ஜிப்ரியா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலை அதிபர் எம்.எம் மௌஜூத் தலைமையில் ஏறாவூர் ஆற்றங்கரை அஹமட் பரீட் விளையாட்டு மைதானத்தில் நேற்று (17) கோலாகலமாக நடைபெற்றது.

இதன்போது கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபையிர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் இல்ல விளையாட்டுப் போட்டிகள் எமக்கு இலகுவாக தெரிந்தாலும் இந்நிகழ்வுகள் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் கடும் உழைப்பினாலும், அத்தோடு பெருந்தொகைப் பணம் செலவிட்டும் நடாத்தப்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். பல அர்ப்பணிப்புகளுக்கு மத்தியில் நடாத்தப்படும் இவ் இல்ல விளையாட்டுப் போட்டிகளின் மூலம் மாணவர்கள் பல விடயங்களை கற்றுக்கொள்கின்ற ஒரு நிகழ்வாக இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இன்று நாங்கள் பத்திரிகை, தொலைக்காட்சிகளைப் பார்க்கின்ற போது மாணவர்கள் போதைவஸ்துப் பாவனையாலும், பாலியல் ரீதியான பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்துவருவதுடன் தொற்று நோய்களினாலும் பாதிக்கப்படுவதனையும் எமது கண்களினூடாகப் பார்க்கின்றோம்.

ஆகவே நல்ல உடல் ஆரோக்கியமுள்ள மாணவர் சமூகத்தை உருவாக்குவதற்கு விளையாட்டு, உடற்பயிற்சி மற்றும் முறையான உணவுப் பழக்கங்கள் தொடர்பில் மாணவர் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் உண்டு.

குறிப்பாக இன்று எமது முஸ்லிம் சமூகம் முஸ்லிம் அரசியல் தலைமைகளால் கைவிடப்பட்டவர்களாகவும், உட்கட்சிப் பூசலால் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பிளவுபட்டு இன்று நீதி மன்றங்களில் நின்றுகொண்டும், சமூக வலயத்தளங்களளிலும் மிகக் கேவலமாக ஆளுக்கால் விமர்சித்துக்கொண்டிருப்பதனையும் முஸ்லிம் சமூகம் மிக உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கிறது.

முஸ்லிம் சமூகம் இன்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற தேர்தல் முறை மாற்றம், புதிய அரசியலமைப்பு, இனப்பிரச்சினைக்கான தீர்வு, வட, கிழக்கு இணைப்பு போன்ற முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தி முஸ்லிம் தலைமைகள் எவ்வாறான தீர்வுகளைப் பெற்றுத்தரப் போகிறது எனும் எதிர்பார்ப்பில் முஸ்லிம் சமூகம் இருக்கிறது. ஆனால் அதற்கான எந்தவிதமான ஆயத்தங்களும் இல்லாமல் வெறுமனே உட்கட்சிப் பூசலில் எமது தலைமைகள் சிக்குண்டுள்ளதனை அவதானிக்க முடிகின்றது.

விசேடமாக கிழக்கு மாகாண முஸ்லிம்களுடைய காணிப்பிரச்சினைகளை தீர்ப்பது பற்றி முஸ்லிம்களின் 99வீதமான ஆதரவினால் ஆட்சியமைத்திருக்கின்ற நல்லாட்சி அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. குறிப்பாக காணிப் பிரச்சினைகளினால் சன நெரிசல் காரணமாக கிண்ணியா, பொத்துவில் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பிரதேசங்களிலும் எமது மக்கள் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகி மரணிக்கக் கூடிய நிலமைகளும் உருவாகியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சராகவிருக்கும் ரவூப் ஹக்கீம் பொத்துவில் காணிப்பிரச்சினை தொடர்பில் நீதிமன்றம் செல்வேன் எனக்கூறிய விடயமும், அதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் காணித் தேவைகள் இருந்தும் அதனை அரசாங்கம் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்போடு கையகப்படுத்தும் நிலமையும் மேலும் திருகோணமலை மாவட்டத்தில் சன நெரிசளினால் தொற்று நோய் பரவும் நிலைமையும் முஸ்லிம் சமூகத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

குறிப்பாக இந்த நல்லாட்சியில் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் திணைக்களத்தினர் அடையாளப்படுத்துகின்ற வேலைகளையே செய்துகொண்டிருக்கினறனர். இவ்வாறான விடயம் தொடர்பில் எமது தலைமைகள் கவனம் செலுத்தாது தங்களது பதவிகளை பாதுகாப்பதிலே கவனம் செலுத்தி வருகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் கிழக்கு மாகாண முஸ்லிம் சமூகம் தங்களது உரிமைகளை பெற்றுக்கொள்ளும் விடயத்தில் சாத்வீகப் போராட்டங்களையே நடாத்த வேண்டியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -