அப்துல்சலாம் யாசீம்-
ஜந்து இலச்சம் ரூபாய் காசோலையை மோசடி செய்தவருக்கு ஒரு வருட கடூழிய சிறை தண்டனை வழங்குமாறு திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா கடந்த வௌ்ளிக்கிழமை உத்தரவிட்டார். இவ்வாறு கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளவர் ஆத்திமோட்டை- ஜாஎல பகுதியைச்சேர்ந்த ஜே.கே.ஜே.ஜெயக்கொடி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
2007-07-02ம் திகதி தம்பலகாமம்-கெமுனுபுர பகுதியைச்சேர்ந்த பீ.அவிந்த என்பவரினால் திருகோணமலை விஷேட குற்றத்தடுப்பு பிரிவில் ஜந்து இலச்சம் ரூபாய் காசோலை மோசடி செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்நது. இம்முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட விஷேட குற்றத்தடுப்பு பிரிவினர் திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கு குற்றவியல் நடை முறை சட்டக்கோவைப்பிரிவின் கீழ் விசாரணை நடாத்தப்பட்ட போது எதிரி நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காமையினால் வழக்கு தொடுனரினால் அனைத்து சாட்சியங்களும் நெறிப்படுத்தப்பட்டு எதிரிக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டமையினால் எதிரி குற்றவாளி என இணங்காணப்பட்டுள்ளார்.
முதலாவது குற்றத்திற்கு 01 வருட கடூழிய சிறை தண்டனையும் 1500 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அப்பணத்தை செலுத்த தவறும் பட்ஷத்தில் 02 மாத சிறை தண்டனை வழங்குமாறும் இரண்டாவது குற்றசாட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அதனை செலுத்த தவறும் பட்ஷத்தில் 06மாத கால கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
குற்றவாளி என நிரூபிக்கப்ட்டவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்ட்ட நிலையில் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காமல் தலைமறைவாகியிருந்த போது சாட்சிகள் விசாரிக்கபட்டு திறந்த நீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்ட்டது. இதேவேளை குற்றவாளியை உடனடியாக கைது செய்து வழங்கப்ட்ட தண்டனையை அமுல்படுத்துமாறும் திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா விஷேட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டார்.
![](https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif)