அரச தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமித்தல், இடமாற்றம் செய்தல் உட்பட குறித்த பாடசாலையுடன் தொடர்புடைய 10 நடவடிக்கைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கல்வி அமைச்சர் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளார்.
இது தொடர்பான அறிவித்தல், அமைச்சின் கீழ் உள்ள சகல மேலதிகச் செயலாளர்களுக்கும், திணைக்களங்களுக்கும், நிறுவன பிரதானிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
அத்துடன், ஊடகங்களுக்கு அறிவித்தல்களை விடுத்தல், சுற்றுநிருபங்களை வெளியிடுதல், பாடசாலை கட்டிடங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கல்வி உபகரணங்களை வழங்குதல் என்பவற்றுக்கும் கல்வி அமைச்சரின் நேரடி அனுமதி பெறப்படுதல் வேண்டும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்ப பீடம் அமைத்தல், அதனுடன் தொடர்பான நடவடிக்கைகள், கல்வியுடன் தொடர்புடைய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுதல் போன்றவற்றுக்கும் கல்வி அமைச்சரின் அனுமதி அவசியமாகும்.
அமைச்சின் கொள்கைகளுக்கு மாற்றமாக செயற்படுவதாக கிடைக்கப் பெற்ற தகவல்கள் உறுதி செய்யப்பட்டதன் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.