க.கிஷாந்தன்-
நுவரெலியா மாவட்ட பசும்பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கடந்த இரண்டு நாட்களாக பசும்பால் கொள்னவு செய்யாததனால் பால் பண்ணையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து சேர்க்கப்பட்ட சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் லீற்றர் பால் சேகரிப்பு நிலையங்களில் தேங்கி கிடப்பதாகவும் இவை தற்போது பழுதடையும் நிலையில் இருப்பதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா மாவட்ட பசும் பாலினை பெலவத்த என்ற நிறுவனத்திற்கே வழங்கப்பட்டு வந்தாகவும் அந்நிறுவனத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக அவர்கள் பால் கொள்வனவு செய்வதனை நிறுத்தியுள்ளதால் பிரதான பால் சேகரிப்பாளர்கள் பால் கொள்வனவினை நிறுத்தியுள்ளனர்.
இதனால் 21.04.2017 அன்று காலையிலிருந்து மாலை வரை பிரதேச பால் சேகரிப்பாளர்கள் தாங்கள் சேகரித்த பாலினை பெற்றுக்கொள்ளுமாறு ரொத்தஸ் பால் பண்ணையில் அருகாமையில் நின்றிருந்ததுடன் அவர்கள் பால் பெறாததால் பத்தாயிரம் லீற்றர் பால் வீணாக ஓடைக்கு விடுவிக்கப்பட்டன.
இது குறித்து பால் சேகரிப்பாளர்கள் கருத்து தெரிவிக்கையில் கடந்து நில தினங்களாக பெலவத்த பால் கொள்வனவு நிலையம் பசும் பாலினை கொள்வனவு செய்வதை நிறுத்தியுள்ளதால் எங்களிடமிருந்து பால் எடுப்பதை இவர்கள் நிறுத்தியுள்ளார்கள் நாங்கள் நூற்றுக்கணக்கானோர் இந்த பசும்பாலினை நம்பி தான் வாழ்கிறோம்.
பலர் கடன்பெற்று தான் இந்த சுய தொழிலினை செய்து வருகிறார்கள் ஆனால் திடீர் என்று பசும் பால் கொள்வனவு இடைநிறுத்தப்பட்டதால் நாங்கள் என்ன செய்வது அரசாங்கம் பால் உற்பத்தியினை பெருக்குமாறு கூறி ஆலோசனைகளை செய்து வருகிறது.
ஆனால் பாலினை கொள்வனவு செய்யாவிட்டால் எவ்வாறு பால் உற்பத்தியை பெறுக்குவது இது பிரதேச பால் சேகரிப்பாளர்களிடம் சுமார் பத்தாயிரம் இருபதாயிரம் என ஒரு லட்சத்து இருபதாயிரம் லீற்றர் தேங்கி பழுதடையும் நிலையில் உள்ளது.
இதனால் பால் உற்பத்தியாளர்களுக்கு சுமார் ஒன்பது மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. 22.04.2017 அன்று பசும் பால் கொள்வனவு செய்யாவிட்டால் தேங்கி கிடக்கும் பாலினை வீதியில் தான் கொட்ட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் இது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.