உலகில் மிக நீண்ட காலம் வாழ்ந்தவர் என்ற பெருமையுடன் காணப்பட்ட இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஏம்மா மொறானோ என்ற பாட்டிகளுக்கெல்லாம் பாட்டியான பெண்மணி கடந்த சனிக்கிழமை தனது வீட்டின் சாய்மானக் கதிரையில் அமர்ந்திருந்தவாறே தன் இறுதி மூச்சையும் இதயத் துடிப்பையும் நிறுத்திக் கொண்டார்.
இத்தாலி நாட்டின் பீட்மோண்ட் பிரதேசத்தில் 1899ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதியன்று யெம்மா மொறானோ பிறந்தார். கடந்த 1800-களில் பிறந்தவர்களில் உத்தியோகபூர்வமாக உயிர் வாழ்ந்து கொண்டிருந்த இறுதி நபர் யெம்மா மொறானோதான் என்று தெரியவருகிறது.
தான் நீண்ட காலம் வாழ்வதற்கான மூன்று காரணங்களைத் தனது மரணத்திற்கு முன்னம் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார் பாட்டி. முதலாவது தனது குடும்ப மரபணு காரணமாகயிருக்கலாமென்றும் 91 வயது வரை தனது தாயும் 100 வயதுக்கு மேல் தனது சில சகோதரிகளும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இரண்டாவது தனது உணவுப் பழக்கம் தன்னை நீண்ட நெடுங்காலம் இந்த உலகில் வாழச் செய்திருக்கலாமென்று தெரிவித்திருந்தார். தினமும் தான் மூன்று முட்டைகளை வேக வைக்காமல் உண்டு வந்ததாகவும் அதனாலேயே தனது ஆயுள் நீண்டதாக அமைந்திருக்கலாமென்றும் அவர் அபிப்பிராயப்பட்டிருந்தார். எப்போதாவது ஒருமுறைதான் காய்கறிகளை இந்தப் பாட்டி உண்டு வந்தாரென அவரது மருத்துவரான கார்லோ பாவா என்பவர் செய்தி நிறுவனங்களிடம் தற்போது கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
ஆனால், மூன்றாவது காரணமென்று அந்தப் பாட்டி தெரிவித்திருந்த காரணம்தான் சற்றுப் புதுமையானது. தனது கணவரை விட்டுப் பிரிந்து தான் தனிமையில் வாழ்ந்தது கூடத் தனது அதிக ஆயுளுக்குக் காரணமாக அமைந்திருந்தது என அவர் தெரிவித்திருந்தார். மிக மோசமான திருமண பந்தத்துக்குள் தான் சிக்கியிருந்ததாகவும் ஆனால், கணவரை உதறிவிட்டுத் தனிமையில் வாழ்ந்த போது நிம்மதியை உணர்ந்ததாகவும் அவர் சொல்லியிருந்தார். 26 வயதில் திருமணம் செய்த யெம்மா மொறானோ தனது 39 வது வயதில் கணவரைப் பிரிந்துவிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.