பாறுக் ஷிஹான்-
யாழ் வடமராட்சி துன்னாலை கிழக்கு வேம்படிப் பகுதியில் நேற்று (21) மாலை இரண்டு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற இந்த மோதலில் 12 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது;
நெல்லியடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துன்னாலை வேம்படிச் சந்திப் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. அங்கு வடமராட்சி துன்னாலை பகுதியில் உள்ள இரு குழுக்கள் இடையே மாலை இதன் போது மோதல் ஏற்பட்டு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இரு குழுக்களாக பிரிந்து அவர்கள் அங்கு மோதலில் ஈடுபட்டனர்.இந்த தாக்குதல்கள் 500இற்கும் மேற்பட்ட கண்ணாடியிலான சோடாப் போத்தல்கள் கற்கள் போன்றவற்றால் மாறிமாறி மேற்கொள்ளப்பட்டதுடன் சிலர் வாள்கள் மற்றும் கம்பிகளை வைத்திரந்ததாக நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டனர்.இதன் போது அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன் பொலிஸார் சம்ப இடத்துக்கு செல்வதற்குள் மோதல்கள் நிறைவடைந்தன.
மேலும் பொலிஸார் சம்பவ இடம் வருவதை அறிந்த மோதலில் ஈடுபட்ட குழக்கள் தப்பி ஓடினர்.இதன் போது இரு குழுக்களிலும் படுகாயமடைந்த 7 பேர் மந்திகை வைத்தியசாலையிலும் 4 பேர் பருத்திதுறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் சம்பவ இடத்திலிருந்து வாள் கம்பிகள் மற்றும் உடையாத சோடாப் போத்தல்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டன.மோதல் இடம்பெற்ற பகுதி வீதியில் கண்ணாடியிலான சோடாப் போத்தல்கள் உடைக்கப்பட்டு வீதி முழுவதும் பிசுங்கான் துண்டங்களாக காட்சி அளித்தது. பொலிஸாரின் வாகனம் அந்த வீதியால் பயணித்த போது சில்லு ஒன்றுக்கு காற்று போனமை குறிப்பிடத்தக்கது.
இந்த மோதலினால் பாதிக்கப்பட்ட அந்த வீதியை பொலிஸார் அறிவுறுத்தலில் நேற்றிரவு துப்பரவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு பொதுமக்களும் தமது ஒத்துழைப்பக்களை வழங்கினர். குறித்த தாக்குதலை தொடர்ந்து நெல்லியடி பருத்தித்துறை மற்றும் வல்வெடித்துறை பொலிஸார் இணைந்து நேற்று இரவு முழுவதும் மோதல் இடம்பெற்ற பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
நேற்று நள்ளிரவு 12 மணிவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. பொலிஸார் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.