2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பதற்கு அண்மித்த தினத்தில், நாமல் ராஜபக்ஷவின் நீலப்படை அணியின் இளைஞர்களுக்கு 14 மில்லியன் ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளது. தலைமைத்துவ பட்டறைக்கு கிடைத்திருந்த 14 மில்லியன் ரூபாய் பணத்தின் மர்மம் தொடர்பில், ஊழல் மோசடி மற்றும் அரசாங்க சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இருந்து 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி வரையில் இந்த பயிற்சி தேசிய இளைஞர் சபையில் நடத்தப்பட்டுள்ளது.
இதற்காக 35 லட்சம் ரூபாய் பணத்தை தேசிய இளைஞர் சபையே செலவிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அனைத்து சட்டத்திட்டங்களையும் மீறி அரசியல் கட்சி ஒன்றின் அவசியத்திற்காக தேசிய இளைஞர் சபையினால் இந்த பணம் செலவிடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த 14 மில்லியன் ரூபாய் பணம் இந்த பயிற்சிக்காக பெற்றக் கொண்டது எவ்வாறு என்பது இன்னமும் மர்மமாகவே காணப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கடந்த 31ஆம் திகதி ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அப்போதைய அமைச்சர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் சிலர் இது தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இந்த பட்டறையில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அந்த கட்சியின் முன்னாள் பொது செயலாளர் மைத்திரிபால சிறிசேனவும் கையொப்பமிட்டுள்ளனர்.