பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாஸீத்தை தாக்கி, பொலிஸாரின் ஜீப் வண்டியை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 06ஆவது சந்தேக நபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு, பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ. வாஹாப்தீன் இன்று (05) உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி வீதியால் சென்று கொண்டிருந்த பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் அமைப்பாளருமான எம்.எஸ். அப்துல் வாஸீத்தை ஒரு கும்மபல் ஒன்று வழிமறித்து தாக்கியதையடுத்து, அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸாரின் ஜீப் வண்டியையும் சேதப்படுத்திருந்தனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 05 நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு இவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இச் சம்பவத்துடன் தொடர்புடைய 06ஆவது சந்தேக நபர் கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ. வாஹாப்தீன் முன்னிலையில் இன்று மீண்டும் ஆஜர் செய்த போது, தொடர்ந்தும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். த.மி
-எம்.எஸ்.எம். ஹனீபா