மினுவாங்கொடை நிருபர்-
கம்பஹா மாவட்டத்திலுள்ள 14 பொலிஸ் நிலையங்களில், ஒரே இரவில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளின்போது, அறிமுகமில்லாத 265 சந்தேக நபர்களும், நீதி மன்றங்களில் பிடிவிராந்து விடுக்கப்பட்டிருந்த நிலையில் மறைந்திருந்த 32 பேரும், பாரிய குற்றங்களுடன் நேரடித் தொடர்புடைய மூன்று பேருமாக மொத்தம் 300 சந்தேக நபர்களைக் கைது செய்ய முடிந்ததாக, கம்பஹா பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி முதித்த புஸ்ஸெல்ல தெரிவித்துள்ளார்.
பொலிஸ் அதிகாரியின் விசேட பணிப்பின் பேரில், கம்பஹா பொலிஸ் நிலையம் 17 பேரையும், மினுவாங்கொடை பொலிஸ் நிலையம் 11 பேரையும், மீரிகம பொலிஸ் நிலையம் 27 பேரையும், நிட்டம்புவ பொலிஸ் நிலையம் 11 பேரையும், வெயாங்கொடை பொலிஸ் நிலையம் 15 பேரையும், யக்கல பொலிஸ் நிலையம் 34 பேரையும் கைது செய்துள்ளது.
இதேவேளை, 23 பேர் வெலிவேரிய, 9 பேர் கிரிந்திவெல, 4 பேர் பூகொடை, 27 பேர் கனேமுல்லை, 44 பேர் தொம்பை, 17 பேர் வீரங்குல, 9 பேர் பல்லேவெல, 17 பேர் மல்வத்து ஹிரிபிட்டிய ஆகிய பொலிஸ் நிலையங்களின் ஊடாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாரிய குற்றங்களுடன் நேரடித் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள மூன்று சந்தேக நபர்களை, கம்பஹா மற்றும் கிரிந்திவெல பொலிஸார் கைது செய்துள்ளனர். வீடுகள் மற்றும் கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக வெளியிடங்களிலிருந்து வந்திருந்த 265 சந்தேக நபர்களை ஏனைய பிரதேச பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமது ஆள் அடையாளங்களை உறுதி செய்ய முடியாமல் போன மேலும் 32 சந்தேக நபர்களிடமிருந்து விரல் அடையாளங்கள் பெறப்பட்டு, அவர்களின் வசமுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தபட்டு, மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகிறது.
பாரிய குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் பிடியானை பிறப்பிக்கப்பட்டவர்களை, குறித்த பொலிஸ் நிலையங்கள் ஊடாக நீதிமன்றங்களில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், கம்பஹா பிரதான பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.