- எமது இணையத்தளத்தில் வெளியான 'அட்டாளைச்சேனையில் உள்ள முதல் பட்டதாரி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி' என எழுதப்பட்ட செய்திக்கு பழீல் BA அவர்களால் எழுதப்பட்ட மறுப்பு விளக்கம் -
ஆம்! எமது அட்டாளைச்சேனை மண்ணின் வரலாறு முழுமையாக எழுதப்படல் வேண்டும்?..........
தொடர் – 2 ………….
பல்கலைக்கழக கல்வி, அல்லது படித்தவன் என்பது அவனின் பட்ட சான்றிதழிலோ…… அவனின் வரட்டு பெருமையிலோ…..விதண்டாவாதங்களிலோ அல்ல. ஆனால் அக்கல்வியின் பெறுமதியும், தெழிவுகளும், அதன் வழிகாட்டல்களும் அவனின் நாளாந்த செயற்பாடுகளிலும் பண்பாட்டிலும், மக்கள் சமுதாயத் தொடர்பாடல்களிலும் வெளிக்கொணரப்படல் வேண்டும்.அது சமுதாயத்திற்கு வழி காட்டுவதாயும் நன்மை பயப்பதாகவும் அமைய வேண்டும். இல்லாவிடில் அது யாருக்கும் பிரயோசனமற்ற ஏட்டுச் சுரக்க◌ாயாக மாறிவிடும்.
பட்டச் சான்றிதழைக் காட்டுமாறு நீங்கள் வேண்டியது எவ்வளவு சின்னத்தனமான, நாகரிகமற்ற பண்பாடற்ற செயல் என்பதை சற்று யோசியுங்கள்.…நீயா?....நானா?.... காட்டு பாப்பம்? என மோதல் பாங்கில் நீங்கள் கோரியிருப்பதே….. நீங்கள் பல்கலைக்கழகமென்ன … பாடசாலைகளில் மழைக்குக்கூட ஒதுங்காதவர்களின் பண்புகளை வெளிக்காட்டி நிற்கின்றன. அது இலேசான விடயமல்ல.
அது உங்களது வரட்டு கௌரவத்தின், குற்ற உணர்வின் மறுதலை வெளிப்பாடாகவே நாம் பார்க்க வேண்டியுள்ளது. அதை நான் உங்களிடம் காட்ட முனைவது, ‘குதிரையோடலும்’…. கலாநிதிச் சான்றிதழ்கள் கூட துட்டுக்காசுக்கு சந்தையில் மலிந்த இக்காலத்தில் நான் கற்ற புனித கல்விக்கும் அப்போது பல்கலைக்கழகத்திலே எனக்கு அறிவூட்டலைச் செய்த எனது மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய விரிவுரைப் பெருந்தகைகளுக்கும், நான் வகித்த ஒன்பதுக்கு மேற்பட்ட நிறைவேற்று நிர்வாக ஆற்றல் கொண்ட பதவிகளுக்கும் செய்யும் களங்கமாகுமென நினைக்கின்றேன். உயர் தரத்தில் மதிப்புக்குரிய அதிபர் திலகம், மர்ஹஶ்ம் ஜெமீல் சேர், பேராசிரியர் . மௌனகுரு சேர், இராஜலிங்கம் சேர் போன்றோரும், எனது பல்கலைக்கழக கற்கையில் கலாநிதி, பேராசிரியர் பெருந்தகைகளான பேராசிரியர். வி.செல்வநாயகம், பேராசிரியர். சு.வித்தியானந்தன், பேராசிரியர். கே.கைலாசபதி,பேராசிரியர். எஸ். பத்மநாதன்,பேராசிரியர். சபாபதிப் பிள்ளை,பேராசிரியர். எஸ். தில்லை நாதன், பேராசிரியர்.எஸ்.எல்.அமீர் அலி,பேராசிரியர். சுக்ரி, பேராசிரியர்.சோ. செல்வநாயகம், பேராசிரியர். ஏஜே. வில்சன், பேராசிரியர். ரோனி ராஜரட்ணம், பேராசிரியர். என். பத்மநாதன், பேரா. எம்.எல்.ஏ. காதர், பேராசிரியர். மூக்கையா, போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். எனது பட்டப்படிப்பின் பின் ஜாமிஆ நழீமியாவில் எனது மாணவர்களாக மிளிர்கின்ற இன்றைய இலங்கையின் முன்னணி இஸ்லாமிய சிந்தனையாளர்களான, உஸ்தாத்கள் அஷ்சேய்க். அகார் முஹம்மட், எம்.ஏஎம். மன்சூர், எஸ்.எச்.எம்.பழீல், சி.ஐயுப் அலி, மர்ஹஶ்ம் கைருல் பஷர், போன்றோர்களும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் பதவிகளை வகிக்கின்ற மாணவர்களின் உருவாக்கத்திலும் எனது பங்களிப்பு நிறையவே உள்ளது. இவ்வாறான அறிவுச் சுரங்கங்களின் நேரடி அறிவூட்டலுக்கான பூரண வாய்ப்பு பட்டப் படிப்பினை வெளிவாரியாகவோ, பகுதி நேரமாகவோ அல்லது பாடசாலையில் கற்பித்துக்கொண்டு கல்வியைத் தொடர்ந்தவர் களுக்கோ வாய்ப்பதில்லை.வெள்ளைக்காரர்களால் அவர்களது இரம்மிய பௌதிகசூழல், மேற்கத்திய வடிவிலான கட்டுமானங்கள், கல்வி வாய்ப்பு முறைமைகளைப் பின்பற்றி முதன்முதலாகத் தோற்றுவிக்கப்பட்ட, தென்கிழக்காசியாவிலேயே முதல்தர பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்கக் கிடைத்தது எனது பேறாகும். இதனால்தான் உள்வாரி மாணவனாக பாடசாலைக் கல்வியிலிருந்து நேரடியாகச் சென்று பல்கலைக்கழக விடுதிகளில் தங்கி, ஏனைய சமூகத்தவர்களோடு கலந்து, ஆழ அகல நூலக வாசிப்புகளோடு, வேறுபட்ட கலாசார புரிந்துணர்வுகளோடு கற்பதற்கும், பரீட்சைகளுக்காக மற்றவர்களின் குறிப்புகளின் துணையோடு பரீட்சை எழுதி சான்றிதழ் பெறுவதற்கும் நிறையவே வேறுபாடுகள் இருக்கின்றன. இங்கு எவரையும் நான் குறைத்து மதிப்பீடு செய்து மட்டம் தட்டும் நோக்கோடு உங்கள் பாணியில் சொல்லவில்லை.ஆனால் பொதுப்பாங்கில் எங்களது ஆரம்ப காலத்திலிருந்த கற்கை முறைமைகளையே விபரிக்கின்றேன்.
ஆம்! எமது அட்டாளை மண்ணின் வரலாறு பூர்வீக ஆய்வுகளுடன் எழுதப்படல் வேண்டும்.எமது மண்ணின் மூத்த கல்விமான், அதிபர் அறிவுப் பெருந்தகை, எனது பெரியாப்பா அல்ஹாஜ். ஜே.எம்.சம்சுதீன் மௌலானா இந்த வரலாற்று பூர்வீக ஆய்வுகளுக்கான தொடக்கங்களை தனது வாழ் காலத்திலேயே செய்து வைத்திருக்கின்றார்கள். என்னை பலமுறை இதற்காக அழைத்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருக்கின்றோம். மற்றும் எனது சம்பந்தர் மர்ஹஶ்ம் ஈஎல்எச். சுலைமாலெவ்வை ஹாஜியார், அண்மையில் மறைந்த கே.எல். சம்சுதீன் அதிபர் போன்றோரும் இப்பணியில் தமது குறிப்புக்களை நெறிப்படுத்தியிருக்கின்றார்கள். அவற்றை தொடர்ந்து ஆழ அகல ஆய்வு செய்து எமது மண்ணின் பூர்வீகக் குடிகள், சமூக வாழ்வியல், சமய மார்க்க பள்ளிகள் வரலாறு, மத்ரசாக்களின் தோற்றம் வரலாறு, அரசியல் பொருளாதார வரலாறு, கல்வி கல்விக்கூடங்களின் வரலாறு, விவசாய வாழ்வாதார பண்பியல், கந்தூரி கலாசார விழுமியங்கள், பெரிய பள்ளிவாசலின் வடக்குத் தெற்குப் பிரிவினையும் அதற்கான போராட்டமும். என்று நிறையவே ஆய்ந்து எழுதவேண்டிய பாரிய பணி எம்முன்னே எழுந்து வேண்டி நிற்கின்றது.
ஆம்! எமது அன்புக்குப் பாத்திரமான இளைஞர் சமுதாயமே! உங்களுக்கு இந்த இலகுவான கல்வி, ஒழுக்க வாழ்க்கை நெறிக்கான வாய்ப்பு வசதிகளை எமது மண்ணிலே ஏற்படுத்துவதற்காக வேண்டி உங்களது பெற்றோர்களோடு சேர்ந்து நாம் நிறையவே போராட்டங்களையும், அர்ப்பணிப்புகளையும் நீங்கள் இம்மண்ணில் பிறப்பதற்கு முன்பே செய்திருக்கின்றோம். அதிலும் 1950களில் ஏழையின் வயிற்றில் பிறந்த எம்மைப் போன்றவர்கள் கல்விக்காகவும், அதை எதிர்காலச் சந்ததிகளுக்கு, சாதாரண வறிய ஏழையும் கற்பதற்கான வாய்ப்பை இம்மண்ணிலே தோற்றுவிப்பதற்காக எத்தனையோ இரும்புத்திரைகளை உடைக்க வேண்டியிருந்தது. வர்க்க வேறுபாடும் சமுதாய ஏற்றத்தாழ்வும், மானியமுறைச் சமுதாயச் சாயல்களும், ஜெமிந்தார்- அடிமை, பணக்காரன்- ஏழை, போடிமார்- வெளியான், முதலாளி- தொழிலாளி போன்ற வர்க்க வேறுபாடுகளையெல்லாம் தாண்டித்தான் சாதாரண ஏழைகளின் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டியிருந்தது. அதற்காக வஞ்சிக்கப் பட்டோம்.பாடசாலை, பள்ளிவாசல்கள் நிர்வாகங்கள், கூட்டுறவு கூப்பன்கடை முறைமைகளை விமர்சித்ததற்காகவெல்லாம் பேர் ரோட்டிலே போட்டு அடித்து,வஞ்சித்து பொலிசில் அடைக்கப்பட்ட வரலாறுகள் நிறையவே எழுதப்பட வேண்டியுள்ளன. நாங்கள் பல்கலைக்கழக கல்வி கற்கும்போதே 1970களில் “ஜங்கிள் காக்கி ரௌசரோடு” கல்விக்காகவும், பள்ளிக்காகவும் மக்களைத் திரட்டி தெருவெல்லாம் அராஜகங்களுக்கு எதிராக நாம் போராட்டம் நடத்தியவர்கள். 1970, 1980களில் நாமெடுத்த தொடர் போராட்டங்களினால்தான் சாதாரண ஏழைக் கூலிகளின் பிள்ளைகளும் பல்கலைக் கழகங்களுக்கு சென்று ஒரே முறையில் 5, 10 என்று எமது மகா வித்தியாலங்களிலிருந்து வைத்தியர்களாகவும், பொறியியலாளர்களாகவும், கல்வியில் 1980களின் பின்பு பிரகாசிக்க முடிந்தது.அல்ஹம்துலில்லாஹ்! இந்த எமது உண்மையான பிரயத்தனங்கள் எல்லாவற்றுக்கும் வல்ல நாயன் போதுமானவன். ஆகவே வறுமைக் கோட்டிலிருந்த எம் குடும்பத்திலிருந்து என்னை உருவாக்கிய என் அருமைத் தாயும் தகப்பனும்,எனது ஆசிரியப் பெருந்தகைகளும் “முஹம்மது பழீல்” என்ற எனது பெயருக்குப் பின்னால் பெற்றுத்தந்த “BA, HONOURS ” பட்டம் வெறும் வரட்டு கௌரவத்துக்குரியதல்ல. அல்ஹம்துலில்லாஹ்! ஆனால் நீதி நியாயங்களோடு, உண்மைக்காக மெளத்து வரையும் இச்சமுதாயத்திற்காக போராடுவதற்கான கவசம் அது என்ற பின்னணியை முதலில் விளங்கவேண்டும். இம்மண்ணில் பிறந்த சாதாரண ஏழை மக்களின் உள்ளங்களிலே எனது கடந்த கால சமுதாயக் கைங்கரியங்கள் தனி இடத்தைப் பெற்றதனால்தான் அவர்கள் என்னை “BA” என்று அழைக்கின்றார்களே ஒழிய, எனது பட்டத்தினாலோ அதற்கான சான்றிதழ் பத்திரத்தினாலோ அல்ல. தலைக்கடித்த வரட்டு கௌரவத்தோடு இம்மண்ணையும், இச்சமுதாயத்தையும் தூரநின்று பார்ப்பவர்களுக்கு “ குருடன் பார்த்த யானைக்” கதையாகத்தான் அது தெரியும்.
எமது மண்ணின் அரசியல் வரலாறு இவற்றை விட ஆழமானதும், சுவாரஸ்யம் கொண்டதுமாகும். நன்றி!..... தொடரும்……..