எஸ். ஹமீத்-
யுத்த காலத்தில் தமது இராணுவ வீரர்கள் செத்து மடிந்து கொண்டிருக்கும் அதே தருணத்தில் பகை நாட்டுத் தலைவர்கள் கட்டிப் பிடித்துக் கைலாகு கொடுத்துக் கொள்வதைப் போல இருக்கிறது அந்தப் புகைப்படம்.
ஏறாவூர் அலிகார் பாடசாலையின் பழைய மாணவர் ஒன்றுகூடல் நிகழ்வின் போது பிடிக்கப்பட்டிருக்கும் அப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பதியப்பட்டும் பகிரப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வருகிறது.
அந்தப் படத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அகமதுவும் அண்மையில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்ட அதன் முன்னாள் தவிசாளரும் தற்போது ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைமைத்துவத்துக்கெதிராகப் போர்க்கொடி உயர்த்திக் கொண்டிருப்பவருமான பஷீர் சேகுதாவூதும் தனது பரம எதிரியாக ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கருதுகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான அமீர் அலி ஆகியோரும் சிரித்தபடியும் மிகச் சந்தோஷமாகவும் காணப்படுகிறார்கள்.அல்ஹம்து லில்லாஹ்...நல்லதொரு படம். நல்லதொரு மாற்றம். நல்லதொரு முன் மாதிரி.
ஆனால் இங்கு ஒரு விடயத்தை உற்று நோக்க நோக்க வேண்டும். அதாவது, சமூக வலைத்தளங்களில் மட்டுமன்றி வேறு பல வழிகளிலும் இந்த அரசியற் தலைமைகளின் போராளிகளும் தொண்டர்களும் ஆதரவாளர்களும் தமது கட்சிக்காகவும் கட்சித் தலைமைத்துவத்திற்காகவும் ஒருவருக்கொருவர் மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற கசப்பானதும் வெட்கக்கேடாதுமான காரியத்துக்கு இந்தப் புகைப்படமோ அல்லது இது போன்ற புகைப்படங்களோ சாவு மணியடிக்குமாயின் அது வரவேற்கத்தக்க விடயம். அதைவிடுத்து வெறும் வேடிக்கைக்காகவும் கேளிக்கைக்காகவும் சந்தர்ப்பத்துக்காகவுமே இத்தகு புகைப்படங்கள் எடுக்கப்படுமாயின் அது அப்பட்டமான பச்சோந்தித்தனமும் முனாபிக்தனமுமாகும்.
சமூக வலைத்தளங்களில்-மிகக் குறிப்பாக-முகநூலில் முஸ்லிம்களின் இரு பெரிய கட்சிகளுக்கிடையில் நடக்கின்ற அக்கப்போர் பற்றி நாம் எல்லோருமே அறிவோம். தமது தலைமைக்காகவும் தாம் சார்ந்த கட்சிக்காகவும் அவற்றின் ஆதரவாளர்களும் போராளிகளும் மாற்று அணியினரை எவ்வாறெல்லாம் தூற்றித் தொங்க விடுகிறார்கள் என்பதையும் நாம் பார்த்தே வருகிறோம். சமயங்களில் ஏதுமறியாத அவர்களின் தாய்மாரும் மனைவிகளும் சகோதரிகளும் இந்தப் போராளிகளின் விமர்சனங்களுக்குள்ளும் பதிவுகளுக்குமுள்ளே இழுக்கப்பட்டு அசிங்கப்படுவதையும் நாம் அவதானித்து வருகிறோம். தாம் நேசிக்கின்ற அரசியற் தலைமைத்துவத்துக்காக அதன் போராளிகள் உணர்ச்சிவசப்பட்டு, அந்த உணர்ச்சிகளின் உச்சத்தில் ஏறி நின்று கொண்டு தூஷண வார்த்தைகளைத் துளியும் தயக்கமின்றி முகநூலில் துப்புகின்ற கேவலத்தையும் நாம் கண்டு கொண்டே வருகிறோம். இவற்றையெல்லாம் கண்டும் காணாமல் இருக்கின்ற அரசியல்வாதிகள்- இவ்வாறான நடவடிக்கைகளினால் சந்தோஷப்பட்டுக் கொள்கின்ற அரசியல்வாதிகள்- இவற்றை உற்சாகப்படுத்தி ஊட்டி வளர்க்கின்ற அரசியல்வாதிகள்- மேலும் மேலும் தமது ஆதரவாளர்களை உசுப்பேற்றி விடுகின்ற அரசியல்வாதிகள்-சமயம் கிடைக்கும் போதெல்லாம் தமது எதிரிகளுடன் இணைந்து கும்மாளமடிப்பதும், கட்டிப் பிடிப்பதும், விருந்துண்பதும் நிச்சயமாக நயவஞ்சகத்தனமாகும்.
அரசியல் விமர்சனங்களை மிக நேர்த்தியோடு முன் வையுங்கள் என்று இவர்கள் தத்தம் ஆதரவாளர்களைக் கேட்டுக் கொள்ள வேண்டும். அசிங்கமான சொற்களைத் தவிர்த்திடுங்கள் என்று தமது போராளிகளுக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும். அம்மண வார்த்தைகளைப் பிரயோகிக்காதீர்கள் என்று கண்டிப்பான கட்டளைகளிட வேண்டும். குடும்ப அங்கத்தினர்களை எக்காரணங்கள் கொண்டும் விமர்சனம் செய்ய வேண்டாமென உத்தரவுகளையிட வேண்டும். வரம்பு மீறி இயங்குவோரைத் தேடியறிந்து தமது ஆதரவாளர் என்னும் நிலையிலிருந்தும் அவர்களை ஒதுக்கிவிட வேண்டும்.
மாறாகப் போராளிகளையும் ஆதரவாளர்களையும் மோத விட்டுவிட்டுத் தாங்கள் மட்டும் ஒற்றுமையோடும் ஒழுக்கத்தோடும் இருந்து கொள்வார்களானால், அதற்கான தண்டனையை மறுமையில் நிச்சயம் பெற்றுக் கொள்ளவே செய்வார்கள்.
தலைவர்களையும் தொண்டர்களையும் அல்லாஹ் என்றும் நேர்வழியில் நடாத்துவானாக!