என்.எம்.அப்துல்லாஹ்-
2017 மார்ச் 24ம் திகதி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட மறிச்சுக்கட்டி, கரடிக்குளி பிரதேசங்களை பாதுகாப்பட்ட காட்டுப்பிரதேசங்களாக அறிவிக்கும் 2011/34 வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக இரத்துச் செய்யுமாறு, முசலிப் பிரதேசத்தின் பழைய எல்லைகள் அதே அமைப்பில் பேணப்படல் வேண்டும் என்றும் இன்றைய (6-4-2017) 90வது வடக்கு மாகாணசபை அமர்வில் பிரேரணை முன்வைக்கப்பட்டு குறித்த பிரேரணை ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண எல்லைக்குட்பட்ட முசலி பிரதேசத்தின் மறிச்சுக்கட்டி, கரடிக்குளி, அருவியாற்றின் வவுனியா மன்னார் எல்லைப் புறங்களை மாவில்லு வனப்பாதுகாப்பு பிரதேசமாக அறிவிக்கும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் 2017 மார்ச் 24ம் திகதிய 2011ஃ34 இலக்க வர்த்தமானி அறிவித்தலும், மறிச்சுக்கட்டி பிரதேசத்தை வில்பத்து விலங்குகள் சரணாலயத்தின் புற எல்லைப் பகுதியாக அறிவிக்கும் 2012ம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தலும் 13ம் திருத்தச்சட்டத்தின் மூலம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் காணி அதிகாரங்களை கருத்திலெடுக்காதும், யுத்தத்திற்கு பிந்திய சூழ்நிலையில் மக்களின் மீள்குடியேற்ற செயற்பாடுகளை கருத்திலெடுக்காதும் மேற்கொள்ளப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களாகும், எனவே மேற்படி இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களையும் உடனடியாக இரத்துச் செய்து மக்களின் நலன்களை உறுதி செய்வதற்கு ஜனாதிபதி அவர்கள் உடனடி நடவடிக்கை எடுத்தல் அவசியம் என இச்சபை கோரி நிற்கின்றது.
குறித்த பிரேரணையினை வடக்கு மாகாணசபை சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் அவர்கள் முன்வைக்க பிரேரணையினை வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வழிமொழிந்தார், கௌரவ ஜயதிலக்க, கௌரவ சிவாஜிலிங்கம், கௌரவ டெனீஸ்வரன், கௌரவ சிராய்வா உள்ளிட்ட பல உறுப்பினர்கள் மேற்படி பிரேரணையின் முக்கியத்துவம் குறித்து தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
இறுதியாக குறித்த பிரேரணைக்கு ஆட்சேபனைகள் இருப்பின் முன்வைக்குமாறு கூறப்பட்டது, எவருமே குறித்த பிரேரணைக்கு தமது ஆட்சேபனைகளை முன்வைக்காத நிலையில் குறித்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அவைத்தலைவர் கௌரவ சி.வி.கே சிவஞானம் அவர்கள் அறிவித்தார்கள்.