மினுவாங்கொடை நிருபர்-
தமிழ், சிங்களப் புத்தாண்டு காலப் பகுதியில், பயணிகளின் வசதி கருதி, குருநாகலில் இருந்து 5 ஆம் இலக்க மினுவாங்கொடை வழியாக கொழும்பு - புறக்கோட்டை பிரதான இ.போ.ச.பஸ் நிலையம் வரையில் 15 பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு்ள்ளதாக, திவுலப்பிட்டிய இ.போ.ச.டிப்போ போக்குவரத்து செயற்பாடு முகாமையாளர் லால் ஆனந்த தெரிவித்துள்ளார்.
இது தவிர, கட்டுநாயக்க வர்த்தக வலயத்தில் தொழில் புரிவோரின் வசதி கருதி, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மினுவாங்கொடை வழியாக, தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் அக்கரைப்பற்று, வெலிமடை மற்றும் அநுராதபுரம், கண்டி போன்ற தூர இடங்களுக்குச் செல்வதற்கும், அவ்விடங்களிலிருந்து மீண்டும் கட்டுநாயக்கவுக்கு திரும்பி வருவதற்குமான விசேட இ.போ.ச. பஸ் சேவைகள் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை கட்டுநாயக்கவிலிருந்து சொந்த இடங்களுக்குப் பயணிக்கவும், இதேபோல் 16 ஆம் திகதியிலிருந்து 20 ஆம் திகதி வரை குறித்த இடங்களிலிருந்து மீண்டும் கட்டுநாயக்கவுக்குத் திரும்பி வருவதற்குமான விசேட பஸ் சேவைகள் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கும் மேலதிகமாக, கொழும்பிலிருந்து படல்கம, திவுலப்பிட்டிய ஆகிய இடங்களுக்கு ஐந்து மேலதிக பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட வுள்ளதோடு, தேவைக்கேற்ப இரவு நேர விசேட பஸ் சேவைகள் நடத்தப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சாதாரண நேர அட்டவணைகளுக்கு மேலதிகமாக, இந்த பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளதோடு, பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களையும் அசௌகரியங்களையும் குறைக்கும் நோக்கில், இந்த டிப்போவின் கீழ் பணிபுரியும் சகல பஸ் சாரதிகளினதும், நடத்துநர்களினதும், தொழில்நுட்ப ஊழியர்களினதும் விடுமுறைகள் யாவும் இக்காலப் பகுதியில் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வூழியர்களுக்கு 14ஆம், 15ஆம் திகதிகளில் மாத்திரம் சுழற்சி முறை என்ற அடிப்படையில் விடுமுறைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.