கடந்த 03 தசாப்த்த காலமாக இலங்கைத் தாய் புரையோடிப் போயிருந்த கொடிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து இலங்கையில் நிலைபேறான தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த உதவியதில் இந்த நாட்டில் வாழுடம் மூவின மக்களுக்கும் பெரும் பங்கு உள்ளன. இக்கொடிய யுத்தம் ஒய்ந்து 08 வருடம்களாகியும் அதன் வடுக்கள் மாறாத நிலையில் கடந்துவந்த பாதைகளில் அழிந்துபோன ஜனாநாயக விழுமியங்களையும் தமிழ் பேசும் மக்களின் மனங்களையும் வெல்ல வேண்டிய தார்மீகப் பொறுப்பு இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு இருக்கிறது.
அதன் அடிப்படையில், அம்பாறை மாவட்டத்தில் பேரினவாத செயற்பாடுகளினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சிறுபான்மை முஸ்லிம் மக்களது காணிகளை மீட்டுத்தருமாறு பல்வேறுபட்ட கோரிக்கைகள் பலதரப்பினரால் விடுக்கப்பட்டு அக் கோரிக்கைகள் நாடாளுமன்றம் வரை கொண்டு செல்லப்பட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான எந்த எத்தனங்களையும் எடுக்காதிருப்பது எமது சமூகத்திற்கு ஏற்பட்ட துரதிஸ்;டமே. இப்பிரச்சினை நீண்டகாலமாக தீர்கப்படாத பிரச்சினைகள் வரிசையில் கிடப்பில் கிடக்கின்றன.
பெரும்பான்மை சமூகத்தின் திட்டமிட்ட குடியேற்றம்
பொத்துவில், லஹூகல எல்லைப் பிரதேசத்தில் அமைந்துள்ள வேகாமம், பலடிவட்டை மற்றும் கிரான்கோமாரி போன்ற பிரதேசங்களில் சுமார் 1838 ஏக்கர் காணிகள் வனப்பாதுகாப்பு பிரதேசத்திற்கு உட்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இப்பிரதேசம் சிறுபான்மை இனத்தவர்களின் சுமார் முறையே 55, 21, 59 வருடங்கள் ஆட்சி உரிமை கொண்டவை. எனவே, இக்காணிகள் மறுக்கப்பட்டதன் மூலம் சுமார் 567 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள அஸ்ரப் நகர் (ஆலிம் சேனை) எல்லைப் பிரதேசத்தில் 150 ஏக்கர் காணிகள் எந்த முறைமைகளும் பின்பற்றப்படாமல் சுவீகரிக்கப்பட்டு இராணுவ முகாம், வனம், தொல்பொருள், தீகவாபி புனித பூமி என பல காரணங்கள் கூறப்பட்டு காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள கீத்துப்பத்து 'பாவாபுரம்' காணிப்பிரச்சினையானது கல்ஓயா அபிவிருத்தியின் கீழ் குடியேற்றப்பட்ட 18ம், 19ம் கொளணி குடியேற்றத்தின் மூலம் 96 ஏக்கர் காணிகள் பலவந்தமாக அபகரிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசம் சுமார் 41 வருட ஆட்சி உரிமை கொண்டவை. இதன் மூலம் சுமார் 46 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமண பிரதேசத்தில் உள்ள அம்பலம் ஒயா காணிப்பிரச்சினையானது, கல்ஒயா அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் பெரும்பான்மை சமூகத்தவர்களை திட்டமிட்டுக் குடியேற்றுவதற்காக பறிக்கப்பட்ட முஸ்லிம்களின் பாரம்பரியக் காணிகளாகும். இதன் மூலம் 144 ஏக்கர் காணிகள் எந்தவிதமான முறைமகளும் பின்பற்றப்படாமல் அபகரிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசம் சுமார் 79 வருடங்கள் ஆட்சி உரிமை கொண்டவை. இதன் மூலமும் சுமார் 48 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டுமல்லாமல், அக்கரைப்பற்று பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டு தற்காலிக கூடாரங்களில் தங்களது அன்றாட தேவைகளைக்கூட நிறைவு செய்ய இயலாமல் இன்னல்பட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களுக்காக சவூதி அரேபிய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை 500 வீட்டுத்திட்டம் பத்து வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் பகிர்ந்தளிக்கப்படாமல் பெரும்பான்மை இனத்தவர்களால் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு நீதி மன்றம் வரை இப்பிணக்கு சென்றிருப்பது வேதனைக்குரிய விடயமாகும். இவ்வீட்டுத்திட்டம் நிர்மாணிக்கப்பட்டு 10 வருடம் பழமை வாய்ந்ததாக உள்ளதால், இவ்வீடுகளை மீள பாவனைக்கு உகந்ததாக மாற்ற இன்னும் பல மில்லியன்கள் அரசுக்கு மேலதிக வீன்செலவு ஏற்படலாம். இதன் அடிப்படையில், இக்காணிப் பிரச்சினைகள் அனைத்திலும் சுமார் 1435 இற்கும் அதிகமான ஏழைக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் வாழ்வாதாரமும் பலவருடங்களாக கேள்விக்குட்படத்தப்பட்டு நிலையில், தற்போது முஸ்லிம்களுக்குச் சொந்தமான இறக்காமம் மாணிக்கமடு பகுதியை பெரும்பான்மை இனத்தவர்கள் அத்துமீறி ஆக்கிரமிப்புச் செய்து அப்பகுதி மக்களின் காணிகளை கபளீகரம் செய்ய முயற்சித்து வருகின்றனர்.
தமிழ் பேசும் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியதன் அவசியம்
கிழக்கு மாணத்தில் 39 சதவீதமாக வாழுகின்ற முஸ்லிம்களுக்கு வெறும் 8 சதவீதமான நிலங்கள் மட்டுமே உள்ளது. அம்பாரை மாவட்டத்தின் 1971ம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்படி, 47மூ முஸ்லிம்களும், 30மூ சிங்களவர்களும், 23மூ தமிழர்களும் இங்கு வாழ்ந்துள்ளனர். அக்காலப்பகுதியில், சிங்ககளவர்ளுக்கென 675 சதுர மைல்கள் நிலப்பரப்பே காணப்பட்ட போதிலும், 1976ம் ஆண்டு கல்லோயா திட்டத்தின் திட்டமிடப்பட்ட குடியேற்றதின் மூலம் 850 சதுர மைல்கள் காணி எல்லைப்பரப்பு மேலும் விஸ்தரிக்கப்பட்டது. இதனால் இப்போதுள்ள சிங்களவர்ளுக்கான காணி எல்லைப்பரப்பு 1330 சதுர மைல்களாகும். இது 1775 சதுர மைல்கள் கொண்ட அம்பாரை மாவட்டத்தின் 76 வீதமான நிலப் பகுதியினை, இம் மாவட்டத்தில் சிறுபான்மையாக வாழும் சிங்களவர்களிடத்தில் காணப்படுகின்றது. 62மூ பெரும்பான்மையாக உள்ள தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வெரும் 24மூ (475 சதுர மைல்கள்) வீதமான நிலப்பரப்பே உள்ளது. எனவே, கிழக்கு மாகாணத்திலுள்ள நிலங்கள் தொடர்பான பிரச்சினைகள் முறையாகக் கையாளப்பட்டு தீர்வு பெற்றுத்தரும் பொறுப்பை அனைவரும் அரசாங்கத்தை வலியுறுத்துவது மிக அவசியமாகும்.
காணி விடயத்தில் முஸ்லிம் தலைமைகளின் கையாலாக நிலை
வட மாகாணத்தில் தமிழ் தலைமைகள் எதிர்க்கட்சி அரசியலின் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை விடுவித்துள்ள நிலையில், அம்பாரை மாவட்டத்தில் கடந்த 30 வருடகால கொடூர யுத்தத்தின் மூலமும், இன முறுகல்களின் மூலமும் விடுவிக்கப்படாத முஸ்லிம்களின் காணிகளை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்காவது விடுவிக்காமல் இருப்பது முஸ்லிம் தலைமைகளின் கையாலாகாத தனத்தைக் காட்டுவதுடன், முஸ்லிம் தலைமைகள் மீது நம்பிக்கையீனத்தையும் ஏற்படுதியுள்ளது.
முஸ்லிம்களின் காணி விவகாரம், நிர்வாக அலகு, எல்லை மீள்நிர்ணயம் என்பவற்ருக்கான தீர்வு சம்பந்தமாக தற்போதுள்ள அரசாங்கத்தின் செயற்பாடுகளில் போதியளவு திருப்தி காணப்படுவதாகத் தெரியவில்லை. இது குறித்து எமது தலைமைகள் சிறு சிறு சலுகைகளுக்காக முஸ்லிம்களின் உரிமை சம்பந்தமான விடயங்களில் கண்டுகொள்ளாதிருப்பது முஸ்லிம்களுக்கு அவ்வளவு ஆரோக்கியமானதல்ல. முஸ்லிம் மக்களின் குரலாக ஒலிக்க வேண்டிய முஸ்லிம் தலைமைகள் டேஸ் போராவின் குரலாக ஒலிக்கின்ற ஐய்யப்பாடு நிலவுகின்ற இந்நிலை தொடருமாயின், எதிர்வரும் காலங்களில் இவர்களுக்கு முஸ்லிம் மக்கள் தக்கபாடம் புகட்டுவதை யாராலும் தடுக்க இலயாத நிலை நிச்சயம் தோற்றம் பெறும்.
நல்லாட்சி அரசாங்கத்தின் கடப்பாடு
சிறுபான்மை மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வினை வழங்கும் போதே நல்லிணக்க செயற்பாடுகள் சாத்தியமாகும். அந்த வகையில், நல்லாட்சியை அமைப்பதற்கு முக்கிய பங்காற்றிய முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இதற்காக பொறுப்பான உயர் அதிகாரிகளை ஒன்றிணைத்து இப்பிரச்சினைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிப்புக்குள்ளானோரின் பிரதிநிதிகளைக்கொண்டு ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் சந்திப்பொன்றினை ஏற்படுத்தி சாதமான தீர்வினைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் தற்போது காலத்தின் தேவையாக உள்ளது.
முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை விடயத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் கட்சி பேதமின்றி ஒன்றிணைந்து அதிக கவனம் எடுத்து ஒருமித்த குரலாக ஒலிக்க வேண்டும். அதிகமான காணிப்பிரச்சினை நெருக்கடிகள் முஸ்லிம்களுக்கே ஏற்பட்டிகின்றது.
கடந்த ஆட்சியாளர்களின் ஆட்சிக்காலங்களில் உருவாக்கப்பட்ட இவ்வாறான பிரச்சினைகள் அனைத்தும் இலங்கையிலுள்ள இனங்களிடையே பிரிவினையினையும், இனக்குரோதங்களையுமே உருவாக்கியுள்ளன. எனவே, சிறுபான்மை மக்களின் காணிப் பிரச்சினைகள் அனைத்தும் நியாயமான முறையில் தீர்க்கப்பட்டு அதன் மூலம் தேசிய நல்லிணக்கமும், நல்லாட்சியும் நமது மண்ணில் மலரும் எனும் அதீத நம்பிக்கையிலேயே சிறுபான்மை மக்கள் இப்போதுள்ள ஆட்சியாளர்களிற்கு வாக்களித்துள்ளனர்.
அந்த நம்பிக்கையினை பாழாக்கி வெற்றுக் கையுடன் அனுப்பும் வேலைகளையோ அல்லது கடந்த ஆட்சியாளர்களைப் போன்று பாரபட்சம்காட்டி வன்முறைக்கு தீனி போடும் செயற்பாடுகளையோ இந்த நல்லாட்சி மேற்கொள்ளாது என சிறுபான்மை மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்.
எனவே, புதிய அரசியலமைப்பில் குறிப்பாக சிறுபான்மையினத்தின் காணிகளைப் பாதுகாப்பதற்கான கொள்கைகள் வகுக்கப்படுதல் தொடர்பான சட்டமூலம் கொண்டு வருவது மிகவும் அவசியமாகும். இதற்காக குரோதங்களையும் அற்ப அரசியல் இலாபங்களையும் மறந்து முஸ்லிம் தலைமைகள் ஒன்றுமையுடன் செயற்பட்டு சிறுபான்மை மக்களின் காணிப்பிரச்சினைகளுக் தீர்வினைப் பெற்றுக் கொடுத்து, இக்காணிகளுக்கான பாதுகாப்பிற்குரிய நிலையான பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்பாகும்.
ஏ.எம்.சாஹிர்
பொறியியலாளர்
சாய்ந்தமருது
ஏ.எம்.சாஹிர்
பொறியியலாளர்
சாய்ந்தமருது