மறிச்சுக்கட்டி : ஒற்றுமைப்படுவார்களா முஸ்லிம் அரசியல் தலைமைகள்



எம்.எல்.லாபிர்-
றிச்சுக்கட்டி விடயத்தில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் கூட்டாக செயற்படமுடியும் இருந்தபோதிலும் இதனை தமது அரசியல் பலப்பரீட்சைக்கான களமாகவே முஸ்லிம் அரசியல் கட்சிகள் பயன்படுத்துகின்றன, வடக்கு முஸ்லிம் சமூகத்தின் அரசியல் வங்குரோத்து நிலைமையே இதற்கான காரணமாகும் என வடக்கு மாகாணசபை உறுப்பினரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதிநிதியுமாகிய அஸ்மின் அவர்கள் தெரிவித்தார், நேற்றையதினம் (02) முசலிப் பகுதிக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் கண்டறிந்த பின்னரே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எமது மக்கள் இன்னமும் உணர்ச்சி அரசியலுக்குப் பின்னாலேயே சென்றுகொண்டிருக்கின்றார்கள். மார்ச் 24ம் திகதி வெளியிடப்பட்ட 2011/34 வர்த்தமானி அறிவித்தலை முழுமையாக படித்துப் பார்த்தால் பல்வேறு யதார்த்தங்களை எம்மால் புரிந்துகொள்ள முடியும். அது மிகவும் ஆபத்தான ஒரு வர்த்தமானி அறிவித்தலாகும். அது முஸ்லிம் மக்களைப் பாதிக்கின்றது என்பதற்கும் அப்பால் ஒட்டுமொத்த வடக்கு மாகாணத்தையும் பாதிக்கும் வர்த்தமானி அறிவித்தலாகும். இந்த நாட்டின் வன வளத்தை 35%மாக அதிகரிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சர் என்றவகையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் குறித்த வர்த்தமானியில் கையொப்பமிட்டிருக்கின்றார்கள், இது “மாவில்லு வனப்பிரதேச கட்டளைச் சட்டம்” என்றே சொல்லப்படுகின்றது, இச்சட்டமூலத்தின் கீழ் வவுனியா மன்னார் ஆகிய மாவட்டத்தின் 40,000 ஹெக்டெயார் காணிகள் காட்டுப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சாதாரண விடயமல்ல.

இந்த நாட்டின் காட்டுவளத்தை 35%மாக அதிகரித்தல் என்ற தீர்மானம் சிறப்பானது. அதனை நடைமுறைப்படுத்தும்போது இலங்கையின் 9 மாகாணங்களும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு அவற்றுக்கிடையில் சமமான அல்லது காணப்படும் நில விஸ்தீரண விகிதாசாரத்திற்கு ஏற்ப அளவுத்திட்டங்கள் தீர்மானிக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும்; அதாவது ஒவ்வொரு மாவட்டமும் குறித்த அளவு காடாக்கத்தை செய்வதற்கு உத்தரவிடவேண்டும், ஒரு தனிமாகாணத்தை இதற்காகப் தெரிவு செய்திருப்பது திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவே நோக்கப்படுதல் வேண்டும்.

இப்போது இந்தப் பிரச்சினையை மறிச்சுக்கட்டி கரடிக்குளி போன்ற பிரதேசத்து மக்களின் பிரச்சினையாக மாத்திரம் எடுத்துக்கொள்ள முடியாது; மாறாக இது வவுனியா மன்னார் மாவட்ட மக்களின் பிரச்சினையாகும், அதைவிடவும் இது வடக்கு மாகாணத்தின் காணி சார்ந்த பிரச்சினையாகும். எனவே இது குறித்த அணுகுமுறைகள் விரிவானதாக இருத்தல் அவசியமாகும். அத்தோடு இதனை ஒரு இனத்துவம் சார்ந்த பிரச்சினையாக மாத்திரம் எடுத்துக்கொள்ளவும் கூடாது. இது ஒரு பொதுவான பிரச்சினையாகும், வடக்கு மக்களாகிய நாம் காடாகத்திற்கும் சுற்றாடல் பாதுகாப்பிற்கும் எதிரானவர்கள் அல்ல ஆனால் எமது மக்களின் குடியிருப்புகள், வாழ்வாதாரம், பொதுத்தேவைகள் விடயத்திலும் நாம் கவனம் செலுத்தவேண்டியிருக்கின்றது. அத்தோடு எமது பங்களிப்போடே குறித்த விடயம் அணுகப்படல் அவசியமாகும்.

1833ம் ஆண்டு ஆங்கிலேயரால் நிர்ணயிக்கப்பட்ட வடக்கு மாகாண எல்லைகளும், 1987ம் ஆண்டின் 15ம் இலக்க உள்ளூராட்சி சட்ட மூலத்தின் பிரகாரம் முசலி பிரதேச எல்லைகளும், 1992ம் ஆண்டின் 58ம் இலக்க பிரதேச செயலக சட்டமூலத்தின் பிரகாரம் காணப்பட்ட முசலி பிரதேச செயலகத்தின் எல்லைகளும் மிகத்தெளிவாகவே காணப்படுகின்றன. குறிப்பாக 2009ம் ஆண்டு யுத்த முடிவிற்குப் பின்னர் செருகப்பட்ட காணி தொடர்பிலான அனைத்து சட்டங்களும் வர்த்தமானி அறிவித்தல்களும் குறித்த பிரதேசத்தின் மக்களின் கருத்தையோ அல்லது அவர்கள் சார்ந்த நலன்களயோ கருத்தில் எடுத்த நிலையில் முன்வைக்கப்பட்டவை அல்ல. எனவே குறிப்பாக 2009ற்குப் பின்னர் பிரதேச எல்லைகளை மாற்றியமைக்கும் அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக ரத்துச் செய்யப்படல் வேண்டும் என்பதுவே மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.

இந்த அடிப்படையில் முசலி பிரதேச எல்லைக்குள் வனப்பாதுகாப்பு என்ற பெயரிலும், தேசிய பாதுகாப்பு என்ற பெயரிலும் கபளீகரம் செயப்பட்டுள்ள மறிச்சுக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குளி மற்றும் அருவியாற்றின் எல்லைப் புறக்காணிகளும், தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் கபளீகரம் செய்யப்பட்டுள்ள முள்ளிக்குளம் கிராமமும், சிலாவத்துறை கிராமமும் உடனடியாக மக்களிடம் கையளிக்கப்படல் வேண்டும்; அவை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்கள் அனைத்தும் ரத்துச் செய்யப்படுதல் வேண்டும்; இதுவே எமது அடிப்படைக் கோரிக்கையாக இருக்கவேண்டும். 

மேற்படி கோரிக்கைகளை அடைந்துகொள்வதற்கு சிவில் சமூக ரீதியான, சட்டரீதியான, அரசியல் ரீதியாக என பல வழிகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படல் அவசியமாகும். என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -