வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் போலவே முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் வெளிக்கொணரப்பட்டு பேசப்பட வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். நாளை வியாழக்கிழமை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே பின்வருமாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அம்மக்களது பிரச்சினைகள் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களினால் அவ்வப்போது வெளிக்கொணரப்பட்டுள்ளன. அந்தவகையில், காணாமல் போனவர்களுக்கு நீதி கோரி நாளை வியாழக்கிழமை ‘வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தினால்’ மேற்கொள்ளப்படவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மேலதிகமாக முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் இந்த ஹர்த்தால் ஆர்ப்பாட்டம் அரசியல் மட்டத்தில் பாரிய தாக்கத்தை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே, இவ்வாறான சந்தர்பங்களில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் சரியான முறையில் முன்வைக்கப்பட வேண்டும். சமகாலத்தில் மறிச்சுக்கட்டி, இறக்காமம் மாயக்கல்லி மலை போன்ற விவகாரங்கள் குறித்து சரியான தெளிவுபடுத்தல்கள் செய்யப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.