சப்றின்-
வில்பத்து சம்பந்தமான வர்த்தமானிப் பிரகடன விவகாரம் உட்பட முஸ்லிம் சமூகத்திலும், சக சமூகங்களிலும் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில்தீர்வுகளைக் காண்பதற்கு நாம் நமது செயற்பாடுகளை விவேகத்துடனும், புத்திசாதூரியமாகவும்முன்னெடுக்க வேண்டும்.வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு இந்த நாட்டிற்கு ஒரு யுக புருஷராகக் கிடைத்திருக்கும் ஜனாதிபதிக்கு எதிரான கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவிப்பதைத் தவிர்த்துக் கொண்டு சமூகங்களின் பிரச்சினைகள் குறித்து அவருக்கு நாம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளரும், முன்னாள் அக்கரைப்பற்று மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவருமான அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி கூறினார்.
அண்மையில் அக்கரைப்பற்று புதுப்பள்ளியடியில் அமைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிராந்தியக் காரியாலயத்தில் நடைபெற்ற சமகால அரசியல் பற்றிய கலந்துரையாடலில் கந்துகொண்டு தலைமையுரையாற்றும்போதே மேற்படி கூறினார்.
அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில் நமது நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மிகவும் நல்லவர். மனிதாபிமானம் உள்ளவர். இந்த நாட்டில் நல்லாட்சியொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக தனது தலையையே பலிகொடுப்பதற்குத் துணிந்தவர். ஆடம்பரங்களற்ற எளிமையான வாழ்க்கையைக் கொண்டிருப்பவர். ஒரு கட்சியின் தொகுதி அமைப்பாளராக அதிகாரம் பெற்றுச் செயற்பட்ட காலத்திலிருந்து இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கும் இந்நாள் வரைக்கும் அவர் தன்வசமிருந்த அதிகாரங்களை மக்களின் அபிலாஷைகளுக்கு எதிராக பிரயோகிக்காமல் அஹிம்சை வழியில் தனது பணிகளை முன்னெடுத்து வருபவர்.
ஜனநாயகத்திலும்,அஹிம்சையிலும் அதீத நம்பிக்கை கொண்ட இவரை ஜனாதிபதியாக நமது நாட்டு மக்கள் அடையப்பெற்றபோது, கிழக்காசியாவிலும் ஒரு நெல்சன் மண்டேலாவை தாம் பெற்றுக்கொண்டதாகவேஅவர்கள்கருதினர்.இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட நமது ஜனாதிபதியையும், தேசப்பற்றுடனும் கூட்டுப்பொறுப்புடனும் இன மத மொழி மற்றும் பிரதேச வேறுபாடுகளின்றி இவரைத் தெரிவு செய்த இந்நாட்டு மக்களையும் முழு உலகமும் ஆச்சரியத்துடன் நோக்கி வாழ்த்துரைகளையும் தெரிவித்தது.
அவர் பதவியேற்ற கையோடு நமது நாட்டிற்கு விஜயம் செய்த பரிசுத்த பாப்பரசர் அவர்கள் இவரைப் போன்ற எளிமையும், பணிவும், பண்பும் கொண்ட ஒரு அரசுத் தலைவரை தனது வாழ்நாளிலே தான் எந்த நாட்டிலும் கண்டதில்லை என்று பெருமிதமாக உலகறியக் கூறியதானது, இவருக்கு நம்பிக்கையுடன் வாக்களித்த நம் எல்லோருக்குமே மிகுந்த மனநிறைவைக் கொடுத்தது என்பதை நாம் என்றுமே மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய நற்சான்றுரைகளையும் நடவடிக்கைகளையும் கண்ணுற்ற நமது முஸ்லிம் சமூகமும் இஸ்லாமிய வரலாற்றில் நல்லாட்சிக்குப் பெருமை சேர்த்த கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரழி) அவர்களின் வழி நின்று ஆட்சி செய்பவரோ? என வியந்தனர். மேலும் இஸ்ரவேல் சமூகத்தில் கொடுங்கோல் அரசனாகத் திகழ்ந்த பிர்அவ்னின் மடியிலும், மாளிகையிலும் இருந்து அந்த மக்களுக்கான விமோசனத்தையும், விடிவையும் அளிப்பதற்காக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களின் வெளிப்பாட்டிற்கும்,நமது ஜனாதிபதி மைத்திரியின் தெரிவிற்கும் ஏதும் பொருத்தப்பாடுகள் இருக்குமோ? என்றும் சிந்திக்கலாயினர்.
இவையெல்லாவற்றையும் விட, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பௌத்த சமயத்தைநேசிக்கின்ற தீவிர பக்தராக இருக்கும் காரணத்தினால் இந்நாட்டின் பௌத்தர்கள்,இவர் மஹிந்த தேரரின் வழித்தோன்றலாக இருப்பாரோ? என்றும் சிந்திக்கத் தலைப்பட்டனர். ஏனெனில் இவர் பௌத்தம் போதிக்கின்ற தர்மங்களை தமது வாழ்வில்அச்சொட்டாக கடைப்பிடித்து வாழ்பவராக காணப்படுகின்றார். இதன் காரணமாக இவர் நாட்டின் அதியுயர் அதிகாரம் கொண்ட ஆட்சிக் கதிரையில் அமர்ந்தபோதும் எளிமையையும், நேர்மையையும், அஹிம்சையையும், ஜனநாயகத்தையும், நல்லாட்சியின் அணிகலனாக்கிஅரச கடமைகளை இன்றுவரை சிறப்பாக செய்து வருகின்றார்.
எனவே இவரை நமது நாட்டில் தோற்றம் பெற்ற ஒரு யுக புருஷர் என்று நாம் துணிந்து சொல்லாம். நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இத்தனை நற்குணங்களையும் ஒருங்கே அமையப்பெற்ற ஒரு தலைவரை இந்நாடு பெற்றிருக்கவில்லை. இதேபோன்று எதிர்காலத்திலும் இவ்வாறான ஒருவரை நம் நாடு பெறுமா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
ஆகவே நமது நாட்டிலுள்ள பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மக்கள் அனைவரும் இவருடைய பதவிக் காலத்திற்குள் ஐக்கியப்பட்டு, விட்டுக்கொடுப்புக்களுடனும், தேசப்பற்றுடனும், எதிர்கால சந்ததியினரின் நன்மைகளைக் கருத்திற் கொண்டுஒன்றிணைந்து தமக்குள் இருக்கின்ற பிரச்சினைகளைப் பற்றி திறந்த மனதுடனும், நல்லெண்ணத்துடனும் பரஸ்பரம் கலந்துரையாடி உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.தேசிய அரசாங்கமெனும்காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வோமாக என்றும் அவர் கூறினார்.
இந்நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் அவர்களின் பிரத்தியேக செயலாளர் யூ.எம்.வாஹிட் அவர்களும்,நகரத் திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சின் இணைப்பாளர் ஏ.எல்.எம். மர்ஜூன் அவர்களும், உலமாப் பெருமக்கள், ஆசிரியர்கள், கட்சியின் ஆதரவாளர்கள், விளையாட்டுக் கழகங்களின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.