ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தியுள்ள மாவில்லு பேணற் காடு வன பிரகடனத்தை வாபஸ் பெற்றுக்கொண்டால் வில்பத்துவில் சுமார் ஒரு இலட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட வனபிரதேசம் அழிவுக்குள்ளாகிவிடும். நாட்டுப் பற்றுள்ள, சூழல் பற்றுக்கொண்ட பௌத்த மகா சங்கம் இதற்கு ஒரு போதும் இடமளியாது என மகா சங்கத்தின் செயலாளர் ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் மாவில்லு பேணற்காடு வனப்பிரகடனம் தொடர்பாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
வில்பத்து வன பிரதேசம் மக்களின் வாழ்விடங்களல்ல என்பது 1960 ஆம் ஆண்டின் இலங்கையின் வரைபடத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கூகுல் வரைபடம், ஆட்பதிவுத் திணைக்களத்தின் பதிவுகள் என்பனவும் அங்கு மக்கள் வாழவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. இந்நிலையில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான முஸ்லிம் அரசியல்வாதிகளும் சிவில் அமைப்புகளும் அப்பிரதேசங்களில் மக்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதை தவறாக நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர்.
இதேவேளை 2012 ஆம் ஆண்டின் வனபிரகடன வர்த்தமானி அறிவித்தலையும் 2017 ஆம் ஆண்டின் மாவில்லு பேணற்காடு வன பிகரடனத்தையும் ஜனாதிபதி வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என முஸ்லிம் தரப்பிலிருந்து போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஜனாதிபதியின் வனப் பிரகடனம் நியாயமானதே. அவர் இந்த வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற்றுக்கொள்ளக்கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும்.
அமைச்சர் ரிசாதின் சூழ்ச்சிகளுக்குள் ஜனாதிபதி சிக்கிக் கொள்ளக்கூடாது. இது தொடர்பில் விரைவில் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றினைக் கையளிக்கவுள்ளோம்.
ஜனாதிபதி வில்பத்து பிரதேசத்துக்கு நேரில் விஜயம் செய்து உண்மையான கள நிலைமைகளை அவதானிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். தமிழ் – சிங்கள புத்தாண்டு விடுமுறையின் பின்பு ஜனாதிபதி வன பிரகடனத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளக்கூடாது.
எவ்வித திருத்தங்களையும் மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றினையும் நடத்தவுள்ளோம். முள்ளிக்குளம் பகுதியில் எமக்குப் பிரச்சினையில்லை. ஏனைய பகுதிகளே பிரச்சினைகளுக்குள்ளான இடங்களாகும். வில்பத்து வனம் அழிக்கப்படுவதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் என்றார்.