பட்டதாரிகளின் பிரச்சினையும் : அரசியல்வாதிகளின் பத்திரிகை விளம்பரமும் - தீர்வுதான் என்ன..??

வை எல் எஸ் ஹமீட்-
ட்டதாரிகள் போராட்டம் தொடர்கிறது. சில அமைச்சர்களின் வாக்குறுதிகள் அவ்வப்போது காற்றுவாக்கில் அடிபடுகிறது. சில அமைச்சர்கள் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. நடந்தது எதுவுமில்லை. அரசின் மெத்தனப்போக்கிற்கு காரணம் அவர்கள் தமிழ் பேசும் மக்கள் என்பதா? என்ற கேள்வியும் எழுகிறது.

உண்மையில் அதிகார அரசியல்வாதிகளே இப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டிவர்கள். அவர்களின் கையாலாகத்தனம்தான் மக்களை போராட்டத்தில் தள்ளிவிடுகின்றது. போராட்டக்காரர்களுடன் சேர்ந்து போட்டோக்களை எடுத்து பத்திரகைகளுக்கு அறிக்கை விட்டால் அவர்களும் போராட்டத்தில் பங்கெடுத்து விடுவார்கள். மிகுதியை மக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்; அது அவர்கள் தலைவிதி.

பட்டதாரிகளின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்ன?
--------------------------------------------------------
பட்டதாரிகளின் போராட்டம் இதுதான் முதல் தடவை அல்ல. போராட்டம் அவர்களின் நியதியாகி விட்டது. கடந்தகால பட்டதாரிகள் வெற்றி பெற்றதுபோல் இப்பட்டதாரிகளும் தம்போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும். அதே நேரம் இந்நியதி தொடரமுடியுமா? எதிர்கால பட்டதாரிகளுக்காவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?

இதற்கான பதிலின் பிரதான பொறுப்பு அரசைச் சார்ந்ததாயினும் அரசியல் கட்சிகள், கல்விசார் சமூகம், பெற்றோர், மாணவர்கள் என்று சகலர்மீதும் சில பொறுப்புகள் இருக்கின்றன.

இப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்ற பட்டதாரிகள் ' எமது உரிமையைத்தான் கேட்கின்றோம்; எங்களுக்கு தொழில் தருவது அரசின் கடமை' என பேசுவதைக் கேட்கின்றோம். நிச்சயமாக அரசுக்கு இப்பிரச்சினை தொடர்பாக சில தார்மீகக் கடமைகள் இருக்கின்றன; என்பது உண்மையாகும். ஆனால் சட்டரீதியாக "அது எங்களின் உரிமையும் அரசின் கடமையும்" என்பது சரியா? இப்பிரச்சினை தொடர்பாக நிரந்தர தீர்வை நோக்கி பயணிப்பதானால் இக்கேள்விக்குரிய விடை அவசியமாகும்.


Welfare State
-----------------
இன்றைய நவீன உலகில் அரசுகளை Welfare States- மக்கள் நலனோம்பும் அரசு ( இங்கு தரப்படுகின்ற தமிழ் பதங்கள் உரிய கலைச்சொற்கள் அல்ல, ஒரளவு புரிந்துகொள்ளக் கூடிய சாதாரண சொற்களே). என அழைக்கப்படுகின்றன. 1972ம் ஆண்டு அரசியல் யாப்பின்படி இலங்கை ஒரு- Socialist Democratic Republic ஆகும். 1978ம் ஆண்டைய அரசியல் யாப்பின்படி இலங்கை ஒரு- Democratic Socialist Republic ஆகும். இரண்டிற்கும் இடையேயுள்ள வித்தியாசம் என்ன?

முன்னயதில் 'socialist' என்ற சொல் முதலாவதாகவும democratic என்ற சொல் இரண்டாவதாகவும் பின்னையது அதற்கு நேர்மாறானதாகவும் இருக்கின்றது. முன்னையதன் பொருள் மக்களின் நலனோம்புகைக்கு ஜனநாயத்தைவிட கூடுதல் முக்கியத்துவம் அளித்தல். அதனால்தான் அன்றைய ஶ்ரீமாவோவின் அரசு, நலனோம்புகை என்ற பெயரில் மக்களின் ஒவ்வொரு விடயங்களிலும் தலையிட்டு, மக்களின் ஜனநாயக உரிமைகளில் பல கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்து இறுதியில் படுதோல்வி அடைந்தது. சோசலிச அரசாங்கங்களும் இன்று தோல்வியடைந்து செல்வதற்கு அதுதான் காரணமாகும்.

1978ம் ஆண்டு, ' ஜனநாயக' என்ற சொல்லை முற்படுத்தியதன் பொருள்- limited/ minimal government ( மட்டுப்படுத்தப்பட்ட/ குறைவாக அன்றாட வாழ்வில் தலையிடுகின்ற அரசாங்கம்) என்பதாகும். இதனை liberal democracy என்றும் அழைப்பர். இங்கு அரசின் கடமை மக்கள் சுயமாக தம்வாழ்வை முன்கொண்டுசெல்ல உதவுவதும் அதற்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு/ ஏனைய வசதிகளையும் உரிய பாதுகாப்பையும் வழங்குவதாகும். அதாவது மக்களின் நலனோம்புகையைக் கைவிடுவதென்பதல்ல, மாறாக நலனோம்புகை என்ற பெயரில் எல்லாவற்றிலும் தலையிடாமல் மக்களின் சுயமான இயக்கத்திற்கு உதவுவது. இங்கு market economy யும் முக்கியத்துவம் பெறுகின்றது. எனவே முன்னைய யாப்பு social security ( சமூகப் பாதுகாப்பு) இற்கு முன்னுரிமை அளிக்க பின்னைய யாப்பு legal security- மனிதன் சுயமாக இயங்குவதற்குத் தேவையான சட்டரீதியான பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கின்றது.


பட்டதாரிகளுக்கோ அல்லது பொதுவாக படித்தவர்களுக்கோ தொழில் வழங்க வேண்டியது அரசின் சட்டபூர்வ கடமையா? அது எங்கள் உரிமையா?
--------------------------------------------------------
அவ்வாறு கடமை என்று அரசியலமைப்பிலோ அல்லது வேறு எந்த சட்டத்திலோ குறிப்பிடப் படவில்லை. அவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தால் நீதிமன்றம் சென்று அந்த உரிமையை நிலைநாட்ட முடியும். மாறாக அரசியலமைப்பின் Directive Principles Of State Policy And Fundamental Duties என்ற தலைப்பின்கீழ் கூட ' சமூக, பொருளாதார, அரசியல் விடயங்களில் மக்கள் நலனை முன்னேற்றுவது, பாதுகாப்பது மற்றும் உணவு, உடை, உறையுள் மற்றும் இதர விடயங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது பொருத்தமான வாழ்வாதாரத்தை ஏற்படுத்துவது என்பன அரசின் இலக்கு என்றே குறிப்பிடுகின்றது.

சர்வதேச மனித உரிமைச் சாசனங்களும் மேற்படி விடயங்களையே வலியுறுத்துகின்றன. எனவே எமக்குத் தொழில் தருவது அரசின் கடமையல்ல மாறாக நாங்கள் சுயமாக ஒரு தொழிலைப் பெற்றுக் கொள்ளக்கூடிய களநிலையை உருவாக்குவதும் அத்தொழில்களுக்கேற்றவிதத்தில் உரிய பயிற்சிகளை வழங்குவதும் அரசின் கடமையாகும்.
இங்குதான் படித்தவர்கள் தொழில் பெறக்கூடிய களநிலையை அரசு உருவாக்கியிருக்கின்றதா? அதற்கு தேவையான பயிற்சிகளை நமக்குத் தந்திருக்கின்றதா? என்ற கேள்விகள் எழுகின்றன.


இரண்டு கேள்விகளுக்கும் திருப்திகரமான விடைகள் இல்லை. குறிப்பாக இரண்டாவது கேள்விக்கு அடியோடு திருப்திகரமான பதில் இல்லை. காரணம் நமது பல்கலைக் கல்வி முறை ( சில துறைகள் தவிர) தொழில் சந்தைக்கு ஏற்றவிதத்தில் வடிவமைக்கப்படவில்லை. பல்கலைக் கழக பட்டப்படிப்பை முடித்திருந்தும் தொழில் சந்தையில் அவர்களுக்கான கேள்வி இன்மையே அவர்கள் அரசிடம் கையேந்த வேண்டிய நிலையை ஏற்படுத்துகின்றது.

இது அரசின் பிரதான குறைபாடாகும். இந்த நிலையில்தான் ஏதோ ஒரு விதத்தில் இவர்களுக்கு தீர்வு வழங்க வேண்டிய தார்மீகக் கடமை அரசுக்கு ஏற்படுகிறது. அந்த அடிப்படையில்தான் கடந்தகாலங்களிலும் பட்டதாரிகள் வெற்றிடங்கள் இருக்கின்றனவா? என்ற கேள்விக்கும் அப்பால் அரச சேவையில் உள்ளீர்க்கப் பட்டார்கள். ஆனால் இது எவ்வளவு காலம் தொடர முடியும்? பட்டம் படித்துவிட்டு இவர்கள் தொழிலுக்காக படும் வேதனை?

இதற்கான நிரந்தர தீர்வு என்ன?
-----------------------------------

ஒன்று அரசு கல்வி முறையில் உரிய மாற்றங்களைச் செய்வது. ( ஏற்கனவே சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன ). அதே நேரம் கல்வி முறையில் என்ன மாற்றம் ஏற்பட்டாலும் இன்னுமொரு விடயத்திலும் மாற்றம் ஏற்பட்டாலேயொழிய இதற்கு நிரந்தர தீர்வில்லை. அதுதான் " ஆங்கில மொழி அறிவு".

இன்று பூகோள கிராமத்தைப்பற்றி பேசுகின்ற காலத்தில் எவ்வளவுதான் படித்திருந்தாலும் ஆங்கில மொழி அறிவு இல்லாமல் தனியார் சந்தையில் இடம்பிடிப்பது கடினமாகும். மறந்த தலைவர் அடிக்கடி கூறுவார்," தொழில்தேடி கியூவில் நிற்கிறார்கள்; தொழிலில்லை, மறுபுறம் தொழில்கள் கியூவில் நிற்கின்றன, எடுக்க ஆட்கள் இல்லை; என்று." காரணம் ஆங்கில மொழித்தேர்ச்சியின்மை.


துரதிஷ்டவசமாக, அன்று அறிமுகப்படுத்தப்பட்ட சுயபாசைத் (vernacular language) திட்டம்தான் இன்றைய இந்த நிலைக்கு பிரதான காரணம். இப்பொழுது செய்யவேண்டியது, கல்வித்திட்டத்தில் மேலும் செய்யவேண்டிய மாற்றங்கள் தொடர்பாக கல்விசார் சமூகம் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் அதேவேளை, எங்களது பிள்ளைகளை முடிந்தளவு ' ஆங்கில மொழிமூல - English Medium- கற்கைக்கு ஊக்கப்படுத்த வேண்டும். இந்த விடயத்தில் பாடசாலை சமூகம், அரசியல் வாதிகள், பெற்றோர்கள் இணைந்து செயற்பட வேண்டும். அதே நேரம் ஆங்கில மொழிமூலமோ/ தமிழ் மொழிமூலமோ, எதுவாக இருந்தாலும் ஆங்கில அறிவை விருத்தி செய்வதில் விசேட திட்டங்கள் அமுல் படுத்தப்பட வேண்டும். இது பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக செய்யப்பட வேண்டும்.

குறிப்பாக, ஆங்கிலம் பேசுவதில் போதுமான பயிற்சி எடுக்க வேண்டும். ஆங்கிலத்தைக் துறைபோக கற்றுவிட்டுத்தான் ஆங்கிலம் பேசவேண்டும். பிழையாகப் பேசிவிட்டால் மற்றவர் எள்ளிநகையாடுவார்கள்; என்கின்ற மனோநிலை மாறவேண்டும்.

ஒரு மொழியைக் கற்கின்ற விடயத்தில் ' acquisition is first and learning next என்று கூறுவார்கள். அதாவது மொழியை ஒரு மனிதன் முதலில் பிடிக்கிறான், அதன்பின்னர்தான் படிக்கிறான். இதனை, 'language is caught rather than taught'
என்றும் கூறுவார்கள். To acquire the language, the language must be heard. To hear the language, there must be an environment where the language is heard. ஒரு மொழியைப் பிடிப்பதற்கு அம்மொழி காதில் கேட்க வேண்டும். அவ்வாறுதான் நமது தாய்ப்பாசையும் நாம் படிக்க முதல் பிடிக்கிறோம். எனவே மொழி காதில் கேட்பதற்கு மொழி பேசப்படுகின்ற சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

இது பாடசாலை மட்டத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அதற்கு வகுப்பில் ஆங்கில ஆசிரியர் தமிழில் ஆங்கிலம் கற்பிப்பதை நிறுத்த வேண்டும். மாணவர்களுக்குப் புரியாது; என்று நினைப்பது அவர்களது பயிற்சிக்கு முரணானது. அவர்கள் பின்னர் புரியட்டும்; முதலில் பிடிக்கட்டும்.

ஒரு மொழியைப் படிக்கும்போது மூன்று வகையான பிழைவிடும் கட்டங்கள் ஏற்பட்டே தீரும்.
1) pre- error stage ( பிழைவிட முன் உள்ளகட்டம்)

2) error stage ( பிழை விடும் கட்டம் )

3) post- error stage ( பிழை விடுவதற்கு பின்னுள்ள கட்டம்) இந்த கட்டத்தில் விடுவது பிழை( error) அல்ல. அவை mistake ( தவறு) ஆகும்.

இவற்றை விபரிக்க இங்கு இடம் போதாது. எனவே ஒரு மனிதன் இந்த மூன்று கட்டடங்களையும் ஒரு மொழி கற்றலில் தாண்டியே தீரவேண்டும்; என்கின்றது ஆராய்ச்சி முடிவுகள் .

எனவே பிழையைப் பற்றி அச்சப்படாமல் பேசுங்கள். அதே நேரம் ஆங்கில ஆசிரியர்கள் மற்றும் ஆங்கிலம் பேசக்கூடியவர்கள் ஒவ்வொரு பிரதேசத்திலும் English Speaking Societies களை அமைத்து மற்றவர்கள் ஆங்கிலத்தைக் கேட்கக் கூடிய environment ஐ உருவாக்குங்கள். ஒரு பத்துவருட திட்டமிட்ட அடிப்படையில் பல்கலைக்கழக சமூகம், அரசியல்வாதிகள் மற்றும் படித்தவர்கள் ஒன்றிணந்து ஒரு திட்டத்தைத் தீட்டி இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண முன்வரவேண்டும். அதுவரை காத்திராமல் அதிகாரத்தில் உள்ளவர்கள் இந்த பட்டதாரி மாணவர்களின் இன்றைய பிரச்சினைக்கு அவசர தீர்வுகாண முன்வரவேண்டும்.

குறிப்பு: இன்று முகநூலிலும் வட்ஸ்அப் களிலும் எத்தனையோ பேர் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஏன் உங்கள் ஆங்கில விருத்திக்காக வட்ஸ்அப் குறூப்புகளயும் முகநூல் நட்புகளையும் உருவாக்கக் கூடாது? என்பது பற்றியும் சிந்தியுங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -