பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணத்தில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் கப்பம் கோரும் நடவடிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தொிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (4) நடைபெற்ற யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் கலந்துக் கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்;
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை அச்சுறுத்தி அவர்களிடமிருந்து பெருந்தொகையான பணம் கப்பமாகக் கோரப்படுகிறது. ஆனால் இது தொடர்பில் முறைபாடுகளை வழங்குவதற்கு பாதிக்கப்பட்டவர்கள் அஞ்சுகின்றனர். ஆனால் இவ்வாறான பிரச்சினையை தீர்ப்பதற்கு பாதிக்கப்பட்டவர்கள் துணிந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இது குறித்த தகவல்களை வழங்குவது அவசியமாகும். அதேவேளை கப்பம் கோரும் கலாசாரம் அதிகரித்துச் செல்வதும் பாரதூரமான விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடமராட்சி பகுதியில் வெளிநாடு ஒன்றில் இருந்து வந்த ஒருவரிடம் நால்வர் வாள்களுடன் சென்று மிரட்டி பணம் பெற முற்பட்டதுடன் இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர் பருத்திதுறை பொலிஸில் முறைப்பாடும் செய்திருந்தார்.
இதன் அடிப்படையில் இருவரை பொலிஸார் கைது செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.