டெங்குவை அறிவோம் வரும்முன் காப்போம் - வைத்தியர் அஹமட் பரீட்

அஹமட் இர்ஷாட்-
'டெங்கு' பெயரைக் கேட்டாலே உள்ளத்தில் இனம் புரியா பயம், இம்முறை டெங்கின் கோர தாண்டவத்தினால் முழு இலங்கையும் பாதிப்படைந்துள்ளது. ஓவ்வொரு வைத்தியசாலையிலும் கட்டில்கள் டெங்கு நோயாளர்களால் நிரம்பி வழிகிறது. டெங்கினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் செல்கிறது. அதிலும் குறிப்பாக நமது அயல் மாவட்டமான திருகோணமலையில் குறைந்த காலத்தில் அதிக நோயாளிகளை தாக்கி தனது மரணப்பட்டியலில் மேலும் 15 உயிர்களை சேர்த்துக் கொண்டது. இன்னும் கிண்ணியா வைத்தியசாலையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தவாரேயுள்ளது கடந்த சில தினங்களுக்கு முன் காத்தான்குடியிலும் ஆறு வயது சிறுமியின் உயிரைக் காவுகொண்டது இந்த இரக்கமில்லா டெங்கு.

எமது பிரதேசத்திலும் ஆங்காங்கே டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள், இறைவனின் உதவியால் எவ்வித டெங்கு உயிரிழப்புக்களும் இதுவரை நடைபெறவில்லையாயினும் எமது பிரதேசத்திலும் டெங்கு பெருவாரியாக பரவுவதற்கு ஏற்றாப்போலே பிரதேசத்தின் சுற்றுப்புறச் சூழழும், நுளம்புப் பெருக்கமும் காணப்படுகின்றது. எமது பிரதேசத்திலுள்ள ஒவ்வொருவரும் டெங்கு பற்றிய அடிப்படையான அறிவைப் பெற்றிருப்பதன் மூலம் காய்ச்சல் ஏற்படுகின்ற போது அதன் அறிகுறிகளை அடையாளம் கண்டு மேற்கொள்ள வேண்டிய விடயங்களை தாமதியாது செய்யவும், டெங்குவை மிக ஆரம்பத்திலேயே அடையாளம் காண்பதற்கும், உரிய சிகிச்சையினை தாமதியாது பெருவதற்கும், உயிரிழப்புகள் ஏற்படுவதிலிருந்து தவிர்ந்த கொள்ளவும் வாய்ப்பாக அமையும் ஆகவே ஒவ்வொருவருக்கும் டெங்கு பற்றி தெரிந்திருக்க வேண்டிய வினாக்களும் அதற்கான எளிய விடைகளுமாக இந்த ஆக்கம் அமைகிறது. 

*.டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?

டெங்கு (Dengue) என்ற ஒருவகை வைரசினால் ஏற்படுகின்ற வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட ஒருவருக்கு கடித்த நுளம்பு மற்ற ஒருவருக்கு கடிப்பதினால் இந்த வைரஸ் டெங்கு நோயாளர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு இரத்தத்தில் பரப்படுகின்றது. இவ்வாரு நுளம்புக்கடியினால் வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவருக்கு மூன்று வகையான டெங்கு காய்ச்சல் நிலைகள் உருவாகலாம். இவற்றை டெங்கு காய்ச்சலின் வகைகள் எனவும் குறிப்பிடலாம். அவையாவன:

1. சாதாரண டெங்கு காய்ச்சல் (Simple Dengue Fever)

2. Dengue Hemorrihgic Fever (DHF) (டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சல்)

3. Dengue Shock Syndrome (DDS)

*.டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?

டெங்கு காய்ச்சலின் மிகப்பிரதான ஆரம்ப அறிகுறி அதிக காய்ச்சல், மூட்டுவலி, தசைவலி, தலைவலி, கண்ணுக்கு பின்புரமாகவுள்ள பகுதியில் வலி, உணவில் விருப்பமின்மை, வாந்தி, வயிற்றுநோவு என்பன ஏற்படலாம். காய்ச்சல் ஏற்பட்ட ஆரம்பதினங்களில் டெங்கு காய்ச்சலை ஏனைய வைரஸ் காய்ச்சலில் இருந்து நோய் அறிகுறிகளை மாத்திரம் வைத்து வேறுபிரித்தறிவது மிகக்கடினம்.

டெங்கு காய்ச்சலின் வகைகளும் அதன் தன்மைகளும் என்ன?

1. Simple Dengue Fever – (சாதாரண டெங்கு காய்ச்சல்)

இந்ந வகையான டெங்கு காய்ச்சல் எந்தவிதமான ஆபத்தான நிலைகளையும் ஏற்படுத்தாது. இது சாதாரண வைரஸ் காய்ச்சலை ஒத்ததாக இருக்கும். டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளான காய்ச்சல், தலைவலி, மூட்டுவலி, தசைவலி, உணவில் விருப்பமின்மை, வாந்தி என்பன ஏற்படலாம்;. Platelet 100ஐ விடவும் குறையலாம். ஆனால் Plasma Leakage என்னும் ஆபத்தான நிலை ஏற்படாது. 

2. Dengue Hemorrihgic Fever (DHF) (டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சல்)

இந்ந வகையான டெங்கு காய்ச்சல் உள்ளவர்களுக்கு மேலே குறிப்பிட்ட டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளுடன் மேலதிகமாக Plasma Leakage உம் ஏற்படும். அதாவது சிறிய இரத்தக்குழாய்களில் கசிவு ஏற்பட்டு இரத்தத்தில் உள்ள திரவ நீரானது இரத்தக் குழாய்களில் இருந்து வெளியேறி சுவாசப்பை, வயிற்றுக்குழி என்பனவற்றில் தேங்கும். இதனால் மூச்சியிளைப்பு, வயிறுவீக்கம் ஆகியன ஏற்படும். இவ்வாறு திரவநீர் இரத்தக் குழாய்களிலிருந்து கசிந்து வெளியேருவதால் இரத்தம் திண்மமடையும். இரத்தத்தின் அளவு குறைவடையும். இரத்த அழுத்தம் (Blood Pressure ) குறைவடையும். இதனால் ஈரல், சிறுநீரகம், மூளைகளுக்கான இரத்த ஓட்டம் குறைவடைந்து தலை சுற்றுதல், வயிற்றுவலி, வாந்தி, சிறுநீர் குறைவடைதல், சுயநினைவிழத்தல், முரசு, மூக்கு, சிறுநீர் வழியாக இரத்தம் வெளியாகுதல் போன்றவையும் ஏற்படலாம்.

3. Dengue Shock Syndrome (DDS)

இது மிக மிக ஆபத்தான டெங்கு காய்ச்சல் நிலையாகும் இது Plasma Leakage அதிக திரவம் வெளியேறி Blood Pressure மிக மிக குறைந்து ஈரல், மூளை, நுரையீரல், சிறுநீரகம், இதயம் என்பன செயல் இழந்த நிலையாகும

ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட முதல் நாளே அவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் மேற்குறிப்பிட்ட எந்த வகையான டெங்கு காய்ச்சலாக இருக்கும் என யாராழும் ஊகிக்கமுடியாது. டெங்கு காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நோயாளியை தொடர்ந்தேர்ச்சியாக குறித்த நேர இடைவெளியில் கண்காணித்து Plasma Leakage உடன் கூடிய ஆபத்தான டெங்கா என்பதை அறிந்து கொள்ள முடியும். பொதுவாக Dengue Hemorrihgic Fever (DHF) , Dengue Shock Syndrome (DDS) என்பன காய்ச்சல் ஏற்பட்டு 4ஆம், 5ஆம், 6ஆம் நாட்களில் Platelet 100ஐ விட குறைந்துள்ள நிலையிலேயே ஏற்படும்.

டெங்கு காய்ச்சலின் போது Platelet குறைவடைவது ஏன்?

டெங்கு காய்ச்சலில் மட்டுமல்லாது சாதாரண வைரஸ் காய்ச்சலிலும் Platelet குறைவடையலாம். வைரசினால் உடலில் ஏற்படுத்தப்படும் நிர்ப்பீடன, இரசாயன மாற்றங்களின் தாக்கத்தினால் Platelet உடைந்து அழிவதினால் Platelet இன் எண்ணிக்கை குறைகின்றது. சாதாரண வைரஸ் காய்ச்சல் என்றால் Platelet பொதுவாக 100 000 வரையும் குறையலாம் ஆனால் டெங்கு வைரஸ் காய்ச்சல் என்றால் 100 000ஐ விடவும் மிக மிக குறைந்த மட்டத்திற்கு குறையலாம்.

டெங்கு காய்ச்சல் என்பது 7 அல்லது 8 நாள் நோயாகும். காய்ச்சல் ஆனது பொதுவாக முதல் 4 அல்லது 5 நாட்களுக்கு இருக்கும். Platelet முதல் நாள் தொடக்கம் 5ஆம் அல்லது 6ஆம் அல்லது 7ஆம் நாள் வரை படிப்படியாக குறைந்து வரும், பின்னர் தொடர்ச்சியாக அதிகரிக்கும் Platelet இல் ஏற்படும் அதிகரிப்பானது ஒருவர் டெங்கு காய்ச்சலில் இருந்து குணமடைந்ததற்கான ஆதாரமாக கொள்ளப்படும். சாதாரண டெங்கு காய்ச்சலிலும் Platelet 100ஐ விடவும் மிக அதிகமாக குறைந்தாலும். ஆபத்தான இரத்தக்கசிவு நடைபெறாது.

டெங்குவின் அபாயமான காலம் (Critical Period) என்றால் என்ன?

Dengue Hemorrhagic Fever (டெங்குஇரத்தக்கசிவு காய்ச்சல்) இல் குருதி திரவம் கசிந்து வெளியேரும் காலமாகும்; இது பொதுவாக 48 மணித்தியாலங்கள் நீடிக்கும் இந்த அபாய காலம் ஆரம்பிக்கும் போது நோயாளிக்கு காய்ச்சல் கட்டாயம் இருக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு நோயாளிக்கும் திரவ கசிவு வீதம் வித்தியாசப்படும் அதற்கேற்றாப் போல் குருதியமுக்கம் (Blood Pressure) சிறுநீர் அளவு என்பன மாறுபடும். குறித்த டெங்கு நோயாளி சாதாரண டெங்கு நோயாளியா? அல்லது குருதி திரவ கசிவுடன் கூடிய டெங்கு நோயாளியா? என்பதை சிறுநீர் வெளியேரும் அளவு குறைவதிலிருந்தும் குருதியமுக்கம் குறைவதிலிருந்தும் அறிந்து கொள்ளலாம். ஆகவே வைத்தியசாலையில் டெங்கு நோயாளர்களாக இருக்கும் போது வைத்தியர்கள் அறிவுருத்தும் நேர இடைவெளியில் கட்டாயமாக சிறுநீர் கழித்து அதனை அளவிட்டு பார்ப்பதன் மூலம் டெங்குவின் அபாயகரமான காலத்தை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பதன் மூலம் அதற்கான சிகிச்சைகளை ஆரம்பித்து தொடர்ந்தேர்ச்சியான மிகக் கவனமான கண்கானிப்பின் மூலம் டெங்கானது மிக ஆபத்தாக கட்டத்தை Dengue Shock Syndrome அடைவதை தடுக்கலாம்.

காய்ச்சல் ஏற்பட்டு எத்தினையாவது நாள் இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் ?

காய்ச்சல் ஏற்பட்ட முதல் நாளே டெங்கு காய்ச்சலை துல்லியமாக கண்டறியக்கூடிய இரத்தப் பரிசோதனைகள் உள்ளன. காய்ச்சலுடன் டெங்குக்குறிய ஏனைய அறிகுறிகளும் காணப்படும் இடத்து காய்ச்சல் வந்த முதல்(1) அல்லது இரண்டாம்(2) நாள் FBC, NS1 போன்ற இரு இரத்தப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். காய்ச்சல் வந்தால் மூன்று நாளைக்குப் பிறகுதான் செய்ய வேண்டும் என்ற சம்பிரதாய மருத்துவம் செய்யலாகாது. 

NS1 என்றால் என்ன?

இது டெங்கு வைரஸின் ஒரு பாகமாகும் இது இரத்திலுள்ள போது ஒருவர் டெங்கு வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதினை உறுதிப்படுத்தலாம். காய்ச்சல் வந்து 4ஆம் அல்லது 5ஆம் அல்லது அதன் பின்னரான நாட்களில் வைரஸின் அளவு குறைவடைவதால் NS1இரத்தத்திலிருந்து இல்லாமல் போகும். ஆகவே காய்ச்சல் வந்து 4ஆம் அல்லது 5ஆம் நாட்களுக்குப் பிறகு NS1பரிசோதனை செய்வது உகந்தது அல்ல.

எனக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும். 

01-மிக விரைவாக வைத்தியர் ஒருவரை சந்தித்து அறிவுரை பெற வேண்டும். காய்ச்சல் உண்டான நாள் மற்றும் அப்போதய நோய் அறிகுறிகளை வைத்து வைத்தியர் நீங்கள் எப்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பார்.

02-டெங்கு என அறிந்து கொண்ட வேலையில் இருந்து ஓய்வு தேவை.

03-உடம்பு வலி, தலைவவி இவற்றுக்கு பேனடோல் (Panadol) அல்லது பேனடின் (Panadine) மட்டுமே பாவிக்க வேண்டும்.

03-சாதாரணமாக உடம்பு நோவுக்கு பாவிக்கின்ற டைக்கிலோபேனிக் சோடியம் (Diclofenac Sodium) போன்ற மருந்துகளை பாவிக்க கூடாது.

04- நீங்கள் இருதய நோயாளராக இருந்து அஸ்பிரின் (Aspirin குலோபீ டோக்ரல் (Clopidogrel) போன்ற மாத்திரைகள் தினந்தோரும் பாவிப்பவராயின் இதனை உடனடியாக வைத்தியரின் கவனத்திற்கு கொண்டு வந்து அவரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப தற்காலிகமாக மாத்திரைகளை நிறுத்த முடியும்.

05-டெங்கு காய்ச்சல் உள்ள காலத்தில் மாதவிடாய் ஏற்படும் பட்சத்தில் அதிகளவான குருதி இழப்பு ஏற்பட கூடும் ஆகவே நீங்கள் மதவிடாயில் இருந்தால் அல்லது மாதவிடாய் ஆரம்பிக்க சில நாட்களே இருந்தால் இதனை வைத்தியரின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும்.

06-வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பிறகு வைத்தியர்கள் அறிவுறுத்தும் அளவிற்கே நீர் பருக வேண்டும்.குறிப்பிட்ட நேர இடைவெளியில் கட்டாயமாக சிறுநீர் கழித்து அளந்து அதனை சிறுநீர் கழித்த நேரம் உட்பட குறித்து கொள்ளவேண்டும்.

07-எழும்பும் போது தலை சுத்துதல், வயிற்று நோவு, வாந்தி, சிறுநீர்குறைதல் முறசு, மூக்கு அல்லது எதாவது இடத்தில் இருந்து இரத்தம் கசிதல் போன்றவை இருந்தால் உடனடியாக தாதிமார் அல்லது வைத்தியர்கள் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும்.

08-இளநீர், ஜீவனி, தோடம்சாறு, பழச்சாறு, கஞ்சி போன்ற சிறந்த பானம்களை வைத்தியர் அறிவுறுத்தும் அளவிற்கு குடிக்க வேண்டும். மேலும் சாதரண நீரை முடியுமானவரை தவிர்த்து கொள்வது சிறந்தது. ()

09-பீற்றூட், ஆப்பிள் சாறு போன்ற சிறுநிர் சிவப்பு நிற மாற்றத்தை உண்டு பன்ன கூடிய மற்றும் சீனி சேர்க்கப்பட்ட மென்பான வகைகளையும் கட்டாயமாக தவிந்து கொள்ளவேண்டும்.

டெங்கு காய்ச்சலை குணப்படுத்த உள்ள மருத்துவ சிகிச்சை முறைகள் என்ன? 

டெங்கு காய்ச்சல் வைரஸினால் ஏற்படும் நோய் என்பதால் இதுவரை டெங்குவை குணப்படுத்த நேரடியாக மருந்து வகைகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்ற நோய் அறிகுறிகளுக்கு ஏற்றாற்போல் அவற்றை கட்டுப்படுத்த பொதுவான மருந்துகள் உள்ளன. டெங்கு நோயாளியின் பிரதான சிகிச்சை முறையாக இருப்பது பொருத்தமான நீர்ச்சத்து முகாமைத்துவமாகும். (Fluid Management;).;). காய்ச்சல் ஏற்பட்ட முதல் இரு நாட்களில் அதிக காய்ச்சல் காரணமாக அதிக நீரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே போதியளவு நீர் (இளநீர்ஃஜீவனி) குடிப்பதன் மூலம் நீரிழப்பு ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் சிறுநீரை குறிப்பிட்ட நேர இடைவெளியில் தொடர்ச்சியாக அளவிடுவதன் மூலம் நோயாளிக்கு தேவையான நீரின் அளவை வைத்தியர் அறிவுருத்துவார். மிக முக்கியமாக நோயாளியின் சிறுநீர் அளக்கும் விடயத்தில் மிக கவனமாகவும், கரிசணையுடனும் இருக்க வேண்டும். சிறுநீர் பாரம் இல்லாவிட்டாலும் குறித்த நேர அளவில் சிறுநீர் கழிக்க முயற்சி செய்ய வேண்டும். 

வைத்தியர் அறிவுருத்தும் அளவிற்கு குறைவாகவோ ஃ அதிகமாகவோ நீர் அருந்துவதை தவிர்த்து கொள்ள வேண்டும். வாந்தி, வயிற்றோட்டம் போன்ற மேலதிக நீர் இழப்புகள் இருந்தால் இதை வைத்தியரிடம் அறிவித்து மேலதிக நீரின் அளவை வைத்தியரின் ஆலோசனையுடன் தீர்மானித்துக் கொள்ளலாம். 

சிறுநீரின் அளவு, நோயாளியின் நிலைமை என்பவற்றை கருத்திற் கொண்டு வைத்தியர் நீர் இழப்பை வாய் மூலமாகவோ, சேலேன் (Saline) மூலமாகவோ நிவர்த்தி செய்வார். இரத்த கசிவுகள் (முரசு, மூக்கு, குடல், நுரை ஈரல்) ஏற்படும் பட்சத்தில் தேவையான போது இரத்தம் ஏற்றவும் தேவை ஏற்படலாம்.

பப்பாசி இலை சாறு குடிப்பதால் டெங்கை குணப்படுத்தலாமா? 

இது வரை எந்த ஆராய்சியினாலும் உறுதிப் படுத்தப் படவில்லை. பப்பாசி இலை சாறு சில நோயாளிகளில் சிறிதலவான பிலேட்லட் அதிகரிப்பதை ஏற்படுத்தலாம் இதனால் டெங்குவை குணப்படுத்திவிட முடியாது. ஏன் என்றால் டெங்கு என்பது தனியே பிலேட்லட் குறைவதால் மட்டும் ஆபத்தான நிலைகள் ஏற்படுவதில்லை மாறாக இரத்த குழாய்களில் ஏற்படும் கசிவே டெங்குவின் ஆபத்தான குருதி பெறுக்கு நிலைகளுக்கு காரணமாகும். பப்பாசி இலை சாறு குடிப்பதால் மேலதிக பயன் எதுவும் இது வரை நிறுபிக்கப்பட வில்லை ஆகவே பப்பாசி இலை சாறை தவிர்த்துகொள்வது நல்லது.

டெங்கு நோய் பரவுவதை எவ்வாறு தடுக்கலாம்.

1. டெங்கு வைரஸை பரப்பம் நுளம்பு வளரும் இடங்களை தமது சுற்றுப்புற சூழலில் இருந்து இல்லாதொழித்தல்:

நீர் சிறிது சிறிதாக தேங்கி நிற்கின்ற இடங்களிலேயே தனது முட்டைகளை இட்டு தனது இனத்தை பெருக்குகிறது. ஊதாரணமாக யோக்கட் கப், இளநீர் குறும்பை, உடைந்த பாத்திரங்கள், டயர், வாழையிலையின் அடித்தண்டுப் பகுதி, வீட்டுக்கூறையின் பீழி, பூச்சாடிகள், நீர்த்தாங்கிகளின் மூடிகளில் தேங்கி நிற்கும் நீரே இந்நுளம்புகளின் குடம்புகளின் பெருக்கத்திற்கு ஏதுவாக அமைகின்றது. எனவே இவ்வாறான இடங்களை தமது சுற்றுப்புற சூழலலிருந்து முற்றாக அகற்றுவதன் மூலமும் , இவ்வாறான இடங்களில் நீர்த்தேங்கு நிற்பதை தடுப்பதன் மூலமும் தமது தோட்டங்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலமும் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை தடுக்கலாம்.

2. டெங்கு நுளம்பு கடிப்பதிலிருந்து தவிர்ந்த இருத்தல் 

டெங்கு நுளம்பானது பொதுவாக பகல் வேளைகளிலேயே கடிக்கின்றது. மாணவர்கள் ஆசிரியர்கள் பாடசாலைகளிலும், உத்தியோகத்தர்கள் அழுவலகத்திலும், தொழிலாளர்கள் வேளைத்தளங்களிலும் உள்ள நேரமாகும். ஆகவே இரவில் நுளம்பு வலைகளில் தூங்குவதால் மட்டும் டெங்கு நுளம்பின் கடியிலிருந்து தப்பமுடியாது. ஆகவே தங்களை நுளம்பு கடிப்பதிலிருந்து பகல் வேளைகளிலும் பாதுகாக்க நுளம்பு விரட்டிகளை (Soffell, Odomos, Citrenella oil) பாவிப்பதோடு தாம் பகல் நேர ங்களிலிருக்கும் சுற்றுப்புறச் சூழலையும் டெங்கு நுளம்பு பெருக்கமற்றதாக, சுத்தமானதாக வைத்துக் கொள்ள வேண்டும்.

3. டெங்கு நோயாளர்களுக்கு மேலும் மேலும் நுளம்பு கடிப்பதிலிருந்து பாதுகாத்தல்.

டெங்கு காய்ச்சல் நோயாளியின் இரத்தத்தில் அதிக எண்ணிக்கையான டெங்கு வைரஸ் காணப்படுகின்றது. இவர்களை டெங்கு நுளம்பு கடிக்கும் போது நுளம்புகள் வைரஸினைப் பெற்று மற்றவர்களுக்கு பரப்பக்கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது. எனவே டெங்கு நோயாளி நுளம்பு விரட்டிகளை பாவிப்பதோடு வைத்தியசாலையில் உள்ளபோது நுளம்பு வலைகளையும் பாவிப்பது அவசியமாகிறது. 

டெங்கு நோய் பற்றியும் அதன் தாக்கங்கள் பற்றியும் அறிந்துள்ள நான் டெங்குவை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? 

எதையும் வருமுன் காப்பதே சிறந்தது (Prevention is better than Cure டெங்குவை வராமல் தடுக்க ஃ கட்டுப்படுத்த ஒன்றிணைந்த கூட்டு முயற்சி தேவை. ஆகவே ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் சுற்றுப்புறச் சூழலில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பதோடு தமது அயலவர்களையும் அதன் பால் தூண்ட வேண்டும். பாடசாலைகளையும், அலுவலகங்கள், பள்ளிவாயல்கள், மதரஸாக்கள், கடைத்தொகுதிகள், சந்தைத்தொகுதிகள், வைத்தியசாலைகள் போன்ற பகல் வேளைகளில் மக்கள் கூடும் இடங்களில் உள்ள டெங்கு நுளம்பு பரவும் இடங்களை அழிக்க வேண்டும். இதற்கான சிரமதான கூட்டு முயற்சிகளை தங்களது வேலைத்தளங்களில், அலுவலகங்களில் ஊக்குவிக்க வேண்டும்.

வெளியீடு-2002ம் ஆண்டு க.பொ.த.சாதாரன தர மாணவர்கள் (மட் அந் நூர் மாகாவித்தியாலயம் தேசிய பாடசாலை)
தொகுப்பு – வைத்தியர் எஸ்.அஹமட் பரீட் (MBBS) 
கொழும்பு தேசிய வைத்தியசாலை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -