ஆட்சி நல்லாட்சிதான் எனினும் ஆட்சியாளர்கள்தான் ஊழல்வாதிகள் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார். வவுனியா மாவட்டஇளைஞர்கள் சேவை மன்றத்தில் இன்று இடம்பெற்ற இளைஞர் கழக சம்மேளனக் காரியாலய திறப்புவிழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் மஸ்தான் எம்.பி மேலும் உரையாற்றுகையில்,
ஆட்சியை இளைஞர்களின் ஒத்துழைப்புடன் நல்லாட்சியாக்கியானாலும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆட்சியாளர்கள் கடந்த அரசாங்கத்திலும் பல்வேறான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களே தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் எனினும் இளஞர்களால் அவ்வாறானவர்களை வீட்டுக்கு அனுப்ப முடியும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இளைஞர்களது திறமைகள் ஒருபுறம் வெளிப்பட்டாலும் மறுபுறம் அவர்களை பிழையாக வழிநடத்திச்செல்லும் செய்திகளையே நாம் அதிகமாக காண்கிறோம்.
உதாரணமா சமூக ஊடகங்களை இளைஞர்கள் கையாளும் விதங்கள் மிகவும் பயங்கரமானதும் கோழைத்தனமானதுமாக காணப்படுகிறது சிலர் பாலியல் ரீதியாகவும் சிலர் அரசியல் ரீதியாகவும் அடிமையாக்கப்பட்டுள்ளனர். எனினும் சிலரே நாட்டினதும் சமூகத்தினதும் அபிவிருத்தி தொடர்பாகவும் நல்ல விடயங்களுக்காக இவ்வூடகங்களை பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்கள் சில அரசியல்வாதிகளின் அடிமைகளாக போலி முகநூல்களை உருவாக்கி அவர்களுக்காக ஏனைய அரசியல்வாதிகளை விமர்சிக்க தொடங்குகின்றனர். உண்மையிலே அவ்வாறு செயற்படும் இளைஞர்களுக்கு தைரியம் இருந்தால் தங்களது சொந்த முகநூல்கள் மூலமாக விமர்சிக்க வேண்டும், அல்லது நேரில் சென்று தாங்கள் இழைக்கும் தவறுகளை குறித்த அரசியல்வாதிகளிடம் சுட்டிக்காட்ட வேண்டும் இதுவே அரசில்வாதிகளை அணுகும் அல்லது தவறுகளை சுட்டிக்காட்டும் முறையாகும்.
அதை விடுத்து பணத்திற்கு விலை போகும் இளைஞர்களாக மாற்றமடைவது சாலச்சிறந்ததாக அமையாது.தொழில்நுட்பமூடாக தங்களது திறமைகளை சரியான முறையில் வெளிக்கொணரும் இளைஞர்களுக்கு நிச்சயமாக சமூகத்தில் அங்கீகாரமும் அதற்கான பிரதிபலனும் கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோகராதலிங்கம் வட மாகாண சபை உறுப்பினர்களான சே.மயூரன், தர்மபால கலந்துகொண்டதுடன் சமயத்தலைவர்கள், மாட்ட இளைஞர் சேவை அதிகாரிகள் இளைஞர் கழக தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.