ஒலுவில் துறை முகத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமையை உலமா கட்சி வரவேற்றுள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் அவர்களால் அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
ஒலுவில் துறைமுகம் என்பது தூர நோக்கற்ற திட்டமாகும் என்பதை அன்று முதல் நாம் சொல்லிவருகிறோம். இத்திட்டம் காரணமாக ஒலுவில் பிரதேச மக்கள் தமது காணிகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்தார்களே தவிர எந்த வளத்தையும் காணவில்லை. அதே போல் இத்துறைமுக ஏற்பாடு காரணமாக கல்முனை கரையோர மாவட்ட மீனவர்களும் பல கஷ்டங்களுக்கு முகம் கொடுக்கிறார்கள்.
மேற்படி துறைமுகம் நீக்கப்பட வேண்டும் என கடந்த வருடம் உலமா கட்சியால் அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் அமைச்சரின் இந்த முடிவை உலமா கட்சி பாராட்டுவதுடன் இதற்காக ஒலுவில் மக்கள் சார்பிலும் கல்முனை கரையோர மாவட்ட மீனவர்கள் சார்பிலும் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் ஜனாதிபதிக்கும் நன்றி சொல்கிறோம் என முபாறக் மௌலவி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.