எஸ்.ஹமீத்-
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைமைக் காரியாலய கேட்போர் கூட்டத்தில் ஒரு முக்கிய கூட்டம் நடைபெற்றுள்ளது. முஸ்லிம் சட்டத்தரணிகள் மற்றும் முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட அக்கூட்டத்தில் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜம்மிய்யத்துல் உலமா சபைப் பிரதிநிதிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.
இதன் போது, பொது விடயங்களில் கட்சி பேதம் பாராமல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீனும் பொதுவான விடயங்களில் இனி இணைந்து செயற்படுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் முதற் கட்டமாக, எதிர்வரும் 27 ம் திகதி ரவூப் ஹக்கீமும் றிஷாத்தும் தத்தம் குழுக்களுடன் வில்பத்துப் பிரதேசத்திற்கு நேரடியாக விஜயம் செய்ய உள்ளார்கள். வனப் பாதுகாப்புப் பற்றிய ஜனாதிபதியின் அறிவித்தலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை இவர்கள் இருவரும் சேர்ந்தே சந்தித்து மேலதிக விபரங்களைத் திரட்டி, அதனை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வரவுள்ளனர். அத்தோடு, முஸ்லிம்களின் மீள் குடியேற்ற விடயங்களிலும் இவ்விருவரும் இனி இணைந்து செயற்படுவார்கள்.
முஸ்லிம் அரசியற் தலைவர்களுக்கிடையேயான கருத்து முரண்பாடுகளில் இனிமேல் ஜம்மிய்யத்துல் உலமா சபை தலையிட்டு சுமுக நிலையையும் இணக்கப்பாடுகளையும் ஏற்படுத்தும் என்ற தீர்மானமும் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வில்பத்து விவகாரத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற்றுக் கொள்ள வலியுறுத்துவதென்றும் அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மேலதிக சட்ட நடவடிக்கைகள் தேவைப்படுமிடத்து அதற்கான நடவடிக்கைகளில் முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கம் ஈடுபடுமென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.