எம்.ஜே.எம்.சஜீத்-
இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் 25 வருடகால அரசியல் வாழ்வை சித்தரிக்கும் ‘கிழக்கு வாசல்’ நூல் வெளியீட்டு விழா இன்று (10) காத்ததன்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சபாநாயகர் கரு ஜெயசூரிய பிரதம அதிதியாகவும், ராஜாங்க அமைச்சர் ஏ.எச்எம். பௌசி கௌரவ அதிதியாகவும், கலந்துகொண்டதுடன், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார், அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷ்ஹாக் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர்களான எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ். சுபையிர். மாகாண சபை உறுப்பினர்களான ஜவாத், சிப்லி பாறூக், ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட சபாநாயகர் கரு ஜெயசூரிய உரையாற்றுகையில், தற்போது முழு உலகிலும் ஆங்காங்கே மோதல்கள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதுடன், குண்டுச் சத்தங்களும் கேட்டவண்ணம் உள்ளன. இதேவேளை, எமது நாட்டில் மிகவும் சுமூகமான அரசியல் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
நாம் எல்லோரும் மனிதர்களே அவர்களை தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என்ற பிரிவினையுடன் ஒருபோதும் நோக்கக் கூடாது. தற்போது இந்த நாட்டில் புதியதொரு அரசியல் கலாசாரம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தேர்தல்களில் மக்கள் மனச்சாட்சியுடன் வாக்களிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 1948ஆம் ஆண்டில் இலங்கைக்கான சுதந்திரத்தை தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவர்களும் இணைந்தே பெற்றுக்கொடுத்தனர்.
இந்த நாடு எதிர்காலத்தில் சிங்கப்பூரைப் போலவும் டுபாயைப் போலவும் அபிவிருத்தியில் முன்னோக்கிச் செல்ல வேண்டும் அதற்காக அனைத்து மக்களும் ஒற்றுமைப்பட்டு உழைக்க வேண்டும் என்றார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகள், கல்விமான்கள், புத்திஜீவிகள், உலமாக்கள், ஊடகவியலாளர்கள், முப்படை அதிகாரிகளுக்கும் பிரதம அதிதியின் கரங்களால் கிழக்கு வாசல் நூல் வழங்கி வைக்கப்பட்டது.