நுரைச்சோலை விவகாரம் : சுயவிமர்சனங்களை வீசி, மீண்டும் அதாவுல்லாஹ் (மடல்)

ஊடகப் பிரிவு-
நுரைச்சோலை வீட்டுத் திட்டம் தொடர்பாக அமைச்சர் றிசாட் பதியுத்தீன் அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவினால் எழுதப்பட்டிருந்த வரலாற்று மடலின் உள்ளடக்கத்தினை, அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் அவர்கள் நன்றாகப் புரிந்து கொண்டிருப்பார். ஏராளமான கல்விமான்களும் ஏற்றுக் கொண்டனர். வெவ்வேறு அரசியற் கூடாரங்களில் இருந்து கொண்டாலும் மடலின் முக்கியத்துவத்தினை அக்கட்சிக்காரர்களும் புரிந்திருக்கிறார்கள். மேலும், நம் சமூகம் தொடர்பாக சிந்திக்கின்ற போராளிகளும் இளைஞர் படையினரும் அமைச்சர் அதாஉல்லா அவர்களின் கருத்துகளுக்கு ஆதரவாக வழங்கிய பதிவுகளும், கைகொடுத்துத் தூக்கிவிடுகின்ற எத்தணங்களையும் உற்று நோக்குகின்ற போது உண்மைக்குப் பின்னால் நம் சமூகம் அணிதிரள ஆரம்பித்திருப்பது புலனாகிறது. நம் இளைஞர்களும் விழித்துக் கொண்டதனால் அது மேலும் உறுதி செய்யப்படுகிறது. அல்ஹம்துலில்லாஹ். மகிழ்ச்சியடைகிறேன்.

வேறு எந்த உள்நோக்கங்கத்துடனோ, சின்னத்தனமான சிந்தனைகளினைகளின் அடிப்படையிலோ அம்மடல் வரையப்பட்டிருக்கவில்லை. அப்படி வரைவதாயின் அம்மடலில் தொனியும் அதன் சொற்களும் குறிப்பிட்ட சிலரை தோலுரித்துக் காட்டியிருக்கும். நோக்கம் அதுவாகவும் இருந்திருக்கவில்லை. நுரைச்சோலை விவகாரம் பூதாகரமாக ஆக்கப்படவும் கூடாது என்ற காலத்தின் தேவைக்கு முன்னுரிமையும் கொடுத்தே அது எழுதப்பட்டிருந்தது.

அம்மடலில் 
இவ்வீட்டுத்திட்டம் ஆரம்பித்த அன்றைய நாள் பற்றியோ, அதற்கு சற்று முதலான காலப்பகுதிகள் தொடர்பாகவோ வெளிப்படையாக எதனையும் குறிப்பிடாமல் சுருக்கமாகவும் அடக்கமாகவும் எழுதுவதற்கு முற்பட்டிருந்தேன். அதன் மூலம், அன்று, சம்பந்தப்பட்ட பிரமுகர் தொடர்பாகவும் பத்திரிகையில் வெளிவந்த செய்திகள் தொடர்பாகவும் அடக்கமாக வாசிப்பதுவே என்னுடைய நோக்கமாகவும் இருந்தது. அதுவயே தர்மமாகவும் எண்ணியிருந்தேன்.

என் - மடலினுடைய நோக்கத்தை அறிந்து கொள்ளக்கூடிய ஒருவர், அரசியல் நோக்கத்தை மாத்திரம் கருத்திற் கொண்டதனால் அல்லக்கையாகி, என்னுடைய தூய எண்ணத்தை திரித்துவிட முற்பட்டிருக்கிறார். இதனால் தனக்குரிய தர்ம செயற்பாடுகளிலிருந்தும் விலகி, செயற்பட்டு என்னையும் குற்றவாளியாகக் காட்ட முனைந்திருக்கிறார். அவருடைய வார்த்தைகளில் பணவாடை வீச்சம் அதிகரித்திருந்ததனை நான் மட்டுமல்ல மேலும் பலரும் கண்டு கொண்டனர். இதனால் அவ்விமர்சணத்தில் உயிர் இல்லாமலாகி பிணவாடை வீசுவதையும் நம் மக்கள் நுகரத் தவறவில்லை. இவ் எழுத்தாளனும் அல்லாஹ்வுடைய பயம் அறிந்து திருந்திக் கொள்ளட்டும். தலைவர் அஷ்ரஃப் அவர்களுடைய மரணத்தைத் தொடர்ந்து இவ்வாறான எழுத்துகளுக்கு முகம்கொடுத்து 16 ஆண்டுகளாக பழகிப் போன அதாஉல்லாவிற்கு இதற்கு மாத்திரம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்பதனை என் உடன் பிறப்புகள் நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றனர். இருப்பினும், அன்று ஒரு காலத்தில் நுரைச்சோலையில் நடந்த பிரச்சினையை வைத்து அரசியற் காரணங்களுக்காக என்னைப் பழிவாங்குவதற்கு முற்பட்டார்கள். அவதூறான, அபாண்டமான, இட்டுக்கட்டிய கருத்துக்களை செய்திகளாக்கினார்கள். மனம் தீய்ந்துபோகும் அளவிற்கு அச்செய்திக்கு உரமூட்டியிருந்தார்கள். இச்செய்தியும் இன்று அல்லக்கையினால் என்மீது சுமத்தப்பட்ட சில குற்றச்சாட்டுகளும் இடண்டறக் கலந்து ஒன்றியிருக்கிறது. எனவே அதனை தெளிவுபடுத்துவதே இவ்வறிக்கையின் நோக்கமாகும்.

அன்று இவ் வீட்டுத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட பொழுது திருமதி. பேரியல் அஷ்ரஃப் அவர்கள் என்னை அழைக்கவில்லை என்பதாகவும், அதற்காக கோபமுற்று, குமார் என்கின்ற ஒருவரை உபயோகித்து தீகவாபி பிரதேசத்தில் வசிக்கும் சிங்கள மக்களை உசுப்பேற்றி, முஸ்லிம் கிராமமொன்று உருவாகப் போகிறது என அவர்களை விழிப்பூட்டி, அக்கிராமம் உருவாவதனை தடுக்கின்ற பின்னணியில் அமைச்சர் அதாஉல்லா செயற்பட்டதாகவும், நிதி வழங்கிய சவூதி அரசின் கொடியினை எரிக்க வைக்கவும் செய்தார் என்றாற்போலும் பத்திரிகை ஒன்றிலே செய்தியொன்று வந்திருந்தது. இன்றும் அச்செய்தியே இவ்வல்லக்கையினால் தொடரப்பட்டிருக்கின்றது.

ஈவிரக்கமின்றி ஒருவர் மேல் அபாண்டம் சுமத்துகின்ற இச் செய்தியினை யாராவது அரசியல் காரணங்களுக்காக என்னைப் பழிவாங்குவதற்கு திட்டமிட்டு உருவாக்கி செய்தியாகப் பிரசுரிக்கப்பட்டதா? அல்லது செய்தியாளனே கைக்கூலியாக மாறி கட்டி உரைத்தானா? என்பதனை இன்றும் நான் அறியேன். அன்று, நான் பதுளை மாவட்டத்தில் ஒரு நிகழ்விலே கலந்து கொள்ளச் சென்ற போது அன்றைய தினம் நுரைச்சோலையில் நடைபெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பாக தொலைபேசியின் ஊடாகவே அறியக் கிடைத்தது. நான் பதறிப் போனேன். ஆண்டவனே! நுரைச்சோலை தொடர்பான தீர்விற்கு இதுவும் குந்தகமாக அமைந்து விடக்கூடாது என்று கவலையுடன் அல்லாஹ்வைப் பிரார்த்தித்தவன் நான்.

நுரைச்சோலை காணி விடயம் தொடர்பாக ஏற்கனவே பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்ததனால் அனுபவம் பெற்றவன் என்ற ரீதியில் அது தொடர்பாக இருந்துவந்த சிக்கல்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு அவ்வப்போது விரிவாகக் கூறியிருந்தேன். மாத்திரமன்றி, 125 ஏக்கர் மொத்தக் காணியின் உரித்தும் ஒரு வீட்டுத்திட்டம் அமையப் பெறுகின்றபோது அதில் பங்கெடுக்கின்றவர்களே ஆண்டு அனுபவிக்கின்ற தகமையாளராகும் வகையில் திட்டங்களும் தீட்டப்பட்டிருந்தது. அம்மக்களுக்குத் தேவையான சுயதொழில், மேட்டுநிலப் பயிர்ச் செய்கை, பண்ணை அபிவிருத்திகளையும் அக்காணிப்பரப்பில் மேற்கொள்வதற்காக அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களின் பணிப்பினைப் பெற்று, நகர அபிவிருத்தி அதிகார சபையினால் அதற்கான வரைபடமும் வரையப்பட்டிருந்தது. இது - இக்காணி தொடர்பாக ஆகக்குறைந்த எனது அகக்காட்சிகளுள் ஒன்றாகவும் இருந்தது.

இருப்பினும், 
அன்றையக் காலத்தின் விதியாக நுரைச்சோலைக் கிராம அங்குரார்ப்பணம் 40 ஏக்கர் நிலப்பரப்போடு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டு முதல் விழாவும் கொண்டாடப்பட்டது. எண்ணத்தில் தூய்மை இருந்திருந்தால் அன்றைய நிகழ்ச்சி அவமங்களமாக அமையப் பெற்றிருக்காது. இருப்பினும், முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற இக்காணி தொடர்பான சிக்கல்களின் பின்னணியினை அல்லாஹ்விடமன்றி வேறெங்கு போய்ச் சொல்வது. கல்நடும் விழாவிற்கு நானும் அழைக்கப்பட்ட அக்கனப்பொழுதிலும் கூட, இக்காணி தொடர்பாக அவர்கள் எடுத்திருந்த நிலைப்பாடுகளினால் நம் சமூகம் எதிர்நோக்கவிருக்கும் பிரச்சினைகளை உரியவருக்கு எத்திவைக்கத் தவறியிருக்கவுமில்லை. முதலில் அல்லாஹ்வும் நானும் அவரும் இதனை அறிந்திருக்கிறோம்.

இது இவ்வாறிருக்க 
இவ்விடயம் தொடர்பாக அன்றும் இன்றும் எனக்கெதிராக எழுதப்பட்ட அந்த எழுத்துக்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதனை மற்றையவர்களை விடவும் ஆண்டவன் நன்கு அறிந்து கொண்டவன். இவ்வாறான ஈனச் செயல்களை அதாஉல்லா ஒரு பொழுதும் எண்ணியிருக்கமாட்டார் என்பதனை என்னை அறிந்து கொண்டவர்கள் புரிந்து கொள்வர். அவர்கள் எழுதியிருப்பதைப் போல் நான் தொழிற்பட்டிருந்தால் ஆண்டவன் எனக்குரிய தண்டனையைத் தரட்டும். அதேபோல், என்மீது அபாண்டமாக குற்றம் சுமத்தி கரைபூசுவதற்கு முனைந்தவர்களை அல்லது இட்டுக் கட்டி எழுதியவனை ஆண்டவன் தண்டித்திருப்பான். ஆனாலும், மேலும் அவர்களைத் தண்டித்துவிடாதே என இறைவனிடத்தில் பிரார்த்திக்க மட்டுமே என்னால் முடியும். அவர்களும் திருந்திக் கொள்ளட்டும். சாத்தானுக்கும் முஃமீனுக்கும் உள்ள வித்தியாசத்தினை இவ் அல்லக்கையும் புரிந்து கொள்ளட்டும்.

மற்றவர்கள் நடிப்பதைப் போல் அதாஉல்லாவையும் ஆகாயத்தில் பறக்கச் சொல்கிறார்கள். அதற்கு அதாஉல்லா பேராசைக்காரன் அல்ல. பேராசையினால், பறக்க முற்பட்டு குப்புற விழுந்து முகமுடைந்து போன காட்சிகள் நம் சமூகத்தின் முற்றத்திலே மலிந்து கிடக்கின்றன. வேண்டாம் இப்பேராசை. அதாஉல்லாவின் சின்னம் குதிரைதான். குண்டுச் சட்டி என்ன குறித்த இலக்கு நோக்கி விரைந்து பாயும் சக்தி அதற்குண்டு. அவசியம் ஏற்படுகின்ற நேரத்தில் மாத்திரம் விரைந்து பாய்ந்து இலக்கை அடைந்த காட்சிகளை நம் மக்கள் கண்டிருக்கிறார்கள். இஸ்லாமிய சாம்ராஜ்ய வரலாற்றிலும் குதிரையின் பங்களிப்பு பற்றி முஸ்லிம் உம்மா நன்கு அறிந்திருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.

என் எண்ணங்களையும் செயற்பாடுகளையும் மல்லினப்படுத்தி குளிர் காய்வதற்காக அவர்களால் அறவே அறிந்திருக்க முடியாத 'வட்டமடுவின்' சூழ்ச்சிகள் தொடர்பாகவும் எழுத முற்பட்டிருக்கிறார்கள். வட்டமடுவின் உண்மையான விவசாயிகள் இது தொடர்பான எனது எண்ணத்தினையும் செயற்பாடுகளினையும் நன்கு அறிந்து கொண்டிருப்பதனால் இவர்களுக்குத் தெளிவுபடுத்தப்போய் புறக்குடத்தின் மேல் நீர் ஊற்ற நான் விரும்பவில்லை.

மேலும், அதாஉல்லாவை நன்கு அறிந்திருந்ததனால் இவ்வாறான இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை யாரும் அலட்டியிருக்காத சூழ்நிலையில், நடுநிலையாக எழுதக்கூடியவன் என்று உணரப்படுகின்ற எழுத்தாளன் ஒருவனும் என் மடலுக்கு விமர்சணம் செய்திருந்தான். அவனுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நுரைச்சோலை வீட்டுத்திட்டம் தொடர்பாக மேலும் தகவலைப் பெற்றுக் கொள்ளவேண்டுமென்றோ அல்லது சமூகம் தொடர்பான அதாஉல்லாவின் நிலைப்பாடுகளிலுள்ள சத்தியத்தை வெளியில் கொண்டு வருவதற்காகவோ அல்லது வேறு ஏதோ பல உயர்ந்த எண்ணங்களின் அடிப்படைகளில் நின்று அவ்விமர்சணங்கள் செய்யப்பட்டிருப்பதாக உணர முடிகிறது. காத்திரமான தளம் கிடைக்கின்ற பொழுது அடக்கமாக மேலும் இதுகுறித்த தகவல்களை எடுத்துச் சொல்வதற்கும் ஆயத்தமாகக் காத்திருக்கிறேன்.

மற்றவர்களைப் போலவும் ஆண்டவனால் மன்னிக்கக்கூடிய தனிப்பட்ட சில தவறுகளை அதாஉல்லாவும் புரியக் கூடிய சராசரி மனிதர்களுள் ஒருவன்தான். இருப்பினும், சமூகம் தொடர்பாக தலைவர் அஷ்ரஃப் அவர்களோடு மெய்சிலிர்த்து நிறைந்த உணர்வுகளோடு ஒன்று சேர்ந்த காலம் தொட்டு இன்றுவரையும் நம் மக்கள் தொடர்பான பணிகளில் ஆண்டவன் ஒரு பொய்யைத்தானும் பேச வைக்கக்கூடாது என்ற பிரார்த்தனையோடு செயற்படுபவன். தேர்தல் காலங்களிலும், நம் சமூகம் முகங்கொடுத்த பிரச்சினை வேளைகளிலும் அல்லாஹ்வுக்கு மாற்றம் இல்லாமல் மனச்சாட்சியோடும், சுய கௌரவத்தோடும், சமூகம் உச்சபயன் அடைய வேண்டுமென்ற முதன்மை நோக்கோடும் மாத்திரம் முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் அல்லாஹ்வினுடைய அருளும் நிறையக் கிடைத்திருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ். எல்லா வேளைகளிலும் சுயவிமர்சனம் செய்யப்பட்டிருக்கின்றது. அது உள்ளத்தை தூய்மையாக்கவும் உதவும் என்பதுவும் அவரால் உணரப்பட்டிருக்கிறது.

தீகவாபியின் எல்லைக்குள்தான் நுரைச்சோலையும் அமைந்திருக்கிறது என்ற தவறான கருத்தினை தெளிவுபடுத்த விளைகிறேன். என்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததைப்போல் 662 ஏக்கர் 3 ரூட் 
37 பேச் மாத்திரமான காணிப்பரப்பு, தீகவாபி ரஜமஹா விகாரைக்குச் சொந்தமானது என 1533/8 இலக்க கெசட் பத்திரத்;தின் மூலம் 23.01.2008 அன்று பிரசுரிக்கப்பட்டு வரைபடமும் வரையப்பட்டுள்ளது. அந்தப் பிரதேசத்திற்கும் நுரைச்சோலைக் காணிக்குமிடையில் எந்தவிதமான சம்பந்தமுமில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தீகவாபி அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குள் அமைந்திருப்பதனையும், நுரைச்சோலைக் காணி அக்கரைப்பற்று பிரதேச செயலாளரின் ஆள்புலத்திலுள்ள மேட்டு நிலம் என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

இருப்பினும், அன்றைய காலத்து அரசாங்கத்தின் கீழ் இங்குறாண சீனிக் கூட்டுத்தாபனம் உருவாக்கப்பட்டு இப்பிரதேசங்களில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்பட்ட பொழுது அவர்களுடைய நிர்வாகத் தேவைக்காக அக்காணிகளை வலயங்களாகப் பிரித்திரிருந்தார்கள். இந்த நுரைச்சோலைக் காணி அவர்களுடைய அன்றைய வரைபடத்தில் தீகவாபி வலயத்திற்குள் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் ஒரு காலத்தில் சீனிக் கூட்டுத்தாபனம் முடக்கப்பட்டதனால் அதன் கீழிருந்த கரும்புச் செய்கைக் காணிகள் அவ்வப் பிரதேச செயலாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டு அக்காணிகளுக்கான உரித்துப் பத்திரங்களும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையிலும் இக்காணி அக்கரைப்பற்று பிரதேச செயலாளரின் ஆளுகைக்குள்ளானது என்பதனையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

முஸ்லிம்களுக்கு உரித்தான இக்காணியினை எப்படியாவது கபளீகரம் செய்தாகவேண்டுமென்று தொழிற்பட்ட சம்பிக்க ரணவக்க போன்ற இனவாதிகள் அவர்களுக்கு சாதகமானதாற்போல் பெறப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் அமைச்சுக்களின் செயலாளர்களையும், மாவட்டத்தின் உயர் அதிகாரிகளையும், காணி தொடர்பான அதிகாரம் கொண்ட அரச உத்தியோகத்தர்களையும் தொழிற்படுமாறு வலியுறுத்தப்பட்டது. அக்கருத்துக்கு முரணாக யாராவது செயற்பட்டால் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்தின் கீழ் சிறை செல்ல வேண்டிவரும் என்று பயமும் காட்டப்பட்டது. பல அரசாங்க அதிபர்கள் இங்கிருந்து போவதற்கும் அதுவும் காரணமாக இருந்தது. இதனால் இவ்வீட்டுத்திட்டம் தொடர்பாக எடுக்கப்பட்ட பல எத்தணங்கள் முடிவிலியாக மாறியது. இன்றைய அரசாங்கத்திலும் மேலோங்கிய கையோடு முஸ்லிம் சமூகத்திற்கு அநியாயம் செய்யும் பின்புலத்தில் சம்பிக்க ரணவக்க போன்றோர் தொழிற்படுவதனை என்னை விட நீங்கள்தான் அதிகம் அறிவீர்கள். 

மேலும், எனது மடல் தொடர்பான விமர்சனத்தில் "அமைச்சர் றிசாட் பதியுத்தீன் அவர்கள் கிழக்கு மாகாணத்தில் அரசியல் செய்யக்கூடாது" என்றவாறும், புரியப்பட்டதாக சொல்லப்பட்டிருந்தது. ஜனநாயக அடிப்படையில் யாரும் எங்கும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். இருப்பினும் இன்று, நம் முஸ்லிம் சமூகம் பல நெருக்கடியான சூழ்நிலைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு மாகாணத்திலும் வாழும் முஸ்லிம் மக்கள் ஒன்றுகூடி, மாகாணங்கள் தோறும் '#மக்கள் #அவையங்களை' அமைக்க வேண்டியதன் அவசியம் பற்றியும், அரசியல் தலைமைகள் எவ்வாறான பங்களிப்புக்களை செய்ய வேண்டும் என்பவைகள் பற்றிய எனது அறிக்கையினை வாசித்தோ அல்லது உரையினைக் கேட்டோ அறிந்து கொள்ளும்படி வேண்டிக் கொள்கிறேன். உங்களின் சந்தேகங்களுக்கு நிறைய விடைகளைத் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -