காட்டில் குரங்குகளுடன் வாழ்ந்த சிறுமியும் சில மர்மங்களும்!

டந்த சில வாரங்களுக்கு முன்னம் இந்தியாவின் உத்தர பிரதேசத்தின் அடர்ந்த காடொன்றிற்குள் குரங்குகளோடு தானும் ஒரு குரங்காக வாழ்ந்து கொண்டிருந்த அந்தச் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார். இந்திய- நேபாள எல்லையில், கட்ரீனாத் வன விலங்கு சரணாலய பகுதிக்கு அண்மித்த பகுதியில் வாழ்ந்த கிராம மக்களிற் சிலர் தற்செயலாக அந்தச் சிறுமியைப் பார்த்தனர். முதலில் அது ஒரு குரங்கு என்றே அவர்கள் நினைத்தனர். பின்னர் 'அது குரங்கல்ல... ஒரு மனிதச் சிறுமியே' என்ற முடிவுக்கு வந்து காவல் துறைக்குத் தகவல் தந்தனர்.

அவருக்குப் பத்து அல்லது பதினொரு வயது இருக்கலாம். காவல் துறை அந்தச் சிறுமியை மீட்கச் சென்ற போது அவள் எவ்விதக் கிலேசமுமில்லாமல் குரங்குகளோடு விளையாடிக் கொண்டிருந்தாள். அவளது உடலில் ஆடைகள் எதுவும் இருக்கவில்லை.

காவல்துறை அந்தச் சிறுமியை அணுகிய போது, குரங்குகள் சினத்துடன் சீறின. காவல்துறையினரைத் தாக்கின. அந்தச் சிறுமியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு விட மறுத்தன. ஆயினும் காவல்துறையினர் குரங்குகளோடு போராடி அந்தச் சிறுமியை மீட்டனர். இந்தப் போராட்டத்தில் சிறுமியின் உடலிலும் காயங்கள் ஏற்பட்டன.

நீளமான அழுக்குத் தலை முடியும் நீண்ட நகங்களும் அந்தச் சிறுமிக்கு இருந்தன. அவள் எந்த மொழியிலும் பேசவில்லை. மாறாகக் குரங்குகளைப் போலவே சைகைகள் செய்தாள். இடையிடையே பெருங்குரலில் கத்தவும் செய்தாள்.

குரங்குகளிடமிருந்து அவளை மீட்ட காவல் துறையினர் அவளை நேரடியாக மருத்துவ மனைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். அச்சிறுமியை அக்கறையோடு கவனித்துக் கொண்ட மருத்துவர்கள் ஆரம்ப சிகிச்சைகள் அளித்தனர். பரந்த இந்த வெளியுலகத்தின் அற்புதங்களை அவளுக்குக் காட்ட வேண்டுமென்றும் அபிப்பிராயம் தெரிவித்தனர்.

மாவட்ட நீதிபதி மருத்துவ மனைக்கு வந்து அந்தச் சிறுமியைப் பார்த்தார். பின்னர் அவளுக்கு 'வன துர்கா' என்ற பெயரையும் அவர் சூட்டினார்.

தற்போது சிறுமியின் நிலை நன்றாக இருப்பதாகச் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுமிக்கு மனநலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

யார் இந்தச் சிறுமி? எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவள்? இவளது பெற்றோர்கள் யார்? காட்டிற்குள் வாழும் நிலை எப்படி ஏற்பட்டது? எவ்வளவு காலமாகக் காட்டினுள் வாழ்ந்திருக்கிறாள்? என்பது போன்ற மர்மங்களுக்கு இன்னமும் விடைகளில்லை. ஒருவேளை விடைகளற்ற மர்மங்களாகவே இவை நெடுங்காலம் இருந்துவிடக் கூடும்.
எஸ்.ஹமீத்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -