கடந்த சில வாரங்களாக ஊடக செய்திகளாகவும், மட்டக்களப்பு தொடக்கம் தேசியம் வரை பேசும் பொருளாக இருந்து வருகின்ற கல்குடா பிரதேசத்தில் நிருமாணிக்கப்படுகின்ற மதுபான உற்பத்திசாலையினை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும், அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கல்குடா கிளை நேற்று 04.04.2017 செவ்வாய்கிழமை கல்குடா உலமா சபை கட்டத்தில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் பகிரங்கமாக தெரிவித்தது.
கல்குடா கல்குடா ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் மெளலவி ஏ.எல்.எம்.இஸ்மாயில் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் நிகழ்வில் கல்குடா ஸக்காத் நிதியத்தின் தலைவர் ஏ.பி.எம்.முஸ்தபா மெளலவி, கல்குடா உலமா சலையின் பிரதி தலைவரும் சிறாஜியா அரபு கல்லூரியின் அதிபருமான எம்.எம்.தாஹிர் மெளலவி, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர்மொஹம்மட் மெளலவி, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகத்தர் எஸ்.எச்.அரபாத் ஆகியோர்கள் குறித்த மதுபான உற்பத்தி சாலைக்கு எதிராக தங்களது கருத்துக்களையும், கண்டனங்களையும் ஊடகவாயிலாக தெரியப்படுத்தினர். அத்தோடு கல்குடாவில் உள்ள இஸ்லாமிய அமைப்புக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், பள்ளிவாயல்கள் நம்பிக்கையாளர் சலை தலைவர்கள் என பலரும் ஊடகவியலாளர் சந்திப்பிற்கு சமூகமளித்திருந்தனர்.
மேலும் இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் அதிமேதகு ஜனாதிபதிக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், பாராளுமன்ற அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு பகிரங்கமாக வேண்டுகோள் விடுப்பதற்காகவே குறித்த ஊடகவியலாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தனர். பிரதேசத்தில் மக்கள் மதுபானமற்ற சமூகமாக வாழவேண்டும் என்ற தூர நோக்கு சிந்தனையின் அடிப்படையில் நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு பாடுபடுகின்ற நிலையில் குறித்த மதுபான உற்பத்திசாலை ஆரம்பிக்கப்பட்டிருப்பதானது வருங்கால சமூதயத்தினை மதுபானத்தில் மூழ்கவைத்து அவர்களுடைய வாழ்க்கையை சீரளிப்பதற்கு காரணமாக அமைந்து விடும் என்பதற்காக குறித்த விடயத்தை கச்சிதமாகவும், வன்மையாகவும் கண்டிப்பதோடு தடுத்து நிறுத்துமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.
மதுபான உற்பத்திசாலைக்கு எதிராக கல்குடா ஜம்இய்யத்துல் உலமா சபை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் முழு நேர வீடியோ இங்கே எமது வாசகர்களுக்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.